சர்வதேச சமையல் கலைப் போட்டி – ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி வெண்கல பதக்கம்!

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் உணவு அறிவியல் மற்றும் விடுதி மேலாண்மைத் துறை மாணவர்கள் சர்வதேச சமையல் கலைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

தென்னிந்திய சமையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் 6-வது சர்வதேச சமையல் கலைப்போடி சென்னையில் நடைபெற்றது. இதில், இந்தியா, இலங்கை, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் கலந்துகொண்டனர். இந்தியா, மியான்மர், இலங்கை, வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து சமையல் கலை நிபுணர்கள் நடுவர்களாக வரவழைக்கப்பட்டனர்.

காய்கறிகள் வடிவமைப்புப் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர் கிரிதரன் வெண்கலப் பதக்கம் வென்றார். திருமண கேக் வடிவமைத்தல், கேக் அலங்காரப் போட்டிகளில் மாணவி சமீமா, ஆர்டிஸ்டிக் பிரட் டிஸ்பிளே போட்டியில் மாணவர் பாபு, விமல் குமார் ஆகியோருக்கு மெரிட் சான்றிதழ் பெற்றனர்.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஜெர்மனியைச் சேர்ந்த உலகச் சமையல் கலை நிபுணர்கள் சங்கத் தலைவர் தாமஸ் குல்கர், தென்னிந்திய சமையல் கலை நிபுணர்கள் சங்கத் தலைவர் தாமோதரன் ஆகியோர் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கினர். எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி பரிசு பெற்ற மாணவர்களைப் பாராட்டினார்.