கே.ஜி. அறக்கட்டளையின் ‘குழந்தைகள் இதயம் காக்கும் திட்டம்’ (Little Heart Foundation)

உலக அளவில் பெயர் சொல்லும்படியான கோயம்புத்தூரைச் சேர்ந்த புகழ்பெற்ற கே.ஜி. மருத்துவமனை, தனது மருத்துவ சேவையில் தொடர்ந்து 49 ஆம் ஆண்டை நிறைவு செய்து, மக்களின் பிணி நீக்கும் பணியில் தனிச்சிறப்புப் பெற்று விளங்கி வருகிறது என்றால் அது மிகையல்ல. ஒரு நிறுவனம், தனது தொழிலில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது எனில், அது சாதாரணமாக எங்கும் நடந்துவிடக்கூடிய காரியம் அல்ல.

அந்த நிறுவனம் மக்களுக்குக் கொடுக்கும் சேவையின் தரமானது, நியாயமானதாக, மாசில்லாத, நிரந்தரமானதாக, குறையொன்றும் சொல்ல முடியாததாக இருக்க வேண்டும். அத்துடன், அந்நிறுவனத்தின் பணியாளர்கள். பணியாளர்களும் மக்களில் ஒரு பிரிவினர்தான் என்பதை மறக்கக் கூடாது. ஆகவே, அவர்களது அர்ப்பணிப்பு உணர்வு, அந்த நிறுவனத்திலேயே தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற பேராவல், தொழிலில் அவர்களின் அக்கறை, அதற்கான தகுதி, அவர்களுக்காக அந்த நிறுவனம் மனம் முன்வந்து செய்துதரும் வசதிகள் ஆகியவை சிறப்பாக இருக்க வேண்டும்.

இத்தனையும் ஒருங்கிணைந்து வந்தால்தான் ஒரு நிறுவனம், தொடர்ந்து தனது வெற்றிப்பாதையில் பற்பல சாதனைகளை செய்திட முடியும். கே.ஜி. நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன் வெற்றிப்பாதை, கே.ஜி.பக்தவத்சலம் அவர்களின் அயராத உழைப்பு, தனித்திறமை, அர்ப்பணிப்பு, அரவணைப்பு, கருணை, தொழில் பக்தி, சமூக அக்கறை ஆகியவற்றால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தற்போது கே.ஜி. மருத்துவமனையின் வெற்றிப்பாதையில் ஓர் மணிமகுடமாய் வீற்றிருக்கிறது, அவர்களது தளிர் இதயங்களுக்கான அறக்கட்டளை (Little Heart Foundation). இதன் சிறப்பம்சம், குழந்தைகளின் இதயங்களைத் தாக்கும் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அவர்களுக்கான உதவிகளை அரசாங்க உதவியுடன் செய்து தருவதாகும்.

இந்த அறப்பணி குறித்து கே.ஜி. மருத்துவமனைத் தலைவர்  ‘பத்மஸ்ரீ’ பக்தவத்சலம் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்கள் பின்வருமாறு:

‘எனது தந்தை தர்மவீரா கோவிந்தசுவாமி நாயுடு அவர்கள், அன்னூரில் இருந்து கோயம்புத்தூர் வந்து 10 படுக்கைகளுடன் இந்த மருத்துவமனையை 1974 ஜனவரி 19 இல் ஆரம்பித்தார். அப்போது அமெரிக்காவில் இருந்த என்னை வரவழைத்து, இந்த மருத்துவமனையை என்னிடம் ஒப்படைத்தார். அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சென்னை என 12 மருத்துவமனைகளில் பணியாற்றிய அனுபவம் இருந்தது. ஆனால் எனக்கு மருத்துவமனை நிர்வாக அனுபவம் இல்லை. சிரமமான அந்த காலகட்டத்தில் அறக்கட்டளை மூலமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த கே.ஜி. மருத்துவமனையின் ஊழியர்கள் மொத்தம் மூன்று பேர் மட்டுமே.

