கே.பி.ஆர் கல்லூரியில் தொழில்துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தொழில்துறை, மாணவர்களிடம் எதிர்பார்க்கும் திறன், தகுதிகள் என்ன என்பதையும், இன்றைய கார்ப்ரேட் உலகத்தில் கால் பதிக்க உள்ள பட்டதாரிகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் பற்றியும் எடுத்துரைக்கும் வகையில் ‘சினர்ஜி 2023’ நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக தலைசிறந்த கார்ப்பரேட் நிறுவனங்களில் உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் 40 க்கும் அதிகமான பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 4000 க்கும் அதிகமான மாணவர்களுடன் கல்லூரியின் பல்வேறு அரங்கங்களில் கலந்துரையாடினர்.

ரிலையன்ஸ் நிறுவனம், ஜோஹோ, எல்ஜி, பாஷ், பிலிப்ஸ், என்.டி.டி. டேட்டா, சிலிக்கான் லேப்ஸ், ஸ்னைடர் எலக்ட்ரிக் போன்ற பல நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் நிகழ்வில் பங்கு பெற்றனர்.

மாணவர்கள் கல்லூரி காலத்தில் பாடப்புத்தகங்களை கொண்டு அறிவை வளர்த்துக் கொள்வதுடன் தங்கள் பலம், பலவீனம் என்ன, எதிர்கால இலக்குகள் என்ன என்பதை பற்றிய புரிதல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று நிகழ்வில் பேசிய வல்லுநர்கள் கூறினர்.

எதிர்காலத்தில் தாங்கள் கால்பதிக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தில் தங்கள் கல்லூரியில் கற்றுக்கொண்ட துறை சார்ந்த அறிவுடன் மட்டும் செயல்படாமல் பிற துறைகள் சார்ந்த அறிவையும் உடையவர்களாக இருக்க முயல வேண்டும் என்றனர். என்றைக்கு வேண்டுமானாலும் கார்ப்பரேட் நிறுவனத்தில் தங்கள் துறை சாராத பிற துறை தொடர்பான பணி வழங்கப்படலாம் என்பதால் பன்முக திறனும் அறிவாற்றல் கொண்டவர்களாக மாணவர்கள் இருக்க வேண்டும். இதற்கு மாணவர்கள் தங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றனர்.

துறை சார்ந்த ஆர்வமும், தங்கள் சுய இலக்குகளை நிறைவேற்ற தேவைப்படும் திட்டங்களையும் வகுத்துக்கொள்ள மாணவர்கள் முயல வேண்டும் என்று கூறியதுடன் அதை செய்வது எப்படி என்றும் சிறப்பு பேச்சாளர்கள் எடுத்துரைத்தனர்.

தொழில்நுட்ப அறிவாற்றலுடன் பணிவு, பொறுமை, புதியவற்றை கற்றுக்கொள்ள கூடிய ஆர்வம், தெளிவான பேச்சாற்றல் ஆகிய திறன்கள் கார்ப்பரேட் உலகில் கால் பாதிக்கும் எதிர்கால பட்டதாரிகளுக்கு பலமாக அமையும் என்றனர்.

நிகழ்ச்சி குறித்து கல்லூரி முதல்வர் அகிலா கூறுகையில்: பொறியியல் பட்டதாரிகள் தொழில்துறைக்கு ஏதுவான அறிவாற்றல் கொண்டவர்களாக இருந்தால் தான் மக்களின் வாழ்க்கைக்கு உதவும் தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும். எனவே தொழில்துறைக்கு தயாரான திறன்மிகு மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் தலைவர் கே.பி.ராமசாமி அவர்களின் கனவு.

இந்த நிகழ்ச்சி மூலம் மாணவர்கள் தொழில் துறை மற்றும் கார்ப்பரேட் நிபுணர்களிடமிருந்து, நிபுணர்கள் மாணவர்களிடம் இருந்தும் நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும். இந்த நிகழ்ச்சி மூலம் மாணவர்களின் தேவை என்ன என்பதையும், அதற்கு தாங்கள்  செய்ய வேண்டியது என்ன என்பதை பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது என்று கூறியுள்ளனர் என தெரிவித்தார்.