சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020

சனி பெயர்ச்சி 2020 திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நடைப்பெற்றுள்ள இந்த தருணத்தில், சனி பகவானின் பயோடேட்டா அதாவது சனி கிரகத்தின் அமைப்பு விபரம், எந்தெந்த ராசிக்கு எப்படிப்பட்ட பலன்களை தருகிறார் என்பதைப் பார்ப்போம்…

சனி பயோடேட்டா

ஜோதிடத்தில் சனி மகரம், கும்பத்துக்கு அதிபதி மேஷத்தில் உச்சம், துலாமில் உச்சம் பெற்றவர். சூரியன், சந்திரன், செவ்வாய் பகைவர்கள். புதன், சுக்கிரன், ராகு, கேது நண்பர்கள். குரு சமமானவர்.

3, 7,10 பார்வை உடையவர். ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் தங்குவார். இவரது தசை 19 ஆண்டுகள் நடக்கும்.
வாகனம் – காகம்
திசை – மேற்கு
தானியம் – எள்
மலர் -கருங்குவளை
ரத்தினம் – நீலம்

ஒருவரது ராசிக்கு (சந்திரன் உள்ள வீட்டில் இருந்து)
4-ல் சனி வந்தால் – அர்த்தாஷ்டமச் சனி
7ல் சனி வந்தால் – கண்ட சனி
8ல் சனி வந்தால் – அஷ்டம சனி

சனிப்பெயர்ச்சி பலன் 2020-2023 சுருக்கம்

மேஷம் – 10 ஆம் இடமான ஜீவன ஸ்தானம் – கர்ம சனி – சனியின் பாதிப்பு குறைவு
ரிஷபம் – 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானம் – பாக்கிய சனி – அஷ்டம சனி முடிவு
மிதுனம் – 3 ஆம் இடமான அஷ்டம சனி ஸ்தானம் – அஷ்டம சனி ஆரம்பம்
கடகம் – 7ஆம் இடமான சப்தம ஸ்தானம் – கண்ட சனி – கண்டக சனி ஆரம்பம்

சிம்மம் – 6 ஆம் இடமான ரண ருண ஸ்தானம் – ரோக சனி- சனியின் பாதிப்பு குறைவு
கன்னி -5ஆம் இடமான பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் – பஞ்சம சனி – அர்த்தாஷ்டம சனி முடிவு
துலாம் – 4 ஆம் இடமான சுக ஸ்தானம் – அர்த்தாஷ்டம சனி ஆரம்பம்
விருச்சிகம் – 3ஆம் இடமான தைரிய வீரிய ஸ்தானம் – சகாய சனி – ஏழரை சனி முடிவு

தனுசு – 2ஆம் இடமான தன, வாக்கு, குடும்ப ஸ்தானம் – பாத சனி ஆரம்பம்
மகரம் – 1ஆம் இடமான ஜென்ம ஸ்தானம் – ஜென்ம சனி ஆரம்பம்
கும்பம் -12ஆம் இடமான அயன சயன போக ஸ்தானம் – விரய சனி ஆரம்பம்
மீனம் – 11 ஆம் இடமான லாப ஸ்தானம் – சனியின் பாதிப்பு குறைவு.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு சனி பகவான் தொழில் மற்றும் லாப ஸ்தான அதிபதி. கர்ம ஸ்தான அதிபதி தனது வீடான பத்தாவது வீட்டில் கர்ம சனியாக அமர்கிறார். நல்ல வேலை கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.

சனிபகவானின் பார்வையும் உங்களுக்கு சாதகமாகவே இருப்பதால் சந்தோஷங்கள் நிறைந்த சனிப்பெயர்ச்சியாகவே உள்ளது. புதிய வேலைகளை மே மாதத்திற்கு முன்பாக ஒத்துக்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அதே நேரம் சில தோல் நோய்கள் அலர்ஜி தொடர்பான நோய்கள் வரலாம் எச்சரிக்கையாக இருங்கள்.

குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் சந்தோஷங்கள் நிறைந்த வருடமாகவே இருக்கும். சனிக்கிழமை மாலை நேரத்தில் சனிபகவானுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் பாதிப்புகள் நீங்கி நல்லதே நடக்கும்.

பரிகாரம்:

10ல் சனி வருவதால் எந்த வேலை பார்த்தாலும் அவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. வேலை இடத்தில் உணர்ச்சி வசப்பட்டு பேசாமல் இருந்தாலே போதும், நன்மைகள் நடக்கும். சக ஊழியர்களிடன் கவனம் தேவை. மேஷம் ராசி அதிபதி செவ்வாய். அதனால் அடிக்கடி முருகன், ஆஞ்சநேயர் வழிபாடு நம்பிக்கையைத் தரும்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பாக்ய சனியாக ஒன்பதாம் வீட்டில் அமர்கிறார் சனிபகவான். இதுநாள் வரை அஷ்டம சனியால் சஞ்சலப்பட்டு வந்த உங்களுக்கு இனி பாக்ய சனி பலவித சந்தோஷங்களை தருவார் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

ஒன்பதாம் இடம் அப்பாவின் உடல் நலத்தை பதம் பார்க்கும். ரிஷபம் ராசிக்காரர்கள் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள். புதிய வேலைகள் கிடைக்கும் புரமோசன் கிடைக்கும். நோய்கள் நீங்கும். இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட வேண்டாம்.

நல்ல வேலை கிடைத்தபிறகு இருக்கிற வேலையை விடுவதைப்பற்றி யோசியுங்கள். சனிக்கிழமைகளில் சனி மந்திரத்தை கூறி வழிபடுங்கள். பண விஷயங்களில் மிக கவனம் தேவை. வயிறு சார்ந்த பிரச்சினைகள் வரலாம். ஜூலை 17வரை மிக கவனமாக இருக்க வேண்டும்.

பரிகாரம்:

குல தெய்வ வழிபாடும், பெண் தெய்வ வழிபாடும் மிக நன்மைகள் தரும். இரும்பு சத்துக்கள் கொண்ட எள் தானம் செய்தால் நன்மைகள் உண்டாகும்.

​மிதுனம்

8ல் சனி வருவதால் அதாவது அஷ்டம சனி என்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குடும்ப ரீதியாக பாதிப்புக்கள் ஏற்படலாம். பயணங்களில் மிக கவனமாக இருப்பது அவசியம். புத்திரர்களும் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.

சற்று குழப்பங்களுடன் தான் இரண்டரை ஆண்டுகள் செல்லும். பேச்சு, செயல் மூலமாக பல சிக்கல் உண்டாகும். உங்களின் தவறையும், ஒழுக்கமின்மையையும் திருத்துவதாக இந்த சனிப்பெயர்ச்சி அமையும். தங்களின் செயலில் கவனமாக செயல்பட்டாலே போதும்.

செய்யும் தொழிலில் இடமாற்றம், கடன் தீருதல், கணவன் – மனைவி ஒற்றுமை, பண வரவு என்ற பல நற்பலன்களும் கிடைக்கும். சனி செல்லும் போது நன்மையை கொடுத்துவிட்டுத் தான் செல்வார் கவலை வேண்டாம்.

பரிகாரம்

குறிப்பாக மிருகசீரிடம் நட்சத்திரத்தினர் வழிபாடுகள் மூலமாக உங்களை நல்வழிப்படுத்திக் கொள்ளலாம். தினமும் ஒரு அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். திண்டிவனம் – பாண்டிச்சேரி சாலையில் பஞ்சவடி ஆஞ்சநேயர் திருக்கோயிலுக்கு சென்று வருவது நல்லது. அனுமன் வழிபாடு நன்மையை தரும். ஆடி மாதம் வரை மிதுன ராசியினர் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

கடகம்

கடகம் ராசிக்காரர்களே உங்களுக்கு இதுநாள் வரை ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் இனி ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகிறார். இது கண்டச்சனி காலமாகும்.

சனிபகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்க ராசியை பார்க்கிறார். வேலைப்பளு அதிகமாகும். உங்களுடைய ஆரோக்கியத்திலும் உங்க குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள்.

குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் வேலை செய்யும் இடத்திலும் கவனமாக இருங்க. சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்

பரிகாரம்:

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆஞ்சநேயர், சனி பகவானை தொடர்ந்து வணங்கி வர நன்மை தரும். யாரெல்லாம் சுறுசுறுப்புடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு சனி பகவான் நன்மையை தான் செய்வார். அதனால் சோம்பேறித்தனத்தை நீக்க வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சந்தோஷம் தரக்கூடியதாக உள்ளது. உங்க ராசிக்கு ஆறு மற்றும் ஏழாம் வீட்டு அதிபதி சனிபகவான். சனி கோச்சாரப்படி 3,6,11ஆம் வீடுகளில் சஞ்சரிக்கும் போது நிறைய நன்மைகளை செய்வார்.

கடந்த சில ஆண்டுகாலமாகவே சனிபகவானால் சங்கடங்களை சந்தித்து வந்தீர்கள். இனி சனிப்பெயர்ச்சி உங்களுக்கு நிறைய சந்தோஷங்களைத் தரப்போகிறார். உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உங்க வேலையில் திடீர் புரமோசன் கிடைக்கும். வேலையில் இடமாற்றம் ஏற்படும். வீடு வாங்கும் யோகம் வரும்.

இது விபரீத ராஜயோக காலம் என்பதால் புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். உங்க ராசியின் மீது குருவின் பார்வை விழுவதால் நிறைய சந்தோஷங்கள் கிடைக்கும்.

பரிகாரம்:

சனிக்கிழமைகளில் கருப்பு உளுந்தை வேகவைத்து சனிபகவானுக்கு படைத்து தானம் செய்யுங்கள். சனிபகவானுக்கு விளக்கேற்றி வழிபட்டு ஏழுமுறை வலம் வர நன்மைகள் நடைபெறும். உப்பு அதிகம் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

 

கன்னி

சனிபகவான் உங்க ராசிக்கு ஐந்து மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதி. இப்போது பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் அமரப்போகிறார். அர்த்தாஷ்டம சனியால் உங்க உடல்நலமும் உங்க தாயாரின் உடல் நலமும் பாதிக்கப்பட்டிருந்தது.

இனி சனிபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்க ராசிக்கு இரண்டாம் வீடு, லாப ஸ்தானம், களத்திர ஸ்தானங்களின் மீது விழுகிறது. இந்த சனிப்பெயர்ச்சியால் உங்களின் பிள்ளைகளின் மீது அதிக அக்கறை காட்டுங்கள்.

பிசினசில் அதிக முதலீடுகளை செய்ய வேண்டாம். எந்த முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம்:

சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளில் விரதம் இருந்து சனிபகவானை வணங்குங்கள் நல்லதே நடக்கும். அனுமன், சனீஸ்வரர் வழிபாடு நன்மையை தரும். கடவுளை வணங்குவது, நியாயமாக நடந்து கொள்ளுதல், எந்த ஒரு வேலை செய்தாலும் முழு சிரத்தையுடன் செய்வது நல்லது.

​துலாம்

துலாம் ராசியில் சனிபகவான் உச்சமடைபவர். நான்காம் வீட்டில் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பேச்சில் கவனமாக இருங்கள்.

சனியின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. வேலை செய்யும் இடத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சோம்பேறித்தனத்தை விடுங்கள். பிரச்சினைகளை சமாளிக்க விட்டுக்கொடுத்து போங்க ஈகோ வேண்டாம்.

கவனமாக எந்த வேலையையும் செய்யுங்கள் நல்லதே நடக்கும். உங்களின் நடுவிரலில் தங்க மோதிரம் அணியுங்கள் நல்லதே நடக்கும்.

