தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பிரபந்தாஸ்-2023

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் ஊரக மேலாண்மைத் துறைசார்பில் மாணவர்களுக்காக இரண்டு நாள் தேசிய அளவிலான மேலாண்மை சந்திப்பு ஜூன் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. பதிநான்காவது நிகழ்வான இது, ஒவ்வொரு ஆண்டும் மேலாண்மை மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் நிர்வாகத் திறனை வெளிப்படுத்தினர்.

இதில், மொத்தம் 340 மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் 20 கல்லூரிகளைச் சேர்ந்த 146 முதுகலை எம்.பி.ஏ. மாணவர்களும், 16 கல்லூரிகளைச் சேர்ந்த 161 இளங்கலை மாணவர்களும் கலந்து கொண்டனர். குஜராத், கர்நாடகா, ஆந்தரப்பிரதேசம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து எட்டு வெவ்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உட்பட முக்கிய விருந்தினர்களை கொண்டு தொடக்க விழாவுடன் நிகழ்வு தொடங்கியது. வேளாண்மை மற்றும் ஊரக மேலாண்மைத் துறையின் சாதனைகளை வெளிப்படுத்தும் AGBIZ Connect என்ற இதழ் வெளியிட்டப்பட்டது.

பேராசிரியை மற்றும் தலைவர் கே.உமா, வேளாண்மை மற்றும் ஊரக மேலாண்மைத் துறையின் சார்பில் “பிரபந்தாஸ் ஒரு பார்வை” என்ற தலைப்பில் அறிமுகக் குறிப்புடன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். வேளாண்மை முதன்மையர் ந.வெங்கடேச பழனிச்சாமி பங்கேற்பாளர்களை வரவேற்று, இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் பெறும் திறன்களின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டார். முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலக முதன்மையர் ந.செந்தில் வேளாண் வணிகத் துறையின் வளர்ச்சியில் மேலாண்மை மாணவர்களின் பங்கை எடுத்துரைத்தார். வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநர் இ.சோமசுந்தரம், மாணவர் தொழில் முனைவோர்களுக்கு நிதியுதவி போன்ற ஆதரவைக் குறிப்பிட்டார். வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் இயக்குனர் தே. சுரேஷ் குமார் மேலாண்மை மாணவர்களுக்கு தொழில்துறையில் உள்ள வாய்ப்புகளை குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினரான P. சுரேஷ் குமார், பேயர் க்ராப் சயின்ஸீன் ஆசிய பசிபிக் ரோ க்ராப்ஸ் லீட் தனிப்பட்ட வளர்ச்சி, தொழில் மேம்பாடு மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் மற்றும் கார்ப்பரேட் துறையில் அதன் தேவை குறித்து விளக்கினார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி, மாணவர் தொழில்முனைவோரை உருவாக்கும் பல்கலைக்கழகத்தின் தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்துகொண்டதுடன், விவசாய அமைப்புகளுடனான அவர்களின் ஒத்துழைப்பை எடுத்துரைத்தார். விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் பொருட்களை வழங்கும் TNAU அக்ரி-கார்ட் போன்ற முயற்சிகளையும் அவர் குறிப்பிட்டார்.

பிரபந்தஸ் 2023 நிதி, மனித வளம், வணிகத் திட்டம், செயல்பாடுகள், சந்தைப்படுத்தல் போன்ற பல்வேறு போட்டிகள் மற்றும் MBA மாணவர்களுக்கான சிறந்த மேலாளர் என்ற சிறப்பு நிகழ்வைக் கொண்டிருந்தது. AD-Act, Buzzy Brains, Clash of Brains, Mind Marathon மற்றும் Treasure Hunt போன்ற நிகழ்வுகளிலும் இளங்கலைப் பட்டதாரிகள் பங்கேற்றனர். வெற்றியாளர்களுக்கு 1,50,000 ரொக்கப் பரிசாக வழங்கப்பட்ட பரிசளிப்பு விழாவுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

மாணவர் நல மையத்தின் முதன்மையர் நா.மரகதம், பங்கேற்பாளர்களை ஊக்கப்படுத்தினார். சிறப்பு விருந்தினரான சுபத்ரா, P.V.R foods தனது தொழில் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். வாழ்த்துரையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் இரா.தமிழ்வேந்தன் வழங்கினார். முதுகலை பிரிவில் ஒட்டுமொத்த வெற்றியாளர் கோப்பையை கேரள வேளாண் பல்கலைக்கழகமும், இரண்டாம் இடத்தை அவினாசிலிங்கம் மனையியல் தொழில்நுட்ப கல்லூரியும் வென்றன. இளங்கலை பிரிவில், முதலிடம் தேனி வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியும், இரண்டாம் இடத்தை கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் வென்றன. வணிக வினாடி வினா, மைண்ட் மராத்தான், மர்ம வேட்டை போன்ற நிகழ்வுகளில் பங்கேற்ற பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்றனர்.