எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் 39 வது நிறுவனர் நாள் விழா கொண்டாட்டம்

கோவை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் 39 வது நிறுவனர் நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்விற்கு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி தலைமை வகித்தார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றி 25 ஆண்டுகள் நிறைவு செய்த மருத்துவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் 29 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினராகத் ‘தன்னம்பிக்கைப் பேச்சாளர்’ பர்வீன் சுல்தானா கலந்து கொண்டு பேசியதாவது: சொல் மிகவும் சக்தி வாய்ந்தது. யாருடைய உதட்டில் ஒளிந்து கொண்டிருக்கும் சொல், நம்முடைய வாழ்க்கையை மாற்றும் என்று சொல்ல முடியாது. ஏதாவது ஒரு சொல் நம்முடைய வாழ்க்கையை மாற்றி விடாதா? நாம் தயாராக இல்லாத காரணத்தால் அது புரிவதில்லை.

யார் விழிப்புடன் இருக்கின்றனரோ? அவர்கள், அச்சொல்லை கையகப்படுத்திக் கொள்வார்கள். ஒருவர் சொல்லக்கூடிய சொல் எப்போது, நம் மனதில் தொட்டுக் கொண்டு நிற்கிறதோ, அச்சொல்லே மாற்றத்தை ஏற்படுத்தும்.

1970-ம் ஆண்டு யாருடைய சொல்லில் இருந்து உருவானதோ, இந்த அறக்கட்டளை தற்போது விருட்சமாக வளர்ந்து காணப்படுகிறது. அனைவரையும் சமமாகப் பாவிக்கும் நல்லெண்ணம், இந்நிறுவனத்தை இன்னும் பல தலைமுறைக்கும் நீடித்து நிற்கும்.

இளைய சமுதாயம் தடுமாறும் போதுதான், நம்முடைய முன்னோர்களின் அறமும், ஆலோசனைகளும் தேவைப்படுகிறது. சுய ஒழுக்கம், கட்டுப்பாடு, உத்வேகம் இருந்தால் தான் உயர்ந்த இலக்கை அடைய முடியும் என்று கூறினார்.

விழாவில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், அறங்காவலர்கள் நரேந்திரன், ராமகிருஷ்ணா, தலைமை செயல் அலுவலர் ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரி முதல்வர் சிவக்குமார், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.