பரிகாரம் :

சக ஊழியர்களிடம் மேலதிகாரிகளைப் பற்றி தவறாக பேசாமல் இருப்பதே நன்மையை தரும். தண்ணீர் அதிகம் குடிப்பது நல்லது. இரும்பு, புரத பற்றாக்குறை இருக்கும். நரசிம்மர் வழிபாடு மிகவும் நன்மையை தரும்.

​விருச்சிகம்

சனிபகவான் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். ஏழரை சனி முடிவுக்கு வருகிறது. கடந்த ஏழரை ஆண்டுகாலமாக கஷ்டப்பட்டு கவலைப்பட்டு வந்த நீங்கள் இனி சந்தோஷத்தை அனுபவிக்கப் போகிறீர்கள்.

உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் முடிவுக்கு வரப்போகிறது. நோய்கள் தீரப்போகிறது. கடன் பிரச்சினைகள் தீரும் உங்களை விட்டு விலகிய சொந்த பந்தங்கள் உங்களை நாடி வரப்போகிறார்கள்.

நமக்கு நல்ல காலமே வராதா? என்று ஏங்கித்தவித்த உங்களுக்கு இனி நன்மைகள் நடக்கப் போகிறது. நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
பரிகாரங்கள் :

சனிபகவானை சனிக்கிழமை சனி ஹோரையில் விளக்கேற்றி வழிபடுங்கள் நல்லதே நடக்கும். குரு பகவான் வழிபாடு அவசியம். குரு ஸ்தலமான திருச்செந்தூர் முருகன் சென்று வழிபாடு செய்துவருவது அவசியம். உணர்ச்சிவசப்படாமல் இருந்தாலே அனைத்தும் நன்மை உண்டாகும். பேச்சில், செயலில் நிதானம் தேவை.

​தனுசு

சனிபகவான் உங்க ராசிக்கு இரண்டு மற்றும் மூன்றாம் வீட்டிற்கு அதிபதி. சனிபகவான் ஜென்ம சனியாக சஞ்சரித்து வந்தார் இனி பாத சனியாக இரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார்.

இந்த சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு சில மாற்றங்கள் ஏற்படப்போகிறது. ஏழரை சனி காலத்தில் பாக்கி இன்னும் இரண்டரை ஆண்டு காலம் மிச்சம் இருக்கிறது. கவலைப்பட வேண்டாம் உங்க தலைமேல் அமர்ந்திருந்த சனி பகவான் இனி உங்க பாதத்திற்கு வந்து விட்டதால் பதற்றப்பட வேண்டாம் சந்தோஷமாக குடும்பத்தினருடன் பொழுதை கழிப்பீர்கள்.

மனதில் உற்சாகம் பிறக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் நேரங்கெட்ட நேரத்தில் எதையும் சாப்பிட வேண்டாம் உங்கள் மனநிலையில் சின்னச் சின்ன குழப்பங்கள் வரலாம். அந்த குழப்பங்கள் தீர சனிக்கிழமைகளிலும் ஞாயிறு கிழமைகளிலும் ராகு காலத்தில் கால பைரவரை வணங்குங்கள்.

பரிகாரம்

ஏழரை சனி முடிந்து போகும் போது நன்மை உண்டாகும். தயிர் சாதத்தில், எள் கலந்து, பெருமாள் கோயிலில் மதிய வேளையில் தானம் செய்வது நல்லது.

​மகரம்

மகரம் ராசிக்காரர்களே உங்களுக்கு ஏழரை சனியின் இரண்டாவது பாகமான ஜென்ம சனி காலம் ஆரம்பமாகிறது. சனிபகவான் உங்க ராசி நாதன், இரண்டாம் வீட்டிற்கு அதிபதி. ராசி நாதன் உங்க ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார்.