எனது தந்தையின் தன்னம்பிக்கை கருத்துக்களையும், தமிழ் மருத்துவக் கடவுள் முருகனின் அருளையும் மட்டுமே மனதில் ஏற்றி, கடுமையாக உழைத்தேன். மக்கள் பயமின்றி, கோயிலாக வழிபடும், நம்பி வந்தோம் உயிர் பிழைத்தோம் என்ற கூற்றுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதையே எமது நோக்கமாகக் கொண்டு, வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருந்தாலும், இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்காமல் மக்கள் நலன் ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு இயங்கினேன். எனக்கு உதவியாக இருந்து வழிகாட்டியவர் கே.கோவிந்தசாமி நாயுடு. டாக்டர் கிரிதர கோபாலகிருஷ்ணன், டாக்டர் வி.பி.சண்முகசுந்தரம், டாக்டர் சக்திவேல், பொது மேலாளர் வேலுச்சாமி, சுகந்தா, சுகந்தராணி ஆகியோரின் கடந்த 40 ஆண்டுகால அர்ப்பணிப்பு மறக்க முடியாதது.

நோய்க்கு ஏழை, பணக்காரன் என்று தெரிவதில்லை. அதனால் நாங்களும் அந்த வேறுபாட்டைக் கருத்தில் கொள்வதில்லை. பணம் இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் எனத் தனித்தனியே எங்களது மருத்துவ சேவையில் வேறுபாடு காட்டுவதில்லை. பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால் ஒரு உயிரின் மதிப்பு, அதற்கு ஈடானது அல்ல என்பதை நான் நன்கு அறிவேன். ஏழைகளின் நன்றி மனப்பான்மைக்காகவே அவர்களுக்கு விபத்து, அவசர சிகிச்சை, சிக்கலான அறுவை சிகிச்சை, தீக்காயம், தற்கொலை முயற்சி என எல்லாவிதமான மருத்துவ சேவையையும்

வழங் ஓர் சிறந்த இடமாக, அன்பாக அரவணைக்கும் தளமாக எங்கள் கே.ஜி. மருத்துவமனை இயங்கி வருகிறது. இதற்காக என்னுடன் இருக்கும் மருத்துவர்களும், பணியாளர்களும் அயராது பாடுபடுகிறார்கள். எனது வாழ்நாள் நோக்கம், என்னால் முடிந்த மட்டும் பிறருடைய துன்பத்தின் அளவை ஓரளவு குறைக்க முயற்சிப்பதே. அதற்காகவே குறைந்த கட்டணத்தில், இலாபம் இல்லையென்றாலும் நிறைவான சேவையை செய்து வருகிறேன். எனது கடவுள் முருகனின் அருளால் அனைத்துத் தடைகளையும் வெற்றிப்படிக்கட்டுகளாக மாற்றி முன்னேறி வந்துள்ளோம்.

என்னுடைய இளமைக் காலகட்டம் வேறு, உணவுமுறை, வாழ்க்கை முறை வேறு. தற்போது சில குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே இருதயக் கோளாறுகள் ஏற்பட்டு விடுகின்றன. அவர்களின் பெற்றோர், அந்த இளம் தளிர்களின் நலம் காக்க வேண்டி மிகவும் துன்பப்படுவது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இதனைக் கருத்தில்கொண்டு இந்த Little Heart Foundation அறக்கட்டளை முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களால் துவக்கப்பட்டது. இதன்மூலம் இந்த உலகிலுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் உதவ வேண்டும் என்பதே எனது தீராத ஆசை. அதற்கு முதற்படியாக, தமிழ்நாட்டில், கோயமுத்தூரில் உள்ள குழந்தைகளுக்கு உதவி, அவர்களையும் காப்பாற்றி, அவர்களது பெற்றோரின் கண்ணீரையும் துடைத்திடவே இந்த அறக்கட்டளை.

