ஒன்றை நம்பினால் எந்த கேள்விக்கும் இடம் தராமல் நம்புங்கள்! – வால்ட் டிஸ்னி

உலகின் அதிகமானோரை சிரிக்க வைத்த ஒரு நபர் யார் என்று கேட்டால் சார்லி சாப்லின் என்று வரலாறு சொல்லும். உயிரோடு உலா வந்து உலகை சிரிக்க வைத்தவர் அவர். ஆனால் உயிரற்ற ஒன்று சார்லி சாப்லினுக்கு இணையாக உலகை சிரிக்க வைத்திருக்கிறது. சுமார் 82 ஆண்டுகளுக்கு முன்பு கேலி சித்திர உலகத்தில் அடியெடுத்து வைத்து கற்பனை உலகில் கொடி கட்டி பறக்க வைத்த அந்த கதாபாத்திரம் தான் ‘மிக்கிமவுஸ்’. பெரியவர்களை கூட குழந்தைகளாக மாற்றி சிரிக்க வைத்த அந்த மந்திர கதாபாத்திரத்தை உலகிற்கு தந்தவர் வால்ட் டிஸ்னி.

1901 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தில் பிறந்தார் வால்ட் டிஸ்னி. அவருக்கு சிறுவயதில் இருந்தே ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் இருந்தது. ஏழு வயதான போதே அவர், ஓவியங்கள் வரைந்து அண்டை வீட்டுக்காரர்களிடம் விற்பார். பள்ளி பாடங்களை படிப்பதற்கு பதில், எப்போதுமே இயற்கை காட்சிகளையும், விலங்குகளையும் வரைந்து கொண்டிருப்பார். தந்தைக்கு அது பிடிக்கவில்லை என்றாலும், பிடித்த துறையை தேர்ந்தெடுக்குமாறு வால்ட் டிஸ்னிக்கு தாயார் ஊக்கம் ஊட்டினார்.

குடும்பச் சூழ்நிலை காரணமாக சிறு வயதிலேயே தந்தையுடன் சேர்ந்து செய்தித்தாள் டெலிவரி செய்யும் வேலையை சிலகாலம் செய்துவந்தார். இது அவரின் பள்ளி வாழ்க்கையை மிகவும் பாதித்தது.

பின்னர், சிகாகோவின் மெக்கின்லி உயர் நிலைப் பள்ளியில் ஓவியம் மற்றும் புகைப்பட துறையில் படித்தார் வால்ட் டிஸ்னி. இரவில் ஒரு நுண்கலை கழகத்தில் சேர்ந்து தனது ஓவியத் திறமையை வளர்த்துக் கொண்டார். தனக்கு மிகவும் விருப்பமான திரைப்பட நாயகன் சார்லி சாப்லினைப் போல் அவர் பள்ளியில் நடித்து காட்டுவார்.

ஆசிரியர்கள் அவரை கதை சொல்லுமாறு கேட்டுக் கொள்வார்கள். அவர் கரும்பலகையில் வரைந்துக் கொண்டே கதை சொல்வார். தந்தைக்கு தெரியாமல் இரவு நேரங்களில் உள்ளூர் அரங்குகளில் நகைசுவை நாடகங்களில் நடித்த அனுபவமும் அவருக்கு உண்டு.

செய்தித்தாள்களில் கார்ட்டூனிஸ்ட் பணிக்காக, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்ட டிஸ்னிக்கு, தோல்வியே கிட்டியது. காரணம், முதலாம் உலகப்போர் காலகட்டம் அது. இந்நிலையில், அமெரிக்கச் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக சிலகாலம் வேலைசெய்தார். பிறகு, ஆர்ட் ஸ்டுடியோ ஒன்றில் வர்ணனையாளராகப் பணிக்குச் சேர்ந்தார்.


