ரத்தினம் கல்லூரியில் சர்வதேச மாநாடு

ரத்தினம் ஸ்கூல் ஆஃப் சயின்ஸ் சார்பில் அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவியலின் நடப்புப் போக்குகள் குறித்த சர்வதேச மாநாடு கல்லூரி வளாகத்தில் இரண்டு நாட்கள்  நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார்.

விழாவில் வரவேற்புரை வழங்கிய நுண்ணுயிரியல் துறைத் தலைவர் சீனிவாசன், அறிவியலின் பரிமாற்றம் குறித்தும் மாற்றுத் திறனாளி மாநாட்டின் முக்கியத்துவத்தை குறித்தும் விளக்கினார்.

சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா சார்பு மருத்துவ அறிவியல் பீடத்தின் இணைப் பேராசிரியரும் மருத்துவ உளவியல் துறைத் தலைவருமான நீரதா சந்திரமோகன், விளக்கப்படம் ஒன்றை அளித்தார். அப்போது  மருத்துவ உளவியலுக்குப் பின்னாலுள்ள அறிவியல் குறித்தும், இளைஞர்களிடையே காணப்படும் மனச்சோர்வுக்கான காரணங்கள் குறித்தும் விளக்கினார்.

தொடர்ந்து, மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையின் பேராசிரியர்  பாலன் ராதாகிருஷ்ணன், நேர்மறை உளவியல் என்ற கருப்பொருளை விரிவாக எடுத்துரைத்தார். அதோடு அவரது விளக்கக்காட்சி அனைவரது  கவனத்தையும் ஈர்க்கும்படி அமைந்தது. திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியர் நடிகா நம்பி பேசினார்.

இந்த சர்வதேச மாநாட்டில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.