தில்லியில் நடந்தது தமிழ்நாட்டில் நடக்குமா ?

தமிழகத்தில் நடந்து வரும் அரசியல் நகர்வுகளை பார்க்கும்போது, அரசியல் முக்கியத்துவம், அதிகாரமிக்க பகுதியாக உருவாகியுள்ள கொங்கு மண்டலத்தில் முக்கோண மோதல் உருவாகியிருப்பது தெளிவாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தமிழகத்தில் பூகோள ரீதியாக தொழில், விவசாயம், கல்வி வளமிக்க பகுதியாக உருவெடுத்துள்ளது கொங்கு மண்டலம் என அழைக்கப்படும் மேற்கு மாவட்டங்கள். 2011-க்குப்பின் ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்த காலத்தில் இப்பகுதி அரசியல் முக்கியவத்துவம் வாய்ந்த பகுதியாகவும் மாறத் தொடங்கியது.

காரணம், எடப்பாடி கே.பழனிசாமி, கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன், எம்.விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜி, தோப்பு என்.டி.வெங்கடாசலம், கே.வி.ராமலிங்கம், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வலுவான துறைகளில் அமைச்சர் பதவியை வகித்தனர்.

இப்பகுதியை தவிர்த்துவிட்டு அரசியல் செய்ய முடியாது என்ற ஒரே காரணத்துக்காக தான் ஜெயலலிதா மறைவுக்குப்பின் இப்பகுதியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியை முதல்வராக, அப்போதைய அதிமுக நியமன பொதுச்செயலர் வி.கே.சசிகலா தேர்வு செய்தார். கட்சி, ஆட்சி என இரண்டிலும் தலைமைப் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வந்தப்பிறகு கொங்கு மண்டலத்தின் அரசியல் முக்கியத்துவம் மேலும் அதிகரித்தது.

2021 பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் பிற பகுதிகளில் அதிமுகவுக்கு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டாலும், எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தைபோலவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் வெற்றிக்கனியை ருசித்து வருகிறது. இங்கு மொத்தமுள்ள 64 தொகுதிகளில் 42 தொகுதிகளை அதிமுக வென்றது. நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டாலும் தமிழகத்தின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது இங்கு அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரும் சேதாரம் இல்லை.

அதேநேரத்தில், திமுகவின் தொடக்க காலத்தில் இருந்தே கொங்கு மண்டலத்தில் கூட்டணி பலத்தால் அவ்வப்போது வெற்றி பெற்றாலும் சொந்த பலத்தில் வெற்றி பெற முடியாத சூழலே தொடர்கிறது. இந்நிலையில், அதிமுகவில் இருந்து அமமுகவுக்குச் சென்று அங்கிருந்த வெளியேறிய வி.செந்தில் பாலாஜியை திமுவில் இணைத்து கொங்கு மண்டல தளபதியாக உருவாக்கியுள்ளார் முதல்வர் மு.க.ஸடாலின்.

2021 பேரவைத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளிலும் திமுகவை வெற்றிப்பெற செய்த செந்தில் பாலாஜி, கோவையில் பேரவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத திமுகவுக்கு நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தார். குறிப்பாக கோவை மாநகராட்சியில் 100-இல் 96 வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியது.

திமுகவுக்கு சறுக்கலை ஏற்படுத்தும் கொங்கு மண்டலத்தில் கட்சியை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பதால் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் திமுக மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகளைவிட செந்தில்பாலாஜிக்கு நெருக்கம் அதிகரித்துள்ளது.

இயல்பாகவே தேசிய, ஆன்மிக சிந்தனை வாக்குகள் அதிகம் கொண்ட பகுதியான கொங்கு மண்டலத்தில் வேர்பிடித்து வளர இதுவே சாதகமான காலகட்டம் என்பதை உணர்ந்த பாஜகவும் அங்கு அரசியல் நகர்வுகளை சில ஆண்டுகளாகவே செய்து வருகிறது. முதலில் எல்.முருகனை மாநிலத் தலைவராக நியமித்த பாஜக இப்போது அவருக்கு மத்திய அமைச்சர் பதவியை வழங்கியுள்ளது.

