கோவை மக்களே அடுத்த 3 நாட்களுக்கு ‘ஜாலி’ தான்! வானிலை அட்ப்டே தருகிறார் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன்

கோவையில் அடுத்த 3 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், சில்லென்ற காற்று வீசும் என்றும் கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஜூலை 4ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கோவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை மற்றும் வானிலை எப்படி இருக்கும் என்று கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பினோம். அப்போது அவர் கூறுகையில்,

“கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சிறுவாணி வால்பாறை மற்றும் நீலகிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இதமான காற்று வீசும்.” என்றார்.