ஓ.டி.டி தளங்கள் அழுத்தமான கதைகளை தேடுகின்றன! – இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் கருத்து

ஓ.டி.டி தளங்கள் புதுமையான மற்றும் அழுத்தமான கதைகளையும், விருவிருப்பான கதாபத்திரங்கள் கொண்ட கதைகளையும் தேடுவதாக இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

ஓ.டி.டி தளங்களுக்கான கதைகளை தயாரிப்பது குறித்த கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி கோவையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கதை அம்சங்கள் குறித்து விவரித்தார்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கிரியேட்டர்ஸ் சம்மிட் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஓ.டி.டி தளங்களுக்கு எப்படி கதைகளை தயாரிக்க வேண்டும், இளைஞர்கள் தங்களது படைப்புகளை ஓ.டி.டி தளங்களில் வெளியிடுவது எப்படி என்பது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மான்ஸ்டர் மற்றும் ஒரு நாள் கூத்து திரைப்படங்களின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்கத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை எழுப்பினர்.

இதுகுறித்து நெல்சன் வெங்கடேசன் கூறியதாவது: ஓ.டி.டி தளங்களுக்கான கதைகள் எப்படி இருக்க வேண்டும்? எப்படிப்பட்ட கதைகள் வெற்றி பெற்றுள்ளன? ஊருக்கு ஏற்ற கதைகள் என்ன என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

புதுமையான மற்றும் அழுத்தமான கதைகளையும், விருவிருப்பான கதாபத்திரங்கள் கொண்ட கதைகளையும் ஓ.டி.டி தளங்கள் தேடுகின்றன. நினைத்த கதைகளை நம்மால் இந்த தளம் மூலம் கொண்டு சேர்க்கலாம். படத்தை விடவும், ஒரு தொடர் கொடுக்கும் தாக்கம் அதிகம். தொடர்கள் மூலமாகவே ஓ.டி.டி தளங்கள் பிரபலமாகின்றன என்பது எனது கருத்து.

கதைகளை வெளிகொண்டு வருவதற்கு பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த திரைத்துறையினருக்கு ஓ.டி.டி தளங்கள் வரமாக உள்ளது. வாய்ப்புகள் நிறைய உள்ளன. அதற்காகவே கிரியேட்டர் சம்மிட்டுகள் நடத்தப்படுகின்றன எனக் கூறினார்.