ஓபிஎஸ் எதிர்காலம் என்ன?

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அதிமுகவை இபிஎஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது என்பது பொதுவான பார்வையாக உள்ளது. இந்நிலையில், கட்சியை விட்டு எடப்பாடி பழனிசாமி அணியால் நீக்கப்பட்ட ஓபிஎஸ், ஏற்கெனவே நீக்கப்பட்ட ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

இந்த மூவருமே தென் மாவட்டங்களில் கணிசமான எண்ணிக்கை வலுவைப் பெற்றுள்ள முக்குலத்தோர் ஜாதித் தொகுப்பை சேர்ந்தவர்கள். திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கிய காலத்தில் இருந்தே அதிமுகவுடன் முக்குலத்தோரில் கணிசமான பகுதியினர் தீவிர ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதா தலைமையில் அதிமுக செயல்பட்ட காலத்தில் அதிமுகவுக்கு வலுவான பின்புலமாக விளங்கிய சாதி இது.

அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அருகே இருந்து முடிவுகளை எடுப்பதில் பெரும் செல்வாக்கு செலுத்திய சசிகலா தங்களது சாதியைச் சேர்ந்தவர் என்பதால், முக்குலத்தோர் சாதியினரில் கணிசமானோருக்கு அதிமுக தங்களுடைய கட்சி என்ற உணர்ச்சி இருந்தது. எனவே, முக்குலத்தோருக்கு அதிமுகவும், அதிமுகவுக்கு முக்குலத்தோரும் முக்கியம் என்ற நிலை இருந்தது.

1989 முதல் 1991 ஆட்சிக் காலத்தில் திமுக அறிமுகம் செய்த மிகப்பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் பயன்பெற்ற பெரிய சாதிகளில் முக்குலத்தோர் தொகுப்புக்குள் வரும் சீர்மரபினர் உண்டு என்றாலும், அதனால்கூட இந்த சாதியினர் மத்தியில் திமுகவுக்கான ஆதரவை அதிகரிக்க முடியவில்லை.

அந்த அளவுக்கு அதிமுக, முக்குலத்தோர் உறவு வலுவாக இருந்தது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தின் கடைசி நாள்களில் இந்த மிகப்பிற்படுத்தப்பட்டோர் தொகுப்புக்கான இட ஒதுக்கீட்டில் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்த வன்னியர்களுக்கான தனி உள் ஒதுக்கீடு, சீர் மரபினரை கடுமையாக கோபப்படுத்தியது. சசிகலா, தினகரன் வெளியேற்றம், ஆட்சியில் எடப்பாடி என்று நிலைமை மாறத் தொடங்கியதுமே தளரத் தொடங்கியிருந்த அதிமுக, முக்குலத்தோர் பந்தம், இந்த வன்னியர் உள் ஒதுக்கீட்டின் மூலம் முற்றிலும் சீர் குலைந்தது.

2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி செல்வாக்கு மிகுந்த கொங்கு மண்டலத்தில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெறுவதற்கு ஓரளவு உதவிய இந்த உத்தி, ஓ.பி.எஸ்.க்கான வாக்குத் தளமாக விளங்கியிருக்க வேண்டிய தென் மாவட்டங்களில் அதிமுகவின் நிலைமையை படு மோசமாக்கியது.

அதிமுக வேட்பாளர்கள் தேர்தல் களத்திலேயே கடும் சவால்களை எதிர்கொண்டனர். வன்னியர்கள் பெருமளவில் வாழும் வட மாவட்டங்களில் அதிமுகவுக்கு பெரிய அளவில் பலனை பெற்றுக்கொடுக்காத இந்த கடைசி நேர உள் ஒதுக்கீட்டு நடவடிக்கை, அதிமுகவின் மரபான செல்வாக்குத் தளமான தென் மாவட்டங்களில் கட்சியின் வாய்ப்புகளை பறித்தது.

எடப்பாடி மீண்டும் முதல்வராகும் வாய்ப்பைப் பறித்த பல்வேறு காரணிகளில் இதுவும் ஒரு முக்கியக் காரணியாகிவிட்டது. ஆனால், ஓ.பி.எஸ். வாக்குத்தளமான தென் மாவட்டத்தில் கட்சிக்கு பெரும் தோல்வியையும், எடப்பாடி வாக்குத் தளமான மேற்கு மாவட்டங்களில் கட்சிக்கு பெரும் ஆதரவையும் ஒரு சேர பெற்றுத் தந்ததன் மூலம் கட்சிக்குள் ஓபிஎஸ்சுக்கு பிடி ஏதும் இல்லாமல் செய்தது. அந்த அளவில் எடப்பாடி செய்தது மிக சாதுர்யமான நடவடிக்கை. கட்சி ஓ.பி.எஸ். கையை விட்டுப் போவதற்கான முக்கியமான அடி அதுதான்.

