காலி குடங்களுடன் அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் வெள்ளிகிழமை நடைபெற்றது. துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கமாக திருக்குறள் வாசிப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியுடன் கூட்டம் தொடங்கும். இன்று முதல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் நவீன்குமார், அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவியில் இருந்து நீக்கி, பின்னர் அந்த உத்தரவை ரத்து செய்த கவர்னரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அவரது பேச்சை தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வரவேற்று மேஜையை தட்டினர்.

தொடர்ந்து பேசிய கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் குடிநீர் பிரச்சினை இருப்பதாகவும், பில்லூர் அணை 3-வது குடிநீர் திட்டம் எப்போது தொடங்கும் என சரமாரியகா கேள்வி எழுப்பினர். மேலும் தெருநாய்கள் தொல்லை இருப்பதாகவும் தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பேசியதாவது:- மாநகராட்சி பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் 600 நாய்கள் பிடிக்கப்பட்டு உள்ளது. பருவமழை பெய்யாததால் சிறுவாணி அணையில் தண்ணீர் குறைந்து விட்டது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஜூலை முதல் வாரத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம். மழை பெய்தால் தண்ணீர் பிரச்சினை சீராகும்.

பில்லூர் அணை 3-வது குடிநீர் திட்டம் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஜூலை மாதம் கடைசி வாரத்தில் அந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:- கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 88-வது வார்டுக்கு உட்பட்ட செங்குளம் பகுதியில் இருந்து மழைக்காலங்களில் அதிக உபரி நீர் வெளியேறுகிறது. அங்கு வடிகால் இல்லாத காரணத்தினால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள். குடியிருப்பு பகுதிகளான அம்மன் கோவில் சாலை, குறிஞ்சி நகர், லவ்லி கார்டன், எஸ்.என்.ஆர். கார்டன், பிரண்ட்ஸ் அவென்யூ, வசந்தம் நகர், வசந்தம் கார்டன், கிளாசிக் பார்க், மகாராஜா காலனி ஆகிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

எனவே, இந்த பகுதியில் சின்ன சுடுகாடு முதல் எஸ்.என்.ஆர்.கார்டன் 1-வது வீதி வரையில் மழைநீர் வடிகால் அமைத்து மழைக்காலத்தில் செங்குளத்தில் இருந்து வரும் உபரி நீர் மற்றும் மழை நீரை வெளியேற்ற மாநகராட்சி முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ரூ. 97 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை மாநகராட்சியில் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் பழைய 60 வார்டுகளுக்கு ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 377.13 கோடி செலவில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி பெறப்பட்டது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.