ஏழை எளிய மக்களும் மருத்துவராக வேண்டும் – ஈ.பி.எஸ். செய்தியாளர் சந்திப்பு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசியதாவது, அதிமுக-வின் பொன்விழா எழுச்சி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே வியக்கும் வகையில் மாநாடு அமைய உள்ளது. சுமார் 15 லட்சம் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் இம்மாநாட்டில் பங்கு பெறுவார்கள்.இந்த மாநாட்டுக்கு பயந்து, என்ன செய்வது என தெரியாமல் நீட் தேர்வை மையமாக வைத்து உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரதம் இருப்பதாக பத்திரிக்கை செய்திகளில் பார்த்தேன். இது வேண்டும் என்று திட்டமிட்டு நடைபெறுவதாக கருதுகிறோம்.

நீட் தேர்வு

2021 சட்டமன்றத் தேர்தல் திமுக பிரச்சாரத்தின் போது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் ரத்து செய்யப்படும் எனக் கூறி இரண்டு ஆண்டு காலம் முடிந்து தற்போது திமுக மூன்றாவது ஆண்டு காலம் ஆட்சி செய்து வருகிறது. இந்த மூன்று ஆண்டுகளில் நீட் தேர்வுக்காக திமுக என்ன முயற்சி செய்தது?இதுவரை நீட் ரத்து செய்வதற்கான என்ன முயற்சி எடுத்தார்கள்?

உச்சநீதிமன்றம் ஏற்கனவே நீட் தேர்வு உண்டு என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அது குறித்து சட்ட வல்லுனர்களை ஆலோசித்து, அதை ரத்து செய்ய முயற்சி எடுத்திருக்க வேண்டும். மத்திய அரசு சம்பந்தப்பட்டுள்ளதால் நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனையை எழுப்பி நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அளவிற்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது ‘இந்தியா’ எனும் கூட்டணி அமைத்துள்ளார்கள். கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து வேண்டுகோள் வைத்து தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி, கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேட்டு நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பி நீட் தேர்வு ரத்து செய்ய முயற்சிக்கவில்லை. எனவே எந்த முயற்சியும் எடுக்காமல் மக்ககளை ஏமாற்றி வருகிறார்கள்.

இதை நம்பி நமது மாணவச் செல்வங்கள் நீட் தேர்வு ரத்தாகும் என்ற எண்ணத்தில் படிக்காமல் இருந்து அதனால் விலைமதிப்பில்லாத உயிரை இழப்பது தான் நடந்து வருகிறது.இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்பதற்காக முதல்வர் பெங்களூர் சென்றார். தமிழகத்தை பற்றி கவலை இல்லாமல், மக்களைப் பற்றி, விவசாயிகளை பற்றி, கவலை இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.கெஜ்ரிவால் மாநிலத்திற்கு பிரச்சினை வரும்போது, அந்த கோரிக்கைகளை முன்வைத்து ஏற்றுக் கொண்டால்தான் கூட்டணியில் இடம் பெறுவேன் என கூறினார்கள்.

காவிரி தண்ணீர்

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரி நீரை கர்நாடக அரசு பெறுவதற்கு நல்ல சந்தர்ப்பம் அது. கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்றால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி தண்ணீரை விட்டால் தான் கூட்டணியில் கலந்து கொள்வோம் என கோரிக்கை வைத்திருந்தால் நமக்கு தேவையான தண்ணீர் கிடைத்திருக்கும்.

2010 ஆம் ஆண்டு திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் தான் மத்திய அரசு நீட் தேர்வு குறித்த அரசாணை வெளியிட்டது. நீட் தேர்வை அறிமுகம் செய்தவர்களும் அவர்கள் தான் அதற்கு எதிராக போராட்டம் செய்பவர்களும் அவர்கள் தான்.

அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்கு நீட் தேர்வு சந்தித்து அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. அதுவும் கைவிடப்பட்டுள்ளது.
இதற்காகத்தான் கிராமத்தில் இருந்து நகரம் வரை எளிய மக்கள் மருத்துவராக வேண்டும், பல் மருத்துவராக வேண்டும் என்பதற்காக 7.5% உள் ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி அடைந்து வருகின்றனர். ஏழை எளிய மக்கள் மருத்துவராக வேண்டும் என்பதற்காக அதிமுகவின் முயற்சி.

இந்தியாவிலேயே கடன் வாங்கியதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. அதுவே திராவிட மாடல் ஆட்சி என கூறுகின்றனர்’ என தெரிவித்தார்