சர்வதேச முதியோர் தினம் முதியோர்களை பாதுகாக்க உறுதியேற்போம் !

அக்டோபர் முதல் தேதியை உலக முதியோர் தினமாக கடந்த 1990ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபை அறிவித்தது. அதன்படியே ஒவ்வோர் ஆண்டும் இந்தநாள், உலக முதியோர் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 21ஆம் நூற்றாண்டில் வயது முதிர்ந்தோர் எதிர்கொள்ளக்கூடிய சவால் மற்றும் வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டும், அனைத்து வயதினரையும் முன்னிலைப்படுத்தும் நோக்கிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கமாகும். மனிதர்களுக்கு வயதாக ஆக அவர்களின் தேவை முழுமையடைதல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி சமூக, கலாச்சார, அரசியல்ரீதியிலும் அவர்கள் பங்களிப்பதை உறுதி செய்தல் வேண்டும். உலக அளவில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர் எண்ணிக்கை 60 கோடியைத் தாண்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் இரு மடங்காக உயரும் என்று தெரிகிறது. வயதானவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் என்பது மேலும் கவனிக்கப்பட வேண்டியது. ‘சொந்தக் காலில் நின்று விட்டால் போதும்; யாருடைய தயவும் தேவையில்லை’ என்ற மனோபாவமும், மாறி வரும் கலாசாரமும், இளைய தலை முறையினர், பெற்றோரை புறக்கணிக்க காரணமாகின்றன.உலக மக்கள் தொகையில், எட்டு சதவீதத்துக்கும் மேல் முதியோர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மருத்துவ உலகில் ஏற்பட்டு வரும் அசுர வளர்ச்சி, சராசரி வயதை அதிகரிக்க செய்கிறது. முதியோர் விகிதம் அதிகரிப்பதற்கு ஏற்ப, ஒவ்வொருவரும், தங்கள் பெற்றோரை அன்புடன் பராமரித்தாலே, முதியோர் இல்லங்கள் பெருக வாய்ப்பில்லை. தவறினால், ‘மண்ணில் ஒரு நரகம், முதியோர் இல்லம்’ என்ற வாக்கியம் உண்மையாகி விடும்.

எனவே வயது முதிர்ந்தோரைப் பாதுகாப்பதுடன் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பங்களிப்பிற்கும் உறுதி மேற்கொள்வோம்!