பெருநகரங்கள் உருவாக்கத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் பங்கு அதிகம்!

திருப்பூர், கோவை போன்ற இடங்களில் உள்ள மிகப்பெரும்பாலான தொழிற்சாலைகளில் மேல்நிலைப் பணிகள் எனும் நிர்வாகப் பணிகள் தவிர மற்ற எல்லா பணிகளிலும் வட மாநில தொழிலாளர்கள் நிறைந்து இருக்கிறார்கள்.

குறிப்பாக திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலைகள், கோவையில் பவுண்டரி மற்றும் பஞ்சாலை சார்ந்த தொழில்களில் லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதுபோக தமிழ்நாடு முழுவதும் சேவைத் துறை என்று அனைத்து பணியிடங்களிலும் வட மாநில தொழிலாளர்கள் நிறைந்தே காணப்படுகிறார்கள்.  சாதாரண உதவியாளர் பணி தொடங்கி, ஹோட்டல்கள், சிறு தொழில்கள், மருத்துவமனை, கட்டிடம் கட்டுதல் என்று எங்கு பார்த்தாலும் வட மாநில தொழிலாளர்கள் நீக்கமற நிறைந்து காணப்படுகிறார்கள்.

பொதுவாக இவர்களை வட மாநில தொழிலாளர்கள் என்று குறிப்பிட்டாலும் இவர்களில் பீகார், ஜார்க்கண்ட், ஒரிசா, அசாம் போன்ற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தான் அதிகம். அதாவது பொருளாதார வளர்ச்சி குறைந்த மாநிலங்களில் இருந்து இங்கு பணியை தேடி வந்தவர்கள் இவர்கள்.

டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற பெருநகரங்கள் உருவாக்கத்தில் இவர்களின் பங்கு அதிகமாகும்.  அதைப்போலவே கடந்த 20 ஆண்டுகளில் திருப்பூர், கோவை போன்ற இடங்களில் எல்லாம் பெரும் தொழிற்சாலைகள் தொடங்கி இன்று தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இவர்கள் ஏதோ ஒரு பணியில் இருக்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை சுமார் 10 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

உள்நாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் என்ற வகையில் இவர்களைக் குறித்த துல்லியமான புள்ளி விவரங்கள் எதுவும் இல்லை. வெளி மாநிலங்களில் இருந்து இவர்கள் எவ்வாறு இங்கு வந்து பணி செய்கிறார்கள்?  தமிழ்நாட்டில் இருந்து பெங்களூர், மும்பை என்று போன தொழிலாளர்கள் ஏராளம். அப்படி இருக்கும் பொழுது வடமாநில தொழிலாளர் இங்கே வருவதற்கான காரணம் என்ன?

இங்குள்ள இளைஞர்கள் மற்றும் பணி செய்யும் தகுதி கொண்டவர்களில் மிகப்பெரும்பாலோனோர் உடல் உழைப்புக்கு தயாராக இல்லை. ஒயிட் காலர் எனும் ஆபிஸர் பணியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறார்கள். இன்னொரு புறம் சாதாரண பணிக்கான திறன் கூட இல்லாமல் வெற்று டிகிரியை கையில் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் அதே நேரத்தில் வடமாநில தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊரில் வேலைவாய்ப்போ, குறைந்தபட்ச பணமோ இல்லாதவர்கள். அதனால் குறைந்த ஊதியத்தில் பணிபுரிய தயாராக இடம் பெயர்ந்து இங்கு வருகிறார்கள். அவர்களுக்கு பெரிய அளவில் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லை. அவர்களின் கவனம் முழுவதும் பணி, ஊதியம் என்று இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டு தொழிலாளர்கள் நிலை அவ்வாறு இல்லை என்று தொழில் அதிபர்கள் சார்பில் கூறப்படுகிறது.

திருப்பூர் போன்ற இடங்களில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக ஒரு வீடியோ கிளம்பி பீகாரில் ட்ரெண்ட் ஆனது.  தமிழ்நாட்டில் ஒரு ரயிலில் வட மாநில தொழிலாளர்களை ஒருவர் தாக்கும் செய்தியும் காட்டப்பட்டது. ரயிலில் நடந்த சம்பவம் உண்மை. அந்த நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

ஆனால் திருப்பூரில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் வீடியோ போலி என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனை எடுத்து பீகாரில் உள்ள பாஜகவின் ஒரு முக்கிய நிர்வாகி பரப்பியதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு உடந்தையாக சிலரும் செய்தி பரப்பிய குழுவில் சிலரும் இருக்கின்றனர். உடனடியாக தமிழக அரசு இது குறித்து சிறப்பாக நடவடிக்கைகளை எடுத்தது.

பீகாரில் இருந்து அதிகாரிகள் குழு ஒன்று இங்கே வந்து கோவை, திருப்பூர், சென்னை ஆகிய இடங்களில் விசாரணை நடத்தி அதுபோல எந்த தாக்குதல் சம்பவமும் நடக்கவில்லை என்றும் உறுதி செய்தது.

ஆனால் இதில் இந்த சிக்கல் முடிந்தபாடு இல்லை. இதில் அரசியல் புகுந்து விட்டது. பாரதிய ஜனதா கட்சியானது, திமுக வட மாநிலங்கள் பற்றி முன்பு சொன்ன கருத்தை இப்பொழுது ஊதி கிளப்புகிறது. திமுகவோ எதிர் தரப்பு மீது காட்டம், அண்ணாமலை மீது வழக்கு, பீகாரருக்கு சென்று கைது என்று தமிழ்நாடூ அரசாங்கம் பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

இது அரசியல் லாபத்துக்காக கிளப்பக் கூடிய பிரச்சனை என்பதை தாண்டி மிகப்பெரிய பொருளாதார சிக்கலையும், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல சிக்கல்களையும் கொண்டு வரக்கூடிய ஒன்று என்பதை இதில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகள் உணர வேண்டும். ஏனென்றால் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் பல ஆண்டுகளாக படிப்படியாக உருவாகி, தொழில், வணிகம் ஆகியவற்றுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறையால் வெளி மாநிலங்களில் இருந்து இங்கு கொண்டு வந்து பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த பணியின் மூலமாக கிடைக்கும் லாபம் என்பது இந்திய நாட்டின் பொருளாதாரத்துக்கு உறுதுணையாக இருக்கிறது.

பொதுவாகவே தொழில் வளர்ச்சி மிகுந்த மாநிலம் என்று சொல்லிக் கொள்ளும் தமிழகத்தில் அதற்கு தேவையான தொழிலாளர்கள் இல்லாத நிலைதான் உள்ளது. ஏதோ ஒரு காரணத்தால் இந்த வட மாநில தொழிலாளர்கள் வேண்டாம் என்று இடம் பெயர்ந்து போய்விட்டால் நமது தொழில் உடனடியாக என்ன ஆகும் என்று எண்ணிப் பார்க்க வேண்டியது அவசியம்.

தொழில், வணிகம், பொருளாதாரம், ஏற்றுமதி, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு என்று பலவற்றையும் உள்ளடக்கிய இந்த இந்த விஷயத்தில் வெறும் அரசியல் லாபத்துக்காக அரசியல் செய்வது என்பது மக்களுக்கும், தொழில் வளர்ச்சிக்கும் எதிரானதாகவே பார்க்கப்படும்.