ஜென்ம சனியால் சங்கடம் வருமோ என்று பயப்பட வேண்டாம். சனிபகவான் நீதிமான் என்பதால் தவறு செய்பவர்களை மட்டுமே தண்டிப்பார். பொதுவாகவே சனிபகவான் தனது சொந்த வீட்டுக்காரர்களை எதுவும் செய்ய மாட்டார் எனவே தைரியமாக இருங்கள். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள்.

சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். சிலருக்கு இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் வெளிநாடு செல்லும் யோகம் வரும். பணவரவு அபரிமிதமாக இருக்கும். கடன் கிடைக்கிறதே என்று இஷ்டத்திற்கு கடன் வாங்க வேண்டாம். பிசினஸ்ல அகலக்கால் வைக்காதீங்க. சொந்த வீடு, வண்டி வாகனம் வாங்குவீர்கள் நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும்.

பரிகாரம் :

சனிக்கிழமைகளில் கறுப்பு ஆடைகளை அணியுங்கள் நல்லதே நடக்கும். சோம்பேறித்தனம் தவிர்த்தால் மிக நன்மை உண்டாகும். இறை வழிபாடு நன்மை தரும்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களே உங்க ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். சனிபகவான் உங்க ராசிக்கும் 12ஆம் வீட்டிற்கும் அதிபதி. விரைய ஸ்தான அதிபதி விரைய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோகம்.

இது நாள் வரை லாப சனியாக இருந்தாலும் சில சங்கடங்களை கொடுத்து வந்தார். இனி ஏழரை சனியாக இருந்தாலும் உங்க ராசிக்கு அதிபதி என்பதால் நன்மையே செய்வார் சனிபகவான். வேலை செய்யும் இடத்தில் நீங்க அதிக வேலைப்பளு இருந்தாலும் சோம்பேறித்தனம் எதுவும் இல்லாமல் வேலையை செய்யுங்கள்.

உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். குருவின் சஞ்சாரம் லாப ஸ்தானத்தில் இருப்பதால் செய்யும் தொழிலில் லாபம் வரும். அபரிமிதமான பணவரவினால் வீடு வண்டி வாகனம் வாங்குவீர்கள்.

 பரிகாரம் :

சனி காயத்ரி மந்திரத்தை வணங்குங்கள் நல்லதே நடக்கும். தன்னம்பிக்கை சார்ந்த கதைகள் படித்தல், குழந்தைகளுடன் விளையாடுதல், சனிக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் நன்மையை தரும். ஜீவ சமாதிக்கு சென்று வழிபட்டு வர நன்மை உண்டாகும். சனிக்கிழமைகளில் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று ஈசனை வணங்கி அனைத்து தெய்வங்களையும் வணங்கிய பின்னர் சனீஸ்வரனை வணங்குவது அவசியம். நவகிரக சன்னதியாக இருந்தால் 8 முறை வலம் வந்து வணங்குவது நல்லது. வாரந்தோறும் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஏற்படும்.

​மீனம்

சனிபகவான் உங்க ராசிக்கு லாப ஸ்தானம் மற்றும் விரைய ஸ்தான அதிபதி. சனிபகவான் உங்க வீட்டிற்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சாரத்தினால் உங்களுக்கு செய்யும் தொழிலில் லாபம் வரும்.

புதிய நல்ல வாய்ப்புகள் உங்கள் வீட்டின் கதவை தட்டப்போகிறது வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்க உடல் ஆரோக்கியம், பெற்றோர்களின் உடல் ஆரோக்கியமும் அற்புதமாக உள்ளது.

இந்த சனிப்பெயர்ச்சியை நல்லவிதமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் நல்லதே நடக்கும்.

பரிகாரம்:

மீன ராசியினர் இருக்கும் வேலை விடாமல் இருத்தலே நல்லது. ஏழைகள் முதியவர்களுக்கு தானம் கொடுங்கள். சனிபகவான் சந்தோஷப்படுவார். புரட்டாசி மாதம் வரை மிக கவனமாக இருப்பது நல்லது.