ஆர்வமும், அறிவும் போதும் மேதையாக!

அறிவு என்ற ஒன்று தான் உலகின் மிக சிறந்த ஆயுதம். கல்வி என்பது உலகளவில் பள்ளிகளுக்கு சென்று தான் கற்க முடியும், அங்கு தான் கல்வி கிடைக்கும் என்பது பலரது மூட நம்பிக்கை. இந்த மூட நம்பிக்கையை முற்றிலும் பிடுங்கி எரிந்து இயற்கையை கொண்டும், நூல்களை கொண்டும், தன் அறிவு மற்றும் ஆர்வத்தை கொண்டு மேதையாக முடியுமா?. (அறிவு என்பது கேள்வி ஞானம்)

3 ஆம் வகுப்பு படித்தவர் கல்லூரி முதல்வர் ஆக முடியுமா?. ஒரு துறையில் இருந்து வேறொரு துறைக்கு சென்று அதில் வெற்றி பெற முடியுமா?. அதுவும் பலத்துறைகள் சென்று அதிலும் முன்னோடியாக முடியுமா?. அப்படி ஆர்வம் ஒன்றே போதும், அறிவை வளர்த்து கொள்ளலாம் என்று பள்ளி செல்லாத மேதாவியாக, இந்தியாவின் எடிசனாக, இன்று வரை இவருக்கு மாற்றாக இதுவரை யாரும் வரவில்லை. இன்னொரு எடிசனாக இவர் வந்து விட்டார். ஆனால், இன்னொரு ஜி.டி.நாயுடு யாரும் வருவார்களா? சந்தேகம் தான்.

மேலே சொன்னது போல இவர் 3 ஆம் வகுப்பு வரை தான் படித்துள்ளார். மேலே படிக்க ஆர்வம் இல்லை. ஆனால், படைப்புகள் படைக்க அளவில்லா ஆர்வம் இருந்தது. படைப்புகள் படைத்தார், படைப்பாளர்களை உருவாக்கினார். அவரது காலத்தல் ரேடியோ மட்டும் தான் இருந்தது. அதுவும் வெளிநாடுகளிருந்து இறக்குமதி தான் செய்ய வேண்டும். காரணம் இங்கு இதற்கான உற்பத்தி நிறுவனம் இல்லை. அதனால் இதை உற்பத்தி செய்ய முடிவெடுத்து, இதை பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் இந்த ரேடியோ பெட்டியை வாங்கி அதனை முழுவதும் கழற்றி அதன் இயக்கத்தை பற்றி தெரிந்து கொண்டு 70 ரூபாய் செலவில் இவரே இதனை செய்து முடித்தார். இவர் எதை எடுத்தாலும் அதனை பிரித்து மீண்டும் சேர்த்து விடுவார். ஒரு பொருளை பிரிப்பது சுலபம். ஆனால், பிரித்ததை மீண்டும் ஒன்று சேர்ப்பது என்பது கடினம். ஆனால், இதனை இவர் மிகவும் சுலபமாக செய்துவிடுவார்.

ஆரம்பகாலத்தில் மோட்டார் தொழில்சாலையில் பணி புரிந்து வந்தார். அதன் நுட்பங்களை ஆழ படித்து தெரிந்து கொண்டார். அதன் பிறகு அவருக்கு பணியாளராக வேலைபார்க்க மனமில்லாமல் வெளியே வந்துவிட்டார். இவர் சம்பளத்தில் சேர்த்துவைத்த பணத்தையும், நண்பர்களிடம் கடனும் பெற்று திருப்பூரில் ஒரு பருத்தி தொழில்சாலையை ஆரம்பித்தார். இதில் நல்ல முனேற்றமும் பெற்றார். இதனை பம்பாய்க்கு விரிவுபடுத்த நினைத்து மொத்தத்தையும் இழந்தார்.

திரும்ப வந்த இவர் மோட்டார், லாரி, பேருந்து, போக்குவரத்து துறை சார்ந்து தொழிலை இயக்கிக்கொண்டிருந்த ஸ்டேன்ஸ் துரையிடம் வேலைக்கு சேர்ந்தார். இவரது திறனை அறிந்த ஸ்டேன்ஸ் இவருக்கு வேலையுடன் ஒரு பேருந்தையும் கடனுக்கு வழங்கி இதனை ஒரு நாள் வரும் வருவாயில் பங்கினை மட்டும் கொடுத்து கடனை கழித்து விட சொல்லியிருக்கிறார். அதேபோல் அவரும் அந்த பேருந்தினை சொந்தமாகியுள்ளார். இந்த பேருந்தினை பொள்ளாச்சி முதல் பழனி வரை இயக்கியுள்ளார். இதற்கு சில நண்பர்களுடன் சேர்ந்து யுனைடெட் மோட்டர்ஸ் என்று பெயர்வைத்து நடத்தியுள்ளார். 1920 மற்றும் 1933 க்கு இடையில் இது 280 பேருந்துகளாக வளர்ந்தது. 

இதில் முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார்.

மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.

எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க (அதிர்வு சோதிப்பான்) Vibrator Tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் நாயுடு. இவர் தான் முதன் முதலில் மின்சார ஷேவிங் ரேஸரை உருவாக்கினார். முதல் மின்சார வாக்குப்பதிவு இயந்திரத்தை தயாரிப்பதில் அவர் முன்னோடியாக இருந்தார். ஜி.டி. நாயுடு பணம் சம்பாதிப்பதை விட புதுமைகளில் அதிக ஆர்வம் காட்டினார். அவர் இந்தியாவில் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரியை நிறுவினார். பின்னர், அவர் சர் ஆர்தர் ஹோப் கல்லூரியை நிறுவினார், பின்னர் அது தற்போதைய அரசு தொழில்நுட்பக் கல்லூரியாக உருவெடுத்தது.

இவரது சாதனை பட்டியல் மிகவும் பெரியது. ஆனால் இவர் வாழ்ந்த பொழுது இவரை யாரும் பொருட்படுத்தவில்லை. இவரது கண்டுபிடிப்புகளுக்கு தகுந்த மதிப்பு அளிக்கவில்லை. கோவையில் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய பங்கினை அளித்தவர்.கல்வி மட்டுமே ஒரு மனிதனை முழுமையாக்காது, அதாவது அறிவும் ஆர்வமும் தான் ஒரு மனிதனை முன்னேற வைக்கிறது என்பதற்கு இவரே முழுமையான உதாரணம். யாரும் படிக்கவில்லை என்றால் யாராலும் முன்னேற முடியாது. முதலில் படித்தாலும் படிக்கவில்லையென்றாலும் உங்கள் துறையில் நீங்கள் முன்னேற அதில் முதலில் ஆர்வம் வேண்டும். அதனோடு சேர்ந்த அறிவும் வேண்டும். அறிவு மட்டும் இருந்தலும் போதாது, ஆர்வம் மட்டும் இருந்தாலும் போதாது. அறிவையும் ஆர்வத்தையும் நாம் தான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.