தொகுதிக்கு 50 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ப்போம் உறுதி கொடுக்கும் நா.கார்த்திக்

கோவை: திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இதன் பொருட்டாக தேடிச் செல்லாத பொதுமக்கள் பலரும் தி.மு.க-வில் இணைந்து வருகின்றனர். இந்த சூழலில் கோவையில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் தொகுதிக்கு 50 ஆயிரம் பேரை தி.மு.க-வில் இணைக்க உள்ளதாக தி.மு.க-வின் கோவை மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேடை பேச்சுக்களால் தனது சிறுவயதிலேயே ஈர்க்கப்பட்டு 1981 ஆம் ஆண்டு  திமுகவில் பல ஆண்டுகளுக்கு முன்பே தன்னை இணைத்துக் கொண்டவர் நா.கார்த்திக். அன்று முதல் தொண்டனாக, களப்பணியாளராக, கழகத்தின் சொற்பொழிவாளராக பல பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.  அரசியல் பயணம் தீவிரம் அடைந்து மேடைகளில் பேச ஆரம்பித்த சமயத்தில், சிங்காநல்லூர் தொகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்ததாக இவர் மீது ஒரு பொய் வழக்கு அதிமுகவினரால் புனையப்பட்டது. அதில் கைதாகி சுமார் 6 மாதகாலம் சிறையில் இருந்தார்.

அதன்பின்பு திமுகவின் இளைஞர் அணியில் தன்னை இணைந்து கொண்டு தீவிர பணியாற்றினார்.  கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தார். ஆரம்பத்தில் கட்சியில் சிறிய பொறுப்புகள் வகித்து, பின்பு தனது உழைப்பால் படிப்படியாக ஒவ்வொரு படிநிலைகளையும், அதாவது மாநகர இளைஞர் அணி அமைப்பாளர், பீளமேடு பகுதி கழகத்தின் செயலாளர், கோவை மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் என பதவி வகித்த இவர், கழகத்தின் 15 வது உட்கட்சி தேர்தலில் கோவை மாநகர மாவட்ட செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் தனது 22 வயதில் திமுக மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும், பின்பு 15 ஆண்டுகாலம் பீளமேடு பகுதி கழகத்தின் செயலாளராகவும், கோவை மாநகரக் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்துள்ளார்.

இவர் தற்போதைய தனது கட்சிப் பணிகள் குறித்து நம்மிடம் கூறியதாவது:

முதல்வர் ஸ்டாலின் அவர்கள்  தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் வரை நிறைவேற்றியுள்ளார். அந்த சாதனைகளை மக்களிடத்தில் சொல்லக்கூடிய பணிகளையும், திமுக தொண்டர்களை பலப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை நாங்கள் செய்து வருகிறோம்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலில், தொண்டர்களின் பலமே கட்சியின் பலம் என்பதை பறைசாற்றும் வகையில்  கட்சியின் கொள்கைகள், லட்சியங்கள், திராவிட இயக்கத்தின் பல்வேறு திட்டங்களை இளைஞர்கள், மாணவர்களுக்கு சென்று சேர்க்க திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டத்தை நடத்தி வருகிறோம். மேலும் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் கோவையில் வெற்றிபெற வேண்டும் என்ற இலக்கோடு செயல்படுகிறோம்.

கோவையின் அடையாளங்கள் திமுக ஆட்சியில் உருவானது:

கோவை மாவட்டத்தில் ஏற்படுத்தி இருக்கும் அனைத்து வளர்ச்சி பணிகளும் திமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்டவை.  இங்கு பல்வேறு சாலைகளின் விரிவாக்கம், ரயில்வே உயர்மட்ட மேம்பாலங்கள் திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டவை.

2010 ஆம் ஆண்டுக்கு பிறகு கோவையில் தொழில்துறை வளர்ச்சி அடையவில்லை. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் கடந்த ஆட்சி காலத்தில் செயல் இழந்து இருந்தன. அந்த தொழில் துறையை மேம்படுத்துவதற்க்காக தமிழக முதல்வர், மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோளை ஏற்று தொழில்முனைவோர்களை சந்தித்து பேசி இருக்கிறார்.

