குழந்தை தொழிலாளர்களுக்கான சிறப்பு மையங்கள் திறக்க வேண்டும்!

தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டம் மற்றும் பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரியும் இணைந்து குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் உள்ள சவால்கள் குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை அன்று கல்லூரிவளாகத்தில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எம். கேத்தேயி தலைமை வகித்தார். கல்லூரி செயலர்  ராஜன் வரவேற்புரையில் கூறியதாவது,

குழந்தைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக செயல்பட்டுவந்த சிறப்பு பயிற்சி மையங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியதோடு சமூக மாற்றங்களுக்கு துணை நின்றது என்று குறிப்பிட்டால் மிகையாகாது என்றார்.

சிறப்பு விருந்தினரான தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் இயக்குனர் பேசுகையில், குழந்தைத் தொழிலாளர்களுடைய பிரச்சனையை அவர்களுடைய நிலையிலிருந்து பார்த்து அதற்கான தீர்வுகளை காண்பது தான் சரியான வழிமுறையாக இருக்கும். குடும்பச் சூழல், வறுமை, சுற்றுப்புற சூழ்நிலைகள்மற்றும் இதர காரணிகள் தான் குழந்தைகள் உழைக்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். குழந்தைத் தொழிலாளர்கள் கல்வி கற்பதற்கான சூழலை உருவாக்குவதோடு அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி முறைப்படுத்துகிற போது அவர்களும் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகத்தின் நிதிஉதவியுடன் நடைபெற்று வந்த சிறப்பு பயிற்சி மையங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆகவே,  மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களுக்கான சிறப்பு பயிற்சி மையங்களை துவங்கி நடத்திட தமிழக அரசு முன் வர வேண்டும், என்றார்.

கிருஷ்ணா கலைஅறிவியல் கல்லூரி சமூகப் பணித்துறைத் தலைவர் அழகர்சாமி பேசுகையில், குழந்தைகளின் அடிப்படை உரிமைகளான வாழ்வுரிமை,கல்வி, சுகாதாரம் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இவற்றை உறுதிப்படுத்த சர்வதேச அளவில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தத்தில் இந்திய நாடும் கையெழுத்திட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் அனைத்து வகையான வன்முறைகளையும் தடுத்து நிறுத்த சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவ, மாணவிகள்முன் வர வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட100-க்கு மேற்பட்டோருக்கு குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.