டாக்டர்.மகாலிங்கம் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி

டாக்டர்.மகாலிங்கம் பொறியியல்  கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியை வெள்ளிக்கிழமை நடத்தியது.

நிகழ்விற்கு  எம்.சி.இ.டி., முதல்வர் கோவிந்தசாமி  வரவேற்புரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, ஆர்.கே.ஆர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ராமசாமி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில்;  கற்றலின் முக்கியத்துவத்தையும், சமூகத் தேவைகளைத் திறமையாக மாற்றியமைக்கும் ஒருவரின் முழுமையான வளர்ச்சிக்குக்  கல்வி  எவ்வாறு உதவுகிறது என்பதையும் எடுத்துரைத்தார்.

இந்த அறிவியல் கண்காட்சியின் முக்கிய தலைப்புகளாக  அறிவியல், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் என பட்டியலிடப்பட்டது. மேலும், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, கணிதம் மற்றும் வாழ்க்கை, சுகாதாரம் மற்றும் ஆற்றல் பாதுகாப்பு என பல்வேறு தலைப்புகள் வழங்கப்பட்டன.

இரு பிரிவுகளில் நடைபெற்ற இக்கண்காட்சியில் 9,  10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்டனர்.  முதல் பிரிவில்  27 பள்ளிகளிலிருந்து 264 மாணவர்களும்,  இரண்டாவது பிரிவில் 19 பள்ளிகளிலிருந்து 335 மாணவர்களும் பங்கேற்றனர்.

இதில் என்ஐஏ கல்வி நிறுவனத்தின் செயலர் ராமசாமி, என்ஐஏ பள்ளிகளின் நிர்வாக அலுவலர் சின்னசாமி,  டீன்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.