கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச இருதய நல மருத்துவ முகாம்!

“குழந்தைகளுக்கு ஏற்படும் தீவிரமான இருதய பாதிப்புகளுக்கு உடனடியாக சிகிச்சை தேவைப் படும்” என்கிறார் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக் குழந்தைகள் இருதய சிகிச்சை நிபுணர், டாக்டர் வினோத் துரைசாமி.

மேலும் அவர் கூறியதாவது: இருதய குழாய் அடைப்பு, இருதயம் முழுமையாக வளர்ச்சி அடை யாமல் இருப்பது போன்றவை குழந்தைகளுக்கு பிறவியிலேயே இருதய பாதிப்பு ஏற்பட காரணமாக இருக்கலாம். இதைத் தவிர ஆக்சிஜன் குறைபாடு பாதிப்பும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

குழந்தை இருமாத கருவாக இருக்கும்போது இருதயம் உருவாகிறது. அப்போது தாய்க்கு அம்மை போன்ற நோய்த் தொற்று, கட்டுப்பாடில்லாத சர்க்கரை, மருத்துவர்கள் பரிந்துரையின்றி தாய் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் குழந்தைக்கு இருதய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இருதய பாதிப்புக்குள்ளான குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுவிட சிரமப்படுவர். இருதயத் துடிப்பு மூச்சுவிடுவதும் தாறுமாறாக இருக்கும். சோர்வாக காணப்படுவர். எடை அதிகரிக்காது. தொடர்ச்சியாக இருமல், சளி, நிமோனியா காய்ச்சல் இருக்கும். ஆக்சிஜன் குறைபாட்டால் நாக்கு மற்றும் நகங்கள் நீல நிறமாக மாறும்.

பெற்றோர் குழந்தையை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்று உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க வேண்டும்.

பரிசோதனையின் போது முதற்கட்டமாக மார்பு பகுதி எக்ஸ்ரே, ஈசிஜி எடுக்கப்படும். பின்பு எக்கோகார்டி யோகிராம் பரிசோதனை மூலம் இருதயத்தில் துளை, அடைப்பு உள்ளதா என்று பரிசோதிக்கப்படும். சிறியதுளைதான் என்றால் அது நாளடைவில் தானாகவே சரியாகிவிடும், அதற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. இரத்தக் குழாயில் அடைப்பிருந்தால் நவீன ஆஞ்சியோகிராம் சிகிச்சை மூலம் துளைகளும் அடைக்கப்படும், அடைப்புகளும் அகற்றப்படும்.

பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு இலவச இருதயநல மருத்துவ முகாம் கேஎம்சிஹெச் மருத்துவமனையில் (அவிநாசி ரோடு) ஜூன் 12 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் பரிசோதனைகள் மற்றும் பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகள் அனைத்தும் சலுகைக் கட்டணத்தில் செய்துகொள்ளலாம்.