இப்படி கட்சியைக் கைப்பற்றும் உத்தியில் எடப்பாடி அப்போது தொடங்கிய பயணம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் கிட்டத்தட்ட முழுமையை நோக்கி வந்திருக்கிறது. ஆனால், வடமாவட்டங்களில் வழக்கமாகவே உறுதியான ஆதரவுத் தளத்தைக் கொண்டிராத அதிமுக, ஓ.பி.எஸ். சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியை விட்டு வெளியேற்றும் முயற்சியில் அவர்களோடு சேர்த்து, அதிமுக ஆதரவுத் தளமான முக்குலத்தோர் ஆதரவையும் வெளியேற்றியிருக்கிறது.

அது மட்டுமல்ல, ஏற்கெனவே தமிழ்நாடு தழுவிய கட்சி என்ற பிம்பத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் கொங்கு மண்டலத்தில் மட்டும் செல்வாக்கு செலுத்தும் கட்சி என்ற ஆபத்தான பிம்பமும் அதிமுக மீது படியத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தென் மாவட்டத்தில் குறிப்பாக, முக்குலத்தோர் மத்தியில் ஆதரவை மீட்டெடுப்பது அதிமுகவின் தேர்தல் வெற்றிக்கு இன்றியமையாதது.

உதயகுமார், செல்லூர் ராஜு போன்ற தலைவர்கள் மூலம் முக்குலத்தோர் பிரதிநிதித்துவத்தை ஈடு செய்ய அதிமுக முயன்றாலும், சசிகலா, தினகரன் இப்போது ஓபிஎஸ் என்று வலுவான முகங்களை வெளியேற்றிவிட்ட நிலையில், இது தங்களுக்கான கட்சி என்ற எண்ணத்தை முக்குலத்தோர் மத்தியில் ஏற்படுத்துவதில் எடப்பாடி பழனிசாமி எந்த அளவுக்கு வெற்றி பெறுவார் என்பதைப் பொறுத்தே எடப்பாடி அதிமுகவை அரசியல் ரீதியில் முழுமையாக வென்றுவிட்டாரா என்பது தெரியவரும் என்று தோன்றுகிறது.

கட்சி அமைப்பைக் கைப்பற்றுவது வேறு, கட்சியின் ஆதரவுத் தளம் முழுவதையும் கைப்பற்றுவது வேறு. இந்நிலையில், ஓ.பி.எஸ்., சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கான அரசியல் ரீதியிலான என்ன வாய்ப்பு இருக்கிறது? இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு இவர்கள் மூவரும் ஒன்றிணைந்து செயல்பட முடியுமா என்பது ஒரு கேள்வியாக எழுந்துள்ளது.

பாஜக பிடி தளரவில்லை

இது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டபோது, அதிமுக முழுமையாக இபிஎஸ் வசம் சென்றுவிட்டது என்பதை இப்போதும் சொல்ல முடியாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் அதிமுக பொதுக்குழு செல்லும், ஆனால், தீர்மானங்கள் குறித்தும், நிலுவையில் இருக்கும் அதிமுக சிவில் வழக்குகள் குறித்தும் எவ்வித முடிவும் தெளிவுப்படுத்தப்படவில்லை.

மேலும், ஓபிஎஸ் தரப்பினர் இன்னும் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்யவும், தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யும் தீர்ப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் சின்னம் தொடர்பான முடிவை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய முடியும். தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை அடுத்து ஏதாவது ஒரு தேர்தல் வந்தால் மட்டுமே சின்னம் குறித்து முடிவு எடுப்பார்கள். இல்லையென்றால் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வரை இது குறித்து முடிவு எடுக்கப்போவதில்லை.

இ.பி.எஸ்.,யை பொறுத்தவரை இரட்டை இலை சின்னம் வேண்டுமெனில் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்து ஆக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. எனவே, அதிமுகவின் பிடி இப்போதும் பாஜக கையில் உள்ளது. பாஜகவை உதறிவிட்டு காங்கிரஸ் கூட்டணிக்கு இபிஎஸ் மாற முடிவு செய்தால் ஓ.பி.எஸ்.,யை பாஜக பயன்படுத்தி சின்னத்தை கேள்விக்குறியாக்க முடியும். இபிஎஸ், ஓபிஎஸ் விவகாரம் மக்களவைத் தேர்தல் வரை ஜவ்வாய் இழுக்கும்.

அமமுக என தனிக்கட்சி நடத்தும் டி.டி.வி.தினகரனிடம் பேரவைத் தேர்தல் முடிவு படி 2.5 சதவீத வாக்குகள் உள்ளன. ஜெயலலிதாவின் உயிர்தோழி என்ற பிம்பம் மட்டுமே சசிகலாவிடம் உள்ளது. அவர் தனது செல்வாக்கை இன்னமும் தேர்தல் களத்தில் நிரூபிக்கவில்லை. ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரனை புறக்கணித்துவிட்டு திமுகவுக்கு எதிராக அதிமுகவால் வெற்றிக் கூட்டணியை கட்டமைப்பது சிரமம் தான் என்றார்.