சர்ச்சை கருத்து : தனது  சுயசரிதை வெளியிடும் முடிவை வாபஸ் பெற்றார் இஸ்ரோ தலைவர் சோம்நாத் !

புத்தக வெளியீட்டிற்கு முன்பாகவே தனது சுயசரிதையைத் திரும்பப் பெறுவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சோமநாத் அறிவித்துள்ளார்.

சோமநாத் எழுதிய ‘நிலவு குடிச்ச சிம்மங்கள் (நிலவொளியைக் குடித்த சிங்கங்கள்) என்ற சுயசரிதை புத்தகத்தை  ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அந்த புத்தகத்தில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவனுக்கு எதிரான சில கருத்துக்கள் இடம்பெற்றிருந்ததாகவும், சந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்ட சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி இருந்ததாகக் சில தகவல்கள் வெளியான நிலையில் அது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

“தேவையற்ற சர்ச்சைகளை எழுப்புவது இந்தப் புத்தகத்தின் நோக்கமல்ல, எனவே இந்த புத்தக வெளியீட்டினை ரத்து செய்து, புத்தகத்தை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக” இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறினார். இஸ்ரோ தலைவர் பதவி உட்பட பல முக்கியமான பொறுப்புகளை சோமநாத் அடைவதைத் தடுக்க, அவருக்கு முன்னாள் இஸ்ரோ தலைவராக இருந்த சிவன் முயற்சித்திருக்கலாம் என்று புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சுயசரிதை புத்தகத்தில் முன்னாள் இஸ்ரோ இயக்குனர் கே.சிவன் குறித்து சில விமர்சனக் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து. தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிடுவதில் இருந்து விலகுவதாக இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சோம்நாத் பேசுகையில் ஒரு நிறுவனத்தில்  உயர் பதவி அடைவதற்கான பயணத்தின் போது ஒவ்வொரு நபரும் சில வகையான சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். இது சம்பந்தமாக எந்தவொரு நபரையும் நான் குறிக்கவில்லை., என்றார்.