டிஸ்னிக்கு கைகொடுத்த எலி

நீண்ட நாள் ஆகியும் தன் உழைப்புக்கான மதிப்பு சரியாகக் கிடைக்காததால், வேலையை விட்டுவிட்டு, 1922 ஆம் ஆண்டு 21 வயதான போது, வால்ட் டிஸ்னி Laugh-O-Gram என்ற தனது முதல் நிறுவனத்தை சகோதரர் ராயுடன் இணைந்து சிறியளவில் தொடங்கினார். தனது மாமாவிடம் இருந்து, 500 டாலர் கடனாக பெற்று அந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். கேலி சித்திர படங்களை உருவாக்குவதில் சோதனைசெய்து பார்த்த அவர், ‘ஆலீஸ் இன் தி கார்ட்டூன் லேண்ட்’ என்ற கேலி படத்தை தயாரித்தார். அது தோல்வியை தந்தது. நிறுவனமும் நொடித்து போனது.

ஆனால் அந்த முதல் தோல்வி அவரை வருந்தவில்லை. மனம் தளராத வால்ட் டிஸ்னி அடுத்து ‘ஆஸ்வல்ட் தி லக்கி ராபிட்’ என்ற புதிய கேலி சித்திரத்தை உருவாக்கினார். இந்தப் படம் வெற்றி பெற்ற போதிலும், படத்துக்கான உரிமையை இன்னொருவர் வாங்கி கொண்டு டிஸ்னியை ஏமாற்றிவிட்டார்.

அப்போதும் மனம் தளராத வால்ட் டிஸ்னி தன் சகோதர் ராயிடம், “இனிமேல் நாம் சொந்தமாக தொழில் செய்வோம் நமக்கு கை கொடுக்க போவது ஓர் எலி. அது நமக்கே சொந்தமாக இருக்கும்” என்று கூறினார். அப்போது உலகுக்கு அறிமுகமான அதிசய எலிதான் மிக்கி மவுஸ்.

முகம், இரண்டு காதுகள் என வெறும் மூன்று வட்டங்களால் உருவானது மிக்கி மவுஸ். பிறந்த ஓரிரு ஆண்டுகளுக்கு உள்ளேயே அது உலகப் புகழ் பெற்றது. வால்ட் டிஸ்னியின் பக்கம் ஹாலிவுட்டின் கவனம் திரும்பியது. மிக்கிக்கு உருவம் தந்த டிஸ்னி தான், அதற்கு குரலும் கொடுத்தார். அவர் அடுத்தடுத்து தயாரித்த ஸ்டீம்போட் வில்லி, தி ஸ்கெலீடன் டான்ஸ் போன்ற கேலி சித்திரங்களில் அந்த மிக்கி அடித்த லூட்டியையும், அதன் சேட்டைகளையும் மக்கள் இமை கொட்டாது பார்த்து ரசித்தனர்.

வாத்தும், எலியும்

1932 ஆம் ஆண்டு டிஸ்னி உருவாக்கி தந்த ஃபிளார்ஸ் அண்ட் ட்ரீஸ் என்ற திரைப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. மிக்கி மவுஸ் என்ற சுட்டி எலியை தந்த டிஸ்னி, கேலி சித்திர உலகில் அடுத்து அறிமுகப்படுத்திய வெற்றி கதாபாத்திரம் டொனால்ட் டக் என்ற வாத்து. அந்த வாத்தும், எலியும் செய்த சேட்டைகளை எண்ணி இன்றும் கண் மூடி சிரிப்பவர்கள் ஏராளம்.

 

1937 இல் ‘Snow White and the Seven Dwarfs’ எனும் முழு நீள கேலி சித்திரத்தை தயாரித்து வழங்கினார் டிஸ்னி. அதற்கு அப்போது ஆன செலவு ஒன்றரை மில்லியன் அமெரிக்க டாலர். அவ்வளவு பொருட்செலவில் உருவான அந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. அதன் பின்னர் பினோச்சியோ, பேண்டசியா, டம்போ, பாம்பி போன்ற புகழ் பெற்ற படங்களை அவர் தந்தார்.

