சட்டக்கல்லூரிகளில் சட்டத்தமிழ் படிக்க வேண்டும் –  முன்னாள் நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் கோரிக்கை

தமிழக சட்டக் கல்லூரிகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக கொண்டுவர வேண்டும் என்ற முன்னாள் நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார் சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி .

தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் சார்பில் ஆட்சி மொழி சட்ட வார விழா டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் உறுப்பினர்களான முன்னாள் மாவட்ட நீதிபதி  முகமது ஜியாவுதீன், தமிழ்நாடு அரசின் சட்டத்துறையின் முன்னாள் செயலாளர் கோபி ரவிக்குமார், வழக்கறிஞர் வில்ஸ்டோ தாஸ்பின் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் ஆணைய உறுப்பினர் நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேசுகையில்:

நீண்ட நெடிய காலம் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதற்குப் பிறகு, இந்திய விடுதலை போராட்டக் காலத்தில் போராட்டத்தின் போது அந்தந்த மாநில மக்களுக்கு எழுச்சியும் உணர்ச்சியும் ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்க் கவிதைகளும், மேடைகளில் தமிழில் பேசுவதும், எழுவதும் பரவலானது, என்றாலும் ஆட்சி மொழியாகவும் அரசாங்க அலுவல் மொழியாகவும் ஆங்கிலமே நடைமுறையில் இருந்தது. பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சிகளில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் முழுமையாக ஆட்சி மொழியாகவும் அலுவல் மொழியாகவும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் தமிழ் ஒரு பாடமாக இல்லை கர்நாடகாவில் சட்டம் படிக்க வேண்டும் என்றால் இரண்டாவது பருவத்தேர்வில் கன்னட மொழித்தாளை கட்டாயமாக தேர்ச்சி பெறவேண்டும் என்ற நிலை உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழ் படிக்காமலேயே ஒருவர் தேர்வாகிய நிலை இருக்கிறது. எனவே தமிழை ஒரு பாடமாக சட்டக் கல்லூரிகளில் படிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை  சட்ட அமைச்சர், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் உள்ள இந்த அரங்கில் முன்வைக்கிறேன் என்று பேசினார்.

தொடர்ந்து, சட்டக்கல்லூரிகளில் சட்டத்தமிழை  படிக்க வேண்டும் என்ற முன்னாள் நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் கோரிக்கையை ஏற்று பேசிய சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழில் மொழிபெயர்த்து வெளியிட உள்ள 100 புத்தகங்களை விரைவாக வெளியிடவும் தமிழில் சட்ட சொற்களஞ்சியம் வெளியிடவும் சட்ட அமைச்சகம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் ஐந்தாண்டு சட்டப் படிப்புகளில் சட்டம் தமிழ் ஒரு பாடமாக தொடங்குவதற்கான பணிகளை  முதலமைச்சரின் ஒப்புதலோடு நிறைவேற்றி வருகிற கல்வி ஆண்டிலேயே தொடங்கப்படும் என்றார்.

பின்னர், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்  சாமிநாதன் பேசும்போது அனைத்து துறைகளிலும் தமிழ் அலுவல் மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் பயன்படுவதற்கு தமிழ் வளர்ச்சித்துறை பாடுபட்டு வருகிறது. தமிழில் சட்ட நூல்களை வெளியிடவும், தமிழில் சட்ட சொற்களஞ்சியம் வெளியிடவும் தமிழ்வளர்ச்சித்துறை முழு ஆதரவை மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்திற்கு வழங்கும் என்று கூறினார்.