ஒரு வழியாய் ஓய்ந்த ஆன்லைன் ரம்மி சர்ச்சை!

கடந்த பல மாதங்களாக நடந்து வந்த ஆன்லைன் ரம்மி மசோதா சர்ச்சை தற்போது ஒரு வழியாக ஓய்ந்திருக்கிறது.

ஒரு மாநில அரசு கொண்டுவரும் மசோதாக்கள், ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அந்த கோப்புகளை அவர் ஒப்புதல் அளித்து  மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று அரசியல் சட்ட விதிகள் கூறுகின்றன. ஆளுநருக்கு  மசோதா ஏற்புடையதாக இல்லாமல் இருந்தால் அவர்  மாநில அரசுக்கு திருப்பி அனுப்புவார். சில நேரங்களில் விளக்கம் கேட்பதும், பெறுவதும் உண்டு.  மீண்டும் அந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டு சட்டமாக பிறகு உருவெடுக்கும். ஆனால் தற்போது உள்ள தமிழ்நாடு மாநில அரசுக்கும், தற்போதைய தமிழ்நாடு ஆளுநருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் இயல்பான உறவு சூழலோ தொடக்கத்திலிருந்து இல்லை. அதனால் தமிழக அரசு அனுப்பிய சில மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் பல மாதங்கள் தங்கிவிட்டன. அது குறித்து பலமுறை பலரும் பலவிதமாக பேசியும் பலன் இல்லை.

இதுபோக இப்போதைய ஆளுநருக்கு தமிழக அரசுடன் சுமூகமான சூழல் இல்லை.  ஆளுநர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொதுவெளியில் பேசுகிறார் என்று தமிழக அரசின் முதலமைச்சர் தொடங்கி, அமைச்சர்கள், கட்சிக்காரர்கள் கூறும் அளவுக்கு நிலைமை தொடர்ந்து இருந்து வந்தது. எதிரும் புதிருமாக  கருத்துக்கள் பரிமாறப்பட்டு வந்தன. ஆளுநர் தமிழகம் – தமிழ்நாடு,  தமிழ் மொழி பற்றி கூறிய பல கருத்துக்கள், அதற்கு  திமுக தரப்பு அளித்த எதிர் கருத்துக்கள் என்று விவாதம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

ஒருமுறை சட்டசபையில் ஆளுநர் உரையின்போது,  அரசு தயாரித்து அளித்த ஆளுநர் உரையை, தமிழக ஆளுநர் முழுமையாக படிக்காததோடு வெளிநடப்பும் செய்தார். அது குறித்து தமிழக அரசு ஒரு தீர்மானத்தையும் சட்டசபையில் நிறைவேற்றியது. பொதுவெளியில் ஒரு அரசியல் கட்சி மற்ற கட்சிகளுக்கு பதில் கூறுவது போல ஆளுநரின் கருத்துக்கும் பதில்கள் தொடர்ந்து கூறப்பட்டு வந்தன. அதற்கு ஏற்ப ஆளுநரும் பொதுவாக ஆளுநர்கள் கூற முற்படாத அரசியல் கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். அதில் குறிப்பாக தற்போது நடைபெறும் தங்கள் ஆட்சியை திராவிட மாடல் என்று அதன் முதலமைச்சர் ஸ்டாலின் கூறிவரும் வேளையில் திராவிட கருத்தாக்கம் 50 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டது போல கருத்து தொனிக்கும் வகையில் ஆளுநர் கருத்து கூறினார். இது பல நாள் தொடர்ந்து விவாதத்தை  கிளப்பி வந்தது.