மருத்துவர்களைக் கடவுளாக பார்ப்பவர்கள், தமிழர்கள். அவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் மற்றொரு தமிழனாகத் தோள் கொடுக்க வேண்டியது எனது கடமை. மேலைநாட்டு அறிஞர்கள், ஒருவருக்கு 80 வயதில்தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது என்கிறார்கள். எனது ஆரம்ப காலகட்டத்தில் வசதி, வாய்ப்புகள் குறைவாக இருந்தது. தற்போது வசதிகள் இருக்கும்போது என்னுடைய 80 வயதை அறுபதாகக் குறைத்துக்கொண்டு இந்தக் குழந்தைகளுக்காக உழைக்க முயற்சிக்கிறேன்.

எனது கடின உழைப்பிற்காக கடவுள் கொடுத்த இந்த மருத்துவமனை, பெயர், புகழ் இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு இந்த மக்களுக்காக, குழந்தைகளுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை. நல்ல கொள்கையும், எண்ணமும் சரியாக இருந்தால் நமக்குக் கடவுள் துணை இருப்பார் என்பது நம்பிக்கை.

கடவுள் நேரில் வந்து ஒருவரைக் காப்பாற்ற மாட்டார். அவர் தனக்குப் பதிலாக ஒருவரை அனுப்பி நோயுற்றவரைக் காப்பாற்றுவார். அவர்தான் மருத்துவர். ஆகவே, மாதா, பிதா, குரு, மருத்துவர், தெய்வம் என்பதே அனுபவக் கருத்து. நோயாளிக்கு நம்பிக்கையைக் கொடுப்பதும், அறுவை சிகிச்சை செய்ய மருத்துவருக்கு சக்தியைக் கொடுப்பதும் கடவுள். எனது மருத்துவர்கள் அருண்குமார், ராஜ்குமார் போன்றவர்கள் நல்ல உத்வேகத்தைக் கொண்டவர்கள். எங்களது நோக்கம் ஒன்றுதான், மக்களுக்கு சேவையாற்றுவதே. நாம் செய்யும் ஊழியத்திற்கு கட்டாயம் தகுந்த சன்மானம் கிடைக்கும். பணம் சம்பாதிக்க இந்த உலகில் எவ்வளவோ வழிகள் உள்ளன. ஆனால், இலாபம் கிடைக்கும் என்ற நோக்கில் இந்த புனிதமான மருத்துவத் தொழிலை செய்யக் கூடாது. இந்தத் தொழில் மனிதர்கள் தேர்ந்தெடுப்பதல்ல, கடவுளின் அழைப்பால் ஒருவருக்கு கிடைக்கக்கூடிய அம்சம். எனவே, வருங்காலத்தில் மாணவர்கள் இந்த நோக்கத்துடன்தான் இத்தொழிலுக்கு வர வேண்டும். 1 சதவீதம் நமது உழைப்பு, தகுதி, 99 சதவீதம் இறைவனின் அருள் என்ற நல்ல உணர்வுடன் இயங்கி வருகிறோம், இனியும் இயங்குவோம்.

அதன்படி, கடந்த 2 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த Little Heart Foundation அறக்கட்டளைக்கு, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் அவரது காலத்திலேயே ரூ.2 இலட்சம் கொடுத்து ஏழைக் குழந்தைகளுக்கு சேவை செய்ய இதனை மூலதனமாக வைத்துக்கொள் என்றார். தற்போது இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்து, நமது தமிழ்நாடு மாநில மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆதரவு தந்துள்ளார்.

இன்றைக்கு 1 முதல் 10 வயது வரையுள்ள குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில்லை, நல்ல ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இல்லை. அதனால் அவர்களுக்கு பிறக்கும்போதே இருதயக் கோளாறுகள் ஏற்படுகின்றன. தற்போது இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 20,00,000 குழந்தைகள் இவ்வாறு பிறவி இருதய நோயுடன் பிறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் ஐந்தில் ஒருவர் தீவிர இருதய நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இக்குறைபாடு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 78,000 குழந்தைகள் இறக்கின்றனர். எனவே, ஆரம்ப நிலையிலேயே அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே இருதய பரிசோதனையானது, நோயைக் கண்டறிய உதவும்.

