பெண்ணின் வயிற்றில் 36 கிலோ கட்டி!

கோவையில் பெண் ஒருவரின் வயிற்றிலிருந்து உடலில் சரிபாதி எடையில் வளர்ந்த 36 கிலோ எடை கொண்ட ஒவேரியன் ராட்சத கேன்சர் கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. கூலித்தொழிலாளியான இவர் கடந்த 5 வருடங்களாக வயிறு வீக்கம் மற்றும் வலியினால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவ பரிசோதனையில் தமிழ்ச்செல்விக்கு சினைப்பையில் கட்டி இருப்பது தெரியவந்தது.

ஆனால் கட்டியை அகற்றுவதற்கு அவர் தயக்கம் காட்டியுள்ளார். இந்த நிலையில் கட்டி நாளுக்கு நாள் பெரிதானது. வயிறு வீக்கம் அதிகரிக்கவே தமிழ்ச்செல்விக்கு கடும் வலி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் ராமநாதபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சி.டி ஸ்கேன் செய்த போது அவரது வயிற்றில் ராட்சத கட்டி இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவர் கோகுல் தலைமையிலான 6 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் சினைப்பை கட்டியை சுமார் 4 மணி  நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

சினைப்பையில் இருந்து 36 கிலோ எடையுடன் கட்டி அகற்றப்பட்டது. இந்திய அளவில் இது இரண்டாவது முறை என்றும், பெண்கள் ஆண்டிற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.