இருப்பினும், எதிர்காலத்தில் மக்கள் செல்வாக்கு மிக்க வலுவான தலைவரை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான கே.அண்ணாமலையை மாநிலத் தலைவராக நியமித்துள்ளது. தேசியத் தலைமை கொடுத்த இலக்கை அடைந்தே தீரும் வகையில் அண்ணாமலையும் தொடர்ந்து தீவிர அரசியலில் இறங்கியுள்ளது கொங்கு மண்டல அரசியல் முக்கியவத்துத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

இசட் பாதுகாப்புடன் வலம் வரும் அண்ணாமலை அரசியலில் திமுகவுக்கு எதிராக தீவிர கருத்துக்களையும், அவ்வப்போது அதிமுகவை சீண்டும் வகையிலும் தொடர்ந்து கருத்துக்களை பொதுவெளியில் பேசி வருவதற்கு பின்னால் மறைமுக அரசியல் இலக்குடன் இயங்கி வருவதாகவே அரசியல்நோக்கர்கள் கருதுகின்றனர்.

அதிமுகவின் தலைமைப் பதவியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி கட்சியின் கட்டமைப்பு, நிர்வாகிகள் பலம் உள்ளிட்டவற்றுடன் கொங்கு மண்டலத்தில் பிரதான சக்தியாக உருவெடுத்திருக்கிறார்.

போட்டித் தலைவர்கள் யாரும் இல்லாத நிலையில் தனது ஒருங்கிணைக்கும் திறன், தேர்தல் வியூகத்திறன் உள்ளிட்டவற்றால் திமுகவின் தளபதியாக உயர்ந்திருக்கும் செந்தில் பாலாஜி கொங்கு ம ண்டலத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மாறியிருக்கிறார்.

இந்நிலையில், இளம் தலைவர், தேசத்தை ஆளும் கட்சியின் மாநிலத் தலைவர் ஆகியவற்றுடன் தானும் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகிவிட்டால் எப்படியும் எடப்பாடி பழனிசாமி, செந்தில் பாலாஜி ஆகியோரை பின்னுக்குத் தள்ளி பிரதான சக்தியாக மாற முடியும் என்ற நம்பிக்கை யில் அதற்கான அரசியல் நகர்வுகளை அண்ணாமலை செய்து வருவதாக தெரிகிறது.

அதிமுக, திமுக, பாஜக என மூன்று முக்கியக் கட்சிகளில் இருந்துகொண்டு அரசியல் முக்கியவத்தும் வாய்ந்த கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமி, செந்தில் பாலாஜி, அண்ணாமலை ஆகியோர் இடையே உருவாகியிருக்கும் இந்த முக்கோண மோதல் தமிழக அரசியலில் தொடர்ந்து பல்வேறு அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுக்குப்பின்னர் தான் இந்த முக்கோண மோதல் மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இடைத்தேர்தலில் காங்கிரஸின் கை சின்னம் 65 சதவீத வாக்குகளுடன், அதிமுகவின் இரட்டை இலையை 25 சதவீதத்துக்கு தள்ளியதில் இருந்து தான் அண்ணாமலையிடம் சில மனமாற்றங்கள் உருவாகியுள்ளதாக தெரிகிறது.

எதிர்வருவது மக்களவைத் தேர்தல், இதில் பிரதமரை மையமாக வைத்து தான் வாக்குகள் விழும். கொங்கில் வலுகுறைந்த திமுக, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பிற வாக்குகளுடன் தேசிய எண்ணம் கொண்ட வாக்குகளை கூடுதலாக பெற்று 2004, 2019 போல அனைத்து தொகுதிகளிலும் கூடுதல் வாக்குகளை பெற்றுவிடக்கூடும்.

எனவே, மோடியை மையப்படுத்தி வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை தனித்து களம் இறக்கி மும்முனை போட்டியை உருவாக்கினால் கொங்குவில் தேசிய, ஆன்மிக சிந்தனை கொண்ட வாக்குகள், திமுக எதிர்ப்பு வாக்குகள் உள்ளிட்டவற்றை அறுவடை செய்து பாஜகவின் வாக்கு வங்கியை உயர்த்த முடியும். மேலும், டெல்டா, தென்மாவட்டங்கள், சென்னை மண்டலம் உள்ளிட்டவற்றிலும் அதிமுகவை தவிர்த்துவிட்டு கூட்டணி அமைத்தால் ஓரிரு இடங்களில் வெற்றி பெறுவது அல்லது பாஜகவின் வாக்கு வங்கியை இரட்டை இலக்கத்துக்கு உயர்த்துவது என்ற முடிவுக்கு வந்துள்ள அண்ணாமலை இது குறித்து பாஜக தேசியத் தலைமைக்கும் இதற்கான வியூகத்தை விளக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தத் திட்டத்தை பாஜக தேசியத் தலைமை ஏற்றுகொண்டால் கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமி, செந்தில் பாலாஜி ஆகியோரை பின்னுக்குத் தள்ளுவதுடன் மாநில அளவிலும் திமுகக்கு போட்டி சக்தியாக தன்னுடைய தலைமையில் பாஜகவை கொண்டுவர முடியும் என்பது அண்ணாமலையின் கணக்கு என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