2010 ஆம் ஆண்டு சுமார் 19 லட்சம் சதுர அடியில் ஹோப்ஸ் காலேஜ் அருகில் டைடல் பார்க் திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. அதில் 13,000 பேர் பணியாற்றக்கூடிய 70 ஐ.டி வளாகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்பின்பு கோவையில் பெரிய தொழிற்ச்சாலைகள் எதுவும் வரவில்லை. கோவையின் அனைத்து அடையாளங்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

கோவையில் திமுக கம்பீரமாக உயரும்

பல்வேறு செயல்பாடுகளை மாவட்ட பொறுப்பு அமைச்சர் எங்களிடம் வழங்கியுள்ளார். மக்களை சந்தித்து அவர்களுக்கு இருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டும் என, அதற்கு உண்டான பணிகளை செய்ய சொல்லி இருக்கிறார். மாவட்ட செயலாளராக பொறுப்பு வகிக்கும் நான் பொதுமக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகளை செய்து கொடுப்பேன்.

இளைஞர்களை, மாணவர்களை ஈர்ப்பதற்கும், கொள்கை வழியில் வழிநடத்துவதற்கான பணிகளை செய்து வருகிறோம். அவர்களை பக்குவப்படுத்துவது, கொள்கைகளில் நல்வழிப்படுத்துவதற்கான செயல்களை மேற்கொண்டுள்ளோம்.

கோவையில் இருக்கும் பலர் திமுகவில் இணைய வேண்டும் என விருப்பம் தெரிவித்து கழகத்தில் இணைகின்றனர். நடுநிலையாளர்கள், எந்த கட்சியினையும் சேராதவர்கள், பல்வேறு கட்சியில் இருப்பவர்கள் என சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்து உள்ளனர். மக்கள் தாங்களாகவே விரும்பி திமுகவில் இணைகின்றனர்.

எதிர்காலத்தில் கோவை மாவட்டத்தில் திமுக மாபெரும் இயக்கமாக தேர்தல் களத்தில் மட்டுமல்லாமல், மக்களுக்காக பணியாற்றுவதில் யாரும் அசைத்து பார்க்க முடியாத அளவிற்கு கம்பீரமாக உயர்ந்து நிற்கும். வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக நிச்சயம் நூறு சதவீதம் வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கோவையில் சாலைகளின் மோசமான நிலை குறித்து அவர் கூறுகையில்: கோவை மாநகரில் சாலை மேம்பாட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது பல சாலைகள் சீரமைக்கப்பட்டு உள்ளன. இன்னும் பல சாலைகள் மோசமாக உள்ளன, அவையும் சரி செய்யப்படும்.  சாலைகள் இப்படி இருக்கக் காரணம், கடந்த ஆட்சியில் சாலைப்பணிகள், வளர்ச்சிப் பணிகள் செய்தவர்களுக்கு தரவேண்டிய நிதிகளை ஆட்சியாளர்கள் கொடுக்காமல் சென்றதால் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

ஆனால் சாலைகள் அனைத்தும் போடப்பட்ட ஒரு ஆண்டு காலத்திற்குள்ளேயே மோசமடைந்து விடாது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் சரியாக பராமரிக்காததால்தான் சாலைகள் அனைத்தும் இந்த அளவிற்கு மோசமாக உள்ளது. நிச்சயம் சாலைகள் அனைத்தும் கோவையில் மேம்படுத்தப்படும். அதற்கு உண்டான அனைத்து பணிகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி முழு முயற்சியுடன் செய்து வருகிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் பணியாற்றுவது சுவாரசியமானது:

மின்சாரத்துறை அமைச்சர் கோவையின் பொறுப்பு அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட பிறகு, கோவையில் அடுத்த கட்டப் பணிகளை செய்து வருகிறார். பெரும்பான்மையான நேரத்தை கோவைக்கே ஒதுக்கி உள்ளார்.   கோவையில் திமுக உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற அவர் முக்கியக் காரணம். அவரது முன்னெடுப்பால் கடந்த ஓராண்டு காலமாக பல பணிகள் இங்கு செய்யப்பட்டுள்ளன.

