“பெண்களைப் பாதுகாப்பது ஆணுடைய கