என்.ஜி.பி பள்ளி விளையாட்டு விழா

என்.ஜி.பி பள்ளியில் ஏழாம் ஆண்டு விளையாட்டுவிழா ‘விகர் 19’ நடைபெற்றது. இவ்விழாவிற்கு கோவை மருத்துவ மையத்தின் கதிரியக்கத் துறைத் தலைமை மருத்துவர் மேத்யூ செரியன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி, விழாவினைத் தொடங்கி வைத்ததோடு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.  பள்ளியின் முதல்வர் பிரீத்தா பிரகாஷ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவிற்கு கோவை மருத்துவ மையத்தின் தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி அவர்கள் தலைமையேற்று நடத்தியதோடு, விளையாட்டின் முக்கியத்துவம் பற்றியும், இன்றைய துரித உலகில் உடற்பயிற்சியின் அவசியம் பற்றியும் மாணவர்களுக்கு அழகாக விளக்கினார். பள்ளியின் தாளாளர் டாக்டர் தவமணி பழனிசாமி அவர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

2019-20 அம்  ஆண்டிற்கான விளையாட்டு அறிக்கையை மாணவர் தலைவர் ப.நிஷாந்த் வாசித்தார். மாணவர்களின் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. நிகழ்வின் தொடர்ச்சியாக அமைந்த, மழலையர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் விளையாட்டு நிகழ்வு சார்ந்த பயிற்சி நடனங்கள் நடைபெற்றன. விழாவின் தலைவர் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். இறுதியில் அதிக மதிப்பெண் புள்ளிகளைப் பெற்ற  சஃபையர் அணி கோப்பையைக் கைப்பற்றியது. விழாவைக் காண வந்திருந்த பெற்றோர்களுக்கும் ஆண், பெண் என இரு பிரிவாக விளையாட்டுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் இவ்விழாவில் கோவை மருத்துவ மையத்தின் அறங்காவலர் டாக்டர் அருண் பழனிசாமி, என்.ஜி.பி கல்வி நிறுவனங்களின் பாடத்திட்ட இயக்குநர் மதுரா பழனிசாமி, என்.ஜி.பி கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலர் ஓ.டி.புவனேஸ்வரன், தலைமை நிர்வாக அதிகாரி நடேசன், பள்ளியின் முதல்வர் பிரீத்தா பிரகாஷ், பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதிகா, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.