நிஜமான கற்பனை உலகம்

திரையில் மட்டுமே காட்ட முடிந்த கற்பனை உலகை நிஜமாக்கி காட்ட விரும்பிய டிஸ்னி 1955 இல் 17 மில்லியன் டாலர் செலவில் மிகப்பெரிய டிஸ்னிலேண்ட் பார்க் என்ற பொழுது போக்கு பூங்காவை அமெரிக்காவில் ஆர்லாண்டோ நகரில் உருவாக்கினார். டிஸ்னிலேண்ட் பூங்கா நிச்சயம் முதல் ஆண்டிலேயே நொடித்து போகும் என்று பலர் ஆருடம் கூறினர். ஆனால் அதனை பார்க்க வந்தவர்களோ அதனை பூலோக சொர்க்கம் என்று வர்ணித்தனர். முதல் 25 ஆண்டுகளில் பல உலக தலைவர்கள் உட்பட 200 மில்லியன் பேர் அந்த அதிசய பூங்காவை கண்டு ரசித்தனர்.

(வால்ட் டிஸ்னி ஜவஹர்லால் நேரு உடன்) 

தற்போது ஆண்டுக்கு சுமார் 15 மில்லியன் வருகையாளர்களை அது ஈர்க்கிறது. ஒவ்வொரு குழந்தையும் சென்று பார்த்து வர விரும்பும் கனவு உலகம் அது.

டிஸ்னி சிறுவனாக இருந்த போது, பள்ளிக்கு போகும் வழியில் ஒரு பூங்கா இருந்தது. அதில் கட்டணம் செலுத்தினால் தான் விளையாட முடியும். டிஸ்னி அப்போது ஏழ்மையில் வாடியதால் ஒருமுறை கூட அவரால் அந்த பூங்காவில் விளையாட முடியவில்லை. அந்த ஏக்கம் தான் உலகத்தின் மிகப்பெரிய விளையாட்டு பூங்காவை உருவாக்கும் எண்ணத்தை அவருக்குள் விதைத்திருக்க வேண்டும்.

கற்பனைக்கு என்ற சொல்லுக்கு புது அர்த்தம் கொடுத்தவர் வால்ட்டிஸ்னி. கார்ட்டூன் மற்றும் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் பல புதிய மாற்றங்களைப் படைத்ததில் என்றைக்கும் நீங்கா இடம் டிஸ்னிக்கு உண்டு.

குழந்தைகளின் கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ‘டிஸ்னி லேண்ட்’ எனும் பிரமாண்ட செயற்கை கார்ட்டூன் உலகத்தை நிறுவிய வால்ட் டிஸ்னி, 1966 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி தனது 65 வயதில் காலமானார். இறப்பதற்கு முதல்நாள் கூட அவர் பல புதிய எண்ணங்களை நிறைவேற்ற திட்டம் தீட்டி கொண்டிருந்ததாக கூறுகிறார் அவரது சகோதரர் ராய்.

கனவை நனவாக்கும் ரகசியம் என்ன?

இன்று கேலி சித்திரம் என்றால் நம் நினைவுக்கு வரும் முதல் பெயர் மிக்கிமவுஸ். அந்த அதிசய பாத்திரம் எப்படி உருவானது? வால்ட்டிஸ்னியே ஒருமுறை அதை பற்றிக் கூறினார்.

“வாழ்க்கையில் என்ன செய்ய போகிறோம் என்று தெரியாமல் ஒரு பிடிப்பு இல்லாமல் அனைத்தும் இழந்த நிலையில், ஒருமுறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். எப்போதும் போலவே அப்போதும், நான் கற்பனை உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் ஓவிய நோட்டு புத்தகத்தில் நான் கிறுக்கிய காதபாத்திரம் தான் மிக்கிமவுஸ்.” என்றார்.

வால்ட்டிஸ்னியின் சரித்திர வெற்றிக்கு காரணங்கள் என்ன என்பதை அவரே கூறியுள்ளார். “மனிதனுக்கு எட்டாத உயரம் என்று எதுவுமே கிடையாது. அதற்கு கனவை நனவாக்கும் ரகசியம் தெரிந்திருக்க வேண்டும். அந்த ரகசியம் ஆர்வம், தன்னம்பிக்கை, தைரியம், நிலைப்பாடு என்பதே. இந்த நான்கிலும் ஆக முக்கியமானது தன்னம்பிக்கை தான். நீங்கள் ஒன்றை நம்பினால் அதனை உளபூர்வமாக எந்த கேள்விக்கும் இடம் தராமல் நம்புங்கள். அதுதான் வெற்றியின் ரகசியம்.”