இந்த விவகாரம் இங்கே தமிழ்நாட்டில் நடைபெற்றாலும் இந்திய அளவிலும் இது எதிரொலித்தது. மத்தியில் உள்ள ஆளும் பாரதிய ஜனதா கட்சியானது,  வேறு கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலமாக குழப்பத்தை ஏற்படுத்துவதாக தேசிய அளவில் கருத்து பரவத் தொடங்கியது. மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா – ஆளுநர் ஜெகதீஷ் தன்கர்,  தெலுங்கானாவில்  முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் –  ஆளுநர் தமிழிசை,  கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் – ஆளுநர் ஆரிப் முகமதுகான் என்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மாநில அரசு –  ஆளுநர் மோதல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக பேசப்பட்டது. அப்படியெல்லாம் இல்லை என்று அந்தந்த ஆளுநர்கள் மறுத்தாலும் இந்த குழப்பமானது பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டி இருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நிலுவையில் இருந்த மற்ற மசோதாக்களை விட ஆன்லைன் ரம்மி மசோதா பலரின் கவனத்தையும் ஈர்த்தது. ஏனென்றால் இந்த விளையாட்டு பல குற்றங்கள்,  தற்கொலைகள் நடப்பதற்கும் காரணமாக  பார்க்கப்பட்டது. பல்வேறு விவாதங்களுடன் முதல் முறை நிறைவேற்றிய அதே ஆன்லைன் மசோதாவை இரண்டாவது முறையாகவும் மாநில அரசு ஆளுநருக்கு அனுப்பியது. அதற்கு முன்னதாக பலத்த விவாதங்களுக்கு இடையில் இன்றைய ஆளுநரை திரும்பப் பெறுமாறு கூட திமுக தரப்பில் கூறப்பட்டது. அதற்கு ஏற்ப கிடப்பில் கிடந்த மசோதா பற்றி கருத்து தெரிவித்த ஆளுநர்  முடியாது என்பதன் அடையாளம் தான் கிடப்பில் கிடப்பது என்பது போல பொதுவெளியில் தெரிவித்த கருத்தும் பலவரின் புருவத்தையும் உயர வைத்தது.  இறுதியாக சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் ஒப்புதல் அளித்ததோடு அது சட்டமாக நிறைவேறி தண்டனை அபராதம் போன்ற விவரங்கள் எல்லாம் செய்திகளாகவும் வெளிவந்துவிட்டன.

பொதுவாக நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு குறித்து பேசக்கூடாது என்பார்கள். அதைப்போலவே தமிழக அரசு,  ஆளுநர் போன்ற பெரியவர்கள் இயங்கும் முறை, இயங்குகின்ற விதம் ஆகியவை எல்லாம் மக்களுக்கு சாதாரணமாக புரிய வாய்ப்பில்லை. ஆனால் மத்திய அரசோ, மாநில அரசோ, ஆளுநர்களோ எல்லோருமே மக்கள் நலனுக்காக  உருவாக்கப்பட்ட அமைப்பை தான் வழி நடத்துகிறார்கள் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

அந்த வகையில் ஆன்லைன் ரம்மி மசோதாவை ஆளுநர் ஏன் நிறுத்தி வைத்தார், தற்பொழுது ஏன் ஒப்புதல் அளித்தார் என்று தெளிவாக புரியவில்லை.  ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. ஏராளமான மக்கள் வரிப்பணம், நேரம், ஆற்றல் ஆகியவை இதுபோன்ற விவாதங்களில் வீணாகிறது என்பது மட்டும் புரிகிறது. மக்கள் இந்த நிலையில் வைக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். செய்ய வேண்டிய மக்கள் நலப் பணிகள் ஆயிரக்கணக்கில் காத்துக் கொண்டுள்ளன. அந்த நிலையில் இது போன்ற கருத்து பரிமாற்றங்கள்,  மசோதாவை தூங்க வைப்பது,  தாமதமாக ஒப்புதல் அளிப்பது ஆகியவற்றை  தவிர்த்து  கோப்புகளை விரைந்து இயங்க அனுமதிக்க வேண்டும். அப்பொழுதுதான் அது  மக்களுக்கு நலம் பயக்கும் என்பது உண்மை.  இது துறை சார்ந்தவர்களின் தார்மீக கடமையும் கூட.