சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டினால் நடவடிக்கை

– மாநகர காவல்துறை எச்சரிக்கை

கோவையில் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆட்சேபகரமான கருத்துக்கள் இருக்கும் போஸ்டர்கள் ஒட்டினால் போஸ்டரில் இருக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் அச்சிட்ட அச்சக உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகரின் சில பகுதிகளில் அரசியல் கட்சிகள், மதம் மற்றும் இதர அமைப்புகள் சார்பாக சுவரொட்டிகளும், போட்டி சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒரு கட்சி அல்லது அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றொரு கட்சி அல்லது அமைப்பைச் சேர்ந்தவர்களின் கருத்துக்களுக்கு எதிராகவும், தனிப்பட்ட வகையில் கட்சி மற்றும் அரசியல் தலைவர்கள் மீதும் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எதிராகவும் மாற்று கருத்துக்களுடன் கண்டன சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.

எனவே சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் ஆட்சேபகரமான கருத்துக்கள் இருக்கும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆட்சேபகரமான அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் உள்ள கருத்துகளுடன் கூடிய வாசகங்கள் அல்லது சித்திரங்களுடன் கூடிய சுவரொட்டியை அச்சிடுவதற்கு எவரேனும் தங்களை அணுகினால், அதுகுறித்து சம்மந்தப்பட்ட அச்சக உரிமையாளர் மற்றும் பொறுப்பாளர் உடனடியாக அவர்களது பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் கோவை மாநகரில் அச்சடிக்கப்படும் சுவரொட்டிகள் அனைத்திலும் சம்மந்தப்பட்ட அச்சகத்தின் பெயர் மற்றும் உரிமம் எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும் எனவும் அவ்வாறு குறிப்பிடப்படாத அச்சகத்தின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.