சுமார் 500 பள்ளிகளில் குழந்தைகளுக்கு இருதய மருத்துவப் பரிசோதனை செய்து, ஏதேனும் இருதயக் குறைபாடுகள் இருந்தால், அவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதியுதவி கிடைத்தால் பெற்றுக்கொண்டு, ஏழைகளிடம் எந்தத் தொகையும் வாங்காமல் எங்கள் கே.ஜி. மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை செய்வது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

இந்த குழந்தைகள் இதயம் காக்கும் திட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இதயம் காப்போம் திட்டத்துடன் இணைந்து, 2,000 பேருக்கு சேவை செய்யவுள்ளோம். இந்த சேவைகளை செய்திட எங்களிடம் இருதய மருத்துவ சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற 12 மருத்துவர்கள் உள்ளனர்.

எக்கோ கார்டினேஸ்ட் 6 பேர், இசிஜி டெக்னிசீயன் 4 பேர் உள்ளனர். இதற்காக எங்கள் மருத்துவமனையில் பணியாற்றிய 300 பேர் ஆதரவு கொடுப்பதாகக் கூறியுள்ளனர். தினசரி மாநகராட்சி, நகராட்சி, அரசு ஆரம்பப் பள்ளி, பஞ்சாயத்துப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அடுத்த இரண்டு மாதங்களில் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சென்று குழந்தைகளைப் பரிசோதிப்பது, அவர்களுக்கு ஏதேனும் குறைபாடு இருந்தால் அதனை நிவர்த்தி செய்து தருவது என நாங்கள் பொறுப்பேற்றுள்ளோம்.

இதுவரை எங்கள் மருத்துவமனையில் 1 இலட்சம் பேருக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்துள்ளோம். 50,000 பேருக்கு இலவசமாக கண் மருத்துவப் பரிசோதனை செய்துள்ளோம். அரசு திட்டத்தில் 5000 பேருக்கு இருதய அறுவைசிகிச்சை செய்துள்ளோம்

இத்தகைய அனுபவமும் திறமையும் வாய்க்கப்பெற்ற எங்கள் மருத்துவமனை அறக்கட்டளை மீது நம்பிக்கை வைத்து தொழில் நிறுவனங்கள், இத்திட்டத்திற்கு தங்களால் இயன்ற உதவியை செய்யலாம். நீங்கள் செய்யும் உதவிக்கு வருமான வரித்துறை விலக்கும் உண்டு. எனவே, இந்த இளம் சிறார் இதயம் காக்கும் திட்டத்திற்கு அனைவரும் ஆதரவும் ஒத்துழைப்பும் தந்து, ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு நாங்கள் வழங்கும் சேவைக்கான முயற்சிக்கு உங்கள் ஆதரவுக்கரம் தர வேண்டும்’ என்றார்.

விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணி

குழந்தைகள் இதயம் காக்கும் திட்டத்தினை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணியை (12.4.2023) நடத்தியது.

இந்நிகழ்வில் கே.ஜி. மருத்துவமனைத் தலைவர் கே.ஜி.பக்தவத்சலம் பேசியதாவது, ‘ஒரு குடும்பத்தில் பொருள் ஈட்டக் கூடியவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு படுத்துவிட்டால், அந்தக் குடும்பம் கதியற்று நிற்கும். அதுபோல் இந்தியாவின் எதிர்காலம் எனும் இளைஞர்கள் 30, 40 வயதில் மாரடைப்பால் மரணமடைந்தால் நாடு கதிகலங்கும். எப்படி வேண்டுமானாலும் வாழலாம், எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று வாழாமல், தினமும் சுறுசுறுப்பாக இயங்கி மகிழ்ச்சியாக வாழ இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும். உங்கள் இருதயத்தைக் காக்க தேவையற்ற, கொழுப்பு உணவுகளை சாப்பிடக் கூடாது, புகைப்பழக்கம் தவிர்க்க வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும், பறவைகளைப்போல் பறக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும’ என்றார். விழிப்புணர்வுப் பேரணியில் கே.ஜி. நர்சிங் கல்லூரி, பிசியோதெரபி கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், மேலாளர்கள், டாக்டர் ராவ், டாக்டர் ராமச்சந்திரன், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ராஜ் நடராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.