கற்றல் என்பது வாழ்நாள் செயல்முறை    

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 33-வது பட்டமளிப்பு விழா, கல்லூரி கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்விற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் வரவேற்புரை அளித்தார்.

விழாவின் சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு, கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.அவர் பேசுகையில், இன்றைய தினம் மாணவர்களாக இருந்த நீங்கள் பட்டதாரிகளாக மாறிய தினம். அறிவாற்றல் என்பது புத்தகங்களில் இருந்து பெறுவது மட்டுமல்ல, வெளியுலகில் இருந்தும் பெறுவதாகும். நீங்கள் எந்த துறையாக இருந்தாலும் அதில் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஒரு மனிதனுக்குக் கல்வி என்பது மிகவும் முக்கியமானது. கற்றல் என்பது வாழ்நாள் செயல்முறையாகும். இது புத்தகங்கள், மனிதர்கள், சமுதாயத்தில் இருந்து அறிந்துக் கொள்வதையும் குறிக்கும்.

நம் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒழுக்கம் என்பது  மிகவும் முக்கியமானது. கடின உழைப்பு, விவேகம், தன்னம்பிக்கை, சுய ஊக்கம், தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுதல், தைரியமாகப் பிரச்சினைகளை எதிர்கொள்ளுதல், நேரத்தை நிர்வகித்தல், கவனம் செலுத்துதல், தொடர்புகொள்ளும் அறிவு போன்றவை நம்மை வெற்றியாளர்களாக மாற்றும் பண்புகளாகும். என்றார்.

இதில் படிப்பில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகள் மற்றும் 1,488 இளநிலை, 248 முதுநிலை பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்ற 1,736 மாணவர்கள் ஆகியோர் பட்டங்களை பெற்றனர்.

விழாவில், கல்லூரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.