ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 29ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக சென்னையில் உள்ள ரானே குரூப் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறைத்தலைவர் வெங்கட நாராயணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் மாணவிகள் பட்டம் பெற்ற பிறகும் தொடர்ந்து கற்க வேண்டியதன் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார். புதுமைகளைக் கற்றல், திறமைகளை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவை நம் வாழ்நாள் முழுவதும் கட்டாயம் தொடர வேண்டுமென்று வலியுறுத்தினார்.

நிகழ்விற்கு, எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கிப் பேசுகையில், மாணவிகள் பட்டம் பெற்ற இந்த நாள், அவர்களின் வாழ்க்கையில் கொண்டாடப்பட வேண்டிய  நாள் என்று குறிப்பிட்டு வாழ்த்தினார்.

இதையடுத்து, கல்லூரி முதல்வர் சித்ரா  மாணவிகளின் சாதனைகளையும் பல்கலைக்கழக அளவில் மாணவிகள் பெற்ற சிறப்புகளையும் குறிப்பிட்டுப் பட்டம் பெற்ற அனைவரையும் பாராட்டிப் பேசினார்.

நான்கு தங்கப்பதக்கம் உட்பட பல்கலைக்கழக அளவில் 20  சிறப்பிடங்களைக் கல்லூரி மாணவிகள் பெற்றுள்ளதோடு, இளநிலை மற்றும் முதுநிலைப் பிரிவுகளில் 650 பேர் பட்டம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.