அவரது முயற்சியினால் கோவை புறநகர் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் இதுவரை இரண்டு கட்டங்களாக சுமார் ரூ.316 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலைப்பணிகள் மேம்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், கோவையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட பணிகளை பெற்று தந்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை பொறுத்தவரை திமுக தலைவர் ஸ்டாலின், அவரிடம் என்ன பொறுப்பை கொடுத்துள்ளாரோ அதை செய்து முடிக்கும் வரை உறங்கமாட்டார்.

மக்களின் தேவைகளையும், திமுகவை வலுப்படுத்தும் செயல்களையும் முழுமூச்சாக கொண்டு செயல்பட்டு வருகிறார். நான் கோவையில் பல மாவட்ட செயலாளர், தலைவர்களோடு பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இவருடன் சேர்ந்து பணியாற்றுவது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.

அவர் மிகவும் திறமையானவர். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். கோவை மாவட்ட தொண்டர்களும் மக்கள் பணிகளுக்காக அவருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

தொகுதிக்கு 50 ஆயிரம் பேர் சேர்ப்போம்:

தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோளுக்கிணங்க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தமிழ்நாடு முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்கக்கூடிய பணிகளை ஏப்ரல் 3ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதனை ஒட்டி கோவை மாநகர் மாவட்டத்தில் எங்கள் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி வழிகாட்டுதலில், கோவை வடக்கு, தெற்கு சட்டப்பேரவை தொகுதி, சிங்காநல்லூர் சட்டப்பேரவை தொகுதி ஆகிய இந்த மூன்று தொகுதிகளிலும் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதிக்குள் பணிகள் முடிவுபெறும் வகையில் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. இதுவரை ஒவ்வொரு தொகுதிகளிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இணைத்திருக்கிறோம்.

இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் ஆவலோடு கட்சியில் இணைந்து வருகின்றனர். மக்களும் வாக்காளர் அடையாள அட்டையுடன் வந்து தங்களை கட்சியில் இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவிக்கின்றனர். இதற்கு ஒரே காரணம், மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர்தான். அவர் முதலமைச்சராக பொறுப்பை ஏற்றுக் கொண்டதற்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி அனைத்துத் தரப்பு மக்களுடைய பேராதரவையும், பேரன்பையும் பெற்று இருக்கிறார். இதனால் தி.மு.க.-வுக்கு அலையலையாக உறுப்பினர்கள் வந்து சேர்கிறார்கள்.

கோவை மாவட்டம் ஒரு மிகச்சிறந்த தொழில் நகரம். ஒரு காலத்தில் தென்னிந்தியாவினுடைய மான்செஸ்டர் என மிகச் சிறந்த தொழில்நகரமாக விளங்கிய இந்த மாவட்டம் கடந்த பத்தாண்டு கால ஆட்சியால் தொழில்கள் நலிவடைந்து சிறுகுறு தொழில்கள், நடுத்தரத் தொழில்கள் பாதிக்கப்பட்டு, மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. தி.மு.க ஆட்சி மலர்ந்த பிறகு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்த நடவடிக்கையின் மூலமாக இன்றைக்கு மிகச்சிறந்த அளவில அந்த கோவை மாவட்டம் வளர்ச்சி பெற்று வருகிறது.

அ.தி.மு.க ஆட்சியில் குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலைகள் எல்லாம் 300 கோடி ரூபாய்க்கு மேலாக நிதி ஒதுக்கப்பட்டு புதிய தார் சாலைகளாக செப்பனிடப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்ல, கோவை மாநகரத்தை மேம்படுத்துவதற்காகவும், மாநகரப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மெட்ரோ ரயில் திட்டத்தைத் துவக்கி அதற்குண்டான அடிப்படை பணிகளும் துவங்கப்பட்டிருக்கின்றன.

இதுபோன்ற பல்வேறு பணிகள் நம் கோவை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில், பல்வேறு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வரும் நிறுவனங்கள் கோவையில் தொழில் தொடங்க ஏதுவாக அடிப்படை வசதிகளை மேம்படுத்த முதலமைச்சர் உழைத்து வருகிறார். அவருக்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் நா.கார்த்திக்.