குடியரசு அணிவகுப்பில் பங்கேற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா மாணவர்களுக்கு பாராட்டு

புதுடெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

அணிவகுப்பு நிகழ்ச்சியில், 6 தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி தேசிய மாணவர் படை சார்பில், இக்கல்லூரியின் பி.எஸ்சி. கணினி அறிவியல் இரண்டாமாண்டு மாணவர் கார்த்திக்ராஜா மற்றும் மாணவர் பரத் வெற்றிவேல், பி.எஸ்சி. உயிரி தொழில்நுட்பத்துறை இரண்டாமாண்டு மாணவி அனுசூயா ஆகியோர் பங்கேற்றனர்.

பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், பி.காம். பி.ஏ. இரண்டாமாண்டு மாணவர் கோபி கிருஷ்ணா கலந்து கொண்டார். இதேபோல் பி.எஸ்சி. கணினி அறிவியல் இரண்டாமாண்டு மாணவி வித்யா, சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்றார்.

குடியரசு தின விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார். 6 தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி தேசிய மாணவர் படை கமாண்டிங் ஆபீசர் மேஜர் அசோக்குமார், பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பேசினர்.

அதைத்தொடர்ந்து குடியரசு அணிவகுப்பில் பங்கேற்ற தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் பாராட்டப்பட்டனர்.

இக்கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தொடர்ந்து 8 வது முறையாகவும், தேசிய மாணவர் படை மாணவர்கள் 6 வது முறையாகவும், குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விழாவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பிரகதீஸ்வரன், சுபாஷினி, நாகராஜன், தீபக்குமார், தேசிய மாணவர் படை அலுவலர் லெப்டினன்ட் விவேக் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.