புதிய சிமெண்ட் நிறுவனத்தை துவக்கியது எஸ்ஆர்எம் குழுமம்

பல்வேறு தொழில்களில் முன்னணி நிறுவனமாக திகழும் எஸ்ஆர்எம் குழுமம் எஸ்ஆர்எம்பிஆர் சிமெண்ட்ஸ் என்னும் புதிய நிறுவனத்தை துவக்கி சிமெண்ட் உற்பத்தி துறையில் நுழைந்துள்ளது. இதற்கான டீலர்கள் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள ரமடா ஓட்டலில் எஸ்ஆர்எம் குழும தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் எஸ்ஆர்எம்பிஆர் சிமெண்ட்ஸ் விளம்பர தூதர் நடிகர் சத்யராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் அதிநவீன உற்பத்தி ஆலைகளுடன் சிமெண்ட் துறையில் அதிக அளவில் முதலீடு செய்து இந்திய சிமெண்ட் சந்தையில் முன்னணி நிறுவனமாக மாற எஸ்ஆர்எம்பிஆர் சிமெண்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் படி போர்ட்லேண்ட் போஸோலானா சிமெண்ட் நிறுவனத்துடன் இந்நிறுவனம் இணைந்து சிமெண்ட் வர்த்தகத்தில் இறங்க உள்ளது. அதன்படி எஸ்ஆர்எம்பிஆர் நிறுவனம் விரைவில் சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்ட் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட சிமெண்ட் உட்பட பல்வேறு வகையான சிமெண்ட்களை உற்பத்தி செய்து சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. கட்டுமானப் பணிகளுக்கான சிமெண்ட் உடன் மற்ற தேவைகளுக்கான வெள்ளை நிற சிமெண்ட்டையும் இந்நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளது.

இந்த புதிய நிறுவனம் துவக்கம் குறித்து எஸ்ஆர்எம் குழும தலைவர் ரவி பச்சமுத்து கூறுகையில், எஸ்ஆர்எம் குழுமத்தின் கீழ் துவக்கப்பட்டுள்ள இந்நிறுவனம் மிகவும் வலிமைமிக்கதாக இருக்கும். மாநிலத்தில் அதிக அளவிலான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சிமெண்ட்டின் தேவை அதிகரித்துள்ளது. அவற்றை பூர்த்தி செய்யும் வகையில் எங்கள் சிமெண்ட் மிகவும் தரமானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் ரவி பச்சமுத்து கூறுகையில், எங்களின் எஸ்ஆர்எம்பிஆர் சிமெண்ட்ஸ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்க நாங்கள் உள்ளோம். ஒவ்வொரு இந்தியரின் ‘‘எதிர்காலக் கட்டுமானக்’’ கனவை குறைந்த விலையில் நனவாக்கும் நோக்கத்துடன் நாங்கள் இந்தத் துறையில் நுழைந்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

எஸ்ஆர்எம்பிஆர் சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஓம் பிரகாஷ் கூறுகையில், எஸ்ஆர்எம் குழுமத்தின் துணை நிறுவனமான எங்கள் நிறுவனம் ரவி பச்சமுத்து அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தென்னிந்தியாவில் 3 சிமெண்ட் உற்பத்தி ஆலைகள் மற்றும் 100 டீலர்களுடன் சிறப்பான பணியை துவக்கி உள்ளது. டீலருக்கு 2 ஆயிரம் பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்தன. அதில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எங்களின் 3 ஆலைகளில் 2 தமிழ்நாட்டிலும் ஒன்று ஆந்திராவிலும் உள்ளது. இந்த ஆலைகள் ஆண்டுக்கு 420,000 டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாகும்.

வரும் மாதங்களில் தமிழகம் முழுவதும் டீலர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மாநிலம் முழுவதும் தரமான சிமெண்ட்களை வழங்க திட்டமிட்டுள்ளோம். எங்களின் புதிய சிமெண்ட் குறித்து மக்களிடம் கொண்டு செல்ல பல்வேறு திட்டங்களை வைத்துள்ளோம். எங்களின் சிமெண்ட் வகைகளில் இருந்து தனிநபர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப சிமெண்ட்டை தேர்வு செய்து கொள்ளலாம். அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு எங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்தி, உற்பத்தித் திறனை தற்போது உள்ள நிலையில் இருந்து ஆண்டுக்கு 10 மில்லியன் டன்னாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

எஸ்ஆர்எம்பிஆர் சிமெண்ட்ஸ் பற்றி:

எஸ்ஆர்எம்பிஆர் சிமெண்ட்ஸ் தென்னிந்தியாவின் முன்னணி இளம் மற்றும் ஆற்றல்மிக்க சிமெண்ட் நிறுவனமாகும். இது எஸ்ஆர்எம் குழுமத்தின் துணை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்க உறுதிபூண்டுள்ளது. தென்னிந்தியா முழுவதும் இந்நிறுவனத்திற்கு டீலர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் உள்ளனர். தனது விரைவான மற்றும் திறமையான தயாரிப்பின் மூலம் “எதிர்காலத்தை கட்டமைக்க” விரும்பும் பலரின் கனவை நனவாக்க இருக்கிறது. இந்நிறுவனம் தனது சிறப்பான செயல்பாட்டுடன் தனிநபர்கள் தொழில்முனைவோராக மாற ஊக்கமளித்து வருகிறது.

எஸ்ஆர்எம் குழுமம் பற்றி:

ரவி பச்சமுத்து தலைமையில் எஸ்ஆர்எம் குழுமம் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, ஓட்டல், சிமெண்ட் மற்றும் ரயில்வே உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த குழுமத்தின் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது. மேலும் இந்தியா முழுவதும் இந்நிறுவனம் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.