ஆதித்யா எல் -1 : சூரியனை ஆய்வு செய்ய தயாராகும் இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திராயன்-3 இன் வெற்றியை இந்திய நாடு முழுவதும் பெருமையுடன் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், தற்போது சூரியனை ஆய்வு செய்வதற்காகப் பெங்களூரு யூ.ஆர்.ராவ் செயற்கைக்கோள் வடிவமைப்பு மையத்திலிருந்து, ஆதித்யா எல்-1 விண்கலத்தை ஸ்ரீ ஹரிகோட்டாவிலுள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அண்மையில் கொண்டுவரப்பட்டது.

இதனை பி.எஸ்.எல்.வி-57 ராக்கெட்டின் மூலம் செப் 2 ஆம் தேதி சனிக்கிழமை பகல் 11:50 மணி அளவில் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏன் ஆதித்யா எல் -1 பெயர் ?

சூரியனின் மற்றொரு பெயர் ஆதித்யா என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அதே சமயம் எல்-1 என்பது விண்வெளியில் சூரியனின் ஒவ்வொரு செயலையும் ஆய்வு செய்யக்கூடிய இடமாகும். இத்தாலி நாட்டை சேர்ந்த ஜோசப் லூயி லெக்ராஞ்சே என்ற கணிதம் மற்றும் வானியல் அறிஞர், பூமி, நிலவு, சூரியன் ஆகியவற்றின் ஈர்ப்பு விசையானது ஏதோ ஒரு புள்ளியில் சமநிலையில் இருக்கும் என்று கண்டறிந்தார்.

எனவே, சமநிலை புள்ளிகளுக்கு அவரது நினைவாக “லெக்ராஞ்சியப் புள்ளி” என்ற பெரியரைக் கொண்டு எல்-1,எல்-2,எல்-3, எல்-4 மற்றும் எல்-5 என ஐந்து சுற்றுவட்டப் பாதை அழைக்கப்படுகிறது. இந்த பாதையில் நிலைநிறுத்தப்படும் பொருட்கள் சம ஈர்ப்பு விசையுடன் சுழன்று வரும், பூமிக்கு முன் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்று வட்டப் பாதையை எல்-1 என்றும், பூமிக்குப் பின்னால் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்று வட்டப்பாதையை எல்-2 என்றும் அழைக்கின்றனர். இத்தகைய வகையில் சூரியனை ஆய்வு செய்யவுள்ளதால் ஆதித்யா எல் -1 என்கிற பெயர் அமைகிறது.

 

ஆதித்யா எல் -1 ஆனது பூமியில் இருந்து 1.5 மில்லியன் கி.மீ தூரத்தை அடைய சுமார் 125 நாட்கள் சுழற்சி முறையில் பயணம் செய்ய வேண்டும், அதன் பிறகே அங்குள்ள எல்-1 புள்ளி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது எல்-1 புள்ளியிலிருந்து ஒவ்வொரு கணமும் சூரியனை நேரடியாகப் பார்க்க முடிகிறது, இதனால் சூரியனிலிருந்து வரும் சூரிய புயல்களை முன்பே கண்டறிய முடியும்.

சூரிய புயல் என்றால்?

சூரிய புயல் என்பது சூரியனில் ஏற்படக்கூடிய ஒரு மாற்றம், ஒவ்வொரு 11 வருடத்திற்கும் சூரியன் தன்னுடைய காந்த துருவங்களை மாற்றும். அதாவது வட துருவம் தென் துருவமாகவும் தென் துருவம் வட துருவமாகவும் மாறும் இத்தகைய புயலால் பூமிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதனை முன்பே கண்டறியும் வகையில் ஆதித்யா எல் -1 விண்கலம் அமைந்துள்ளது.

இந்த ஆய்வின் நோக்கம்:

ஆதித்யா எல்-1 திட்டத்தில் சூரியன் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வது மட்டுமின்றி சூரியனைத் தொடர்ந்து கண்காணித்து வரும் முயற்சிகளை மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதித்யா எல்-1 விண்கலத்தில் 7 வகையான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் 4 கருவிகள் தொடர்ந்து சூரியனை நேரடியாகக் கண்காணிக்கும் வகையிலும் மற்ற 3 கருவிகள் “லெக்ராஞ்சியப் புள்ளி 1” எல்-1” அருகே உள்ள நிலைமைகளை ஆய்வு செய்து தகவல்களை இஸ்ரோவிற்கு அனுப்பும் வகையிலும் உள்ளன.

இந்த ஏழு கருவிகளும் சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களை பகுப்பாயவும், சூரியனின் வெப்பம், அது உருவாகும் வழிமுறை, அதன் வேகம், சூரியனைச் சுற்றியுள்ள காந்தப்புலம் போன்றவற்றை ஆய்வு செய்ய உள்ளது.

இது சூரியனுக்கு அருகிலுள்ள துகள் மற்றும் பிளாஸ்மா சூழலை ஆய்வு செய்து சூரிய கரோனாவில் உள்ள காந்தப்புலத்தை வகைப்படுத்தும். மேலும், விண்வெளி வானிலையின் முக்கிய இயக்கிகளை ஆய்வு செய்து மதிப்பீடு செய்யும்.

விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல் கல்:

இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பியா ஆகிய நாடுகளே சூரிய ஆராய்ச்சிக்கு விண்கலங்களை அனுப்பியுள்ளன. அதன் வகையில் சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்கு விண்கலத்தை அனுப்பும் நான்காவது நாடாக இந்தியாவின் ஆதித்யா-எல்1 விண்கலம் அமைந்துள்ளது.

இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால் விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோவிற்கும், இந்தியாவிற்கும் புதிய மைல்கல்லை எட்ட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதித்யா எல்-1 ஏவுதலின்  நேரடி காட்சி:

ஆதித்யா எல்-1 விண்கலம் ஏவப்படுவதை, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள லாஞ்ச் வியூ கேலரியில் இருந்துக் காண மக்களுக்கு இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp என்ற இணைப்பில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் என இஸ்ரோ அறிவித்துள்ளது.