வெங்காயத்தை திருடிச் சென்ற கொள்ளையர்கள்!

நாடு முழுவதிலும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில், கடும் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. வெங்காய உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மழையால் விளைச்சல் பாதிக்கபட்டதின் விளைவே இந்த விலை உயர்விற்கு காரணம் என வியாபாரிகள் கூறுகின்றனர். வெங்காயத்தின் விளைச்சல் பாதிப்பால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வெங்காய தட்டுப்பாட்டை போக்க எகிப்தில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், கொல்கத்தாவில் கடையொன்றில் மர்ம நபர்கள் புகுந்து வெங்காய மூட்டைகளை திருடி சென்றுள்ளனர். அக்ஷய தாஸ் என்பவர் மேற்கு வங்கத்தின் சுடஹட்டா பகுதியில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த செவ்வாய்கிழமை திருடர்கள் கடைக்குள் புகுந்து கல்லாப்பெட்டியை திருடாமல், வெங்காய மூட்டையை திருடி சென்றது அவருக்கு அதிர்ச்சியை தந்தது. அந்த வெங்காய மூட்டையின் மதிப்பு சுமார் 50,000 ரூபாய் இருக்கும் என்றார் கடைக்காரர். மேலும் இஞ்சி, பூண்டு ஆகியவற்றையும் திருடி சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.