ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

பிரான்ஸ் நாட்டில் லியான் நகரில் உள்ள எம்.பி. வே மேலாண்மை மற்றும் வணிகக் கல்லூரியுடன், கோவை நவ இந்தியாவில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திங்கட்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், பிரான்ஸ் எம்.பி. வே மேலாண்மை மற்றும் வணிகக் கல்லூரி சர்வதேசத் தொடர்புகள் மற்றும் மாணவர் சேர்க்கை அலுவலர் அங்கிட் சோனி, ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தில், “ஒருமித்த விருப்பத்தின் அடிப்படையில் இரு கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கல்வி ரீதியான பரிமாற்றம், ஆராய்ச்சி மற்றும் கற்றல் கற்பித்தல், வேலைவாய்ப்பு பயிற்சிகள், கூட்டு ஆராய்ச்சி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான கலாச்சாரப் பகிர்வு, குறுகிய கால மற்றும் ஓராண்டு கால கல்வி சார் பயிற்சிகள் அளிக்கவும், பெறப்படவும் உள்ளன. இதேபோல் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத்துறை மாணவர்கள் கல்விக் கட்டணம் அடிப்படையில் ஓராண்டு காலம் பயிற்சி பெற உள்ளனர்.” என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார், சென்னை பிரான்ஸ் வளாக இணை மேலாளர் ஸ்மிருதி மரியம் ஜோசப், சென்னை கிளை தகவல் தொடர்பு மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஸ்நேகா ஆன் ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.