இதன் வெளிபாடுதான் தீவிர திமுக எதிர்ப்பு, அவ்வப்போது அதிமுகவை சீண்டிப் பார்ப்பது என தொடர்ந்து அசைவுகளை அண்ணாமலை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிக்கிடக்கும் திமுக, அதிமுகவை விமர்சனம் செய்வதன் மூலம் பாஜகவுக்கு கட்டமைப்பு பலம் இல்லாவிட்டாலும் தில்லியில் அரவிந்த் கெஜரிவால் ஒரே தேர்தலில் பலமான சக்தியாக உருவெடுத்தது போல தன்னாலும் உருவெடுக்க முடியும் என்ற லட்சியத்துடன் அரசியல் காய்களை அண்ணாமலை நகர்த்தி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் வெளிப்பாடக தான் வரும் ஜூலை மாதம் 9 முதல் ஊழலுக்கு எதிராக நடைபயணத்தை தொடங்க இருக்கிறார் அண்ணாமலை. இந்த மோதலில் வெற்றி பெறப் போவது யார் என்பதை அடுத்தடுத்து வரும் அரசியல் நகர்வுகளும், மக்களவைத்தேர்தல் முடிவுகளும் தான் தீர்மானிக்கும்.

லாபம் அதிமுகவுக்குதான்?

இந்த விவகாரத்தை பொருத்தவரை செந்தில் பாலாஜி கைது செய்ய பட்டிருப்பதில், அதிக அதிர்ச்சி அடைந்தது முதல்வர் மு க ஸ்டாலின் தான். காரணம் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட முறையில் நல்ல நட்பு இருந்தது, இதன் காரணமாக தனக்கும், திமுகவினருக்கும், மத்திய அரசால் எவ்வித இடையூறும் வராது என முதல்வர் மு க ஸ்டாலின் முழுமையாக நம்பினார்.

ஆனால் இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி- அண்ணாமலை இடையிலான அரசியல் போட்டியில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கையில் அதிக லாபம் பெறக்கூடியவர் முதல்வர் மு க ஸ்டாலின் தான். காரணம் நிர்வாகி ரீதியில் பின்னடைவுகள் வந்தாலும் அரசியல் ரீதியில் திமுக அனைத்து கூட்டணி கட்சிகளும் திமுகவுடன் இணைந்து அரசியல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

காரணம் எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைந்து போராட்டம் நடத்த தயார் என இரட்டை குதிரையில் சவாரி செய்து வந்த திருமாவளன், திமுக எடுக்கும் முடிவை தாண்டி போகாத சூழலை செந்தில் பாலாஜி கைது ஏற்படுத்தியுள்ளது. தீவிரமாக எதிர்ப்பதன் மூலம் திமுக எதிர்ப்பு வாக்குகளில் பெரும்பங்கை அண்ணாமலை அறுவடை செய்யும் வாய்ப்புள்ளது. அடுத்து வருவது மக்களவைத் தேர்தல் என்பதால் மோடியை மையமாக வைத்து இந்த வாக்குகளை அண்ணாமலையால் அறுவடை செய்ய முடியும். எனவே, தான் பாஜக தலைமையில் தனி அணி அமைக்கும் மறைமுகத் திட்டத்துடன் அண்ணாமலை காய்நகர்த்தி வருகிறார்.

அதிமுக-பாஜக கூட்டணி தொடர்ந்தால் செந்தில் பாலாஜி கைது விவகாரம் பாஜகவைவிட அதிமுகவுக்கு அதிக லாபம் கிடைக்கும். திமுக எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்யப்போவது யார் என்பது எதிர்வரும் மக்களவைத்தேர்தலில் தெரிந்துவிடும் என்றார் அரசியல் விமர்சகர் ரிஷி.