இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் ‘ப்ளூ டிக்’ பெற கட்டண சந்தா அறிமுகம்

அமெரிக்காவில் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் மெட்டா வெரிஃபைடு எனப்படும் ப்ளூ டிக் பெறுவதற்கு கட்டண சந்தா முறையை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் முதன்முதலில் ஃபேஸ்புக், இன்ஸ்டாவுக்கு ப்ளூ டிக் கட்டண சந்தா சேவை அறிமுகமானது.

ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து பயனர்களுக்கு ‘ப்ளூ டிக்’ கட்டண சந்தாவை மெட்டா நிறுவனமும் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஊடக நிறுவனங்கள், சமூக வலைதள இன்ப்ளுயன்ஸர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் போன்ற பயனர் கணக்குகளுக்கு மட்டுமே ப்ளூ டிக் வழங்கி வந்தது மெட்டா. இப்போது இதனை கட்டண சந்தா முறையில் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, ப்ளூ டிக் பெறும் பயனர்கள் குறைந்தது 18 வயது இருக்க வேண்டும். பயனர்கள் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட போட்டோ ஐடியை வழங்க வேண்டும். Two Factor Authenticator எனப்படும் இரு காரணி அங்கீகாரமும் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மெட்டாவால் சரிபார்க்கப்பட்ட சந்தாதாரர்கள் தங்களது பெயர், புகைப்படம், பயனர் பெயர் அல்லது பிறந்த தேதியை மாற்ற முடியாது. அவ்வாறு மாற்ற வேண்டுமென்றால், மீண்டும் சரிபார்ப்பு செயல்முறையை தொடங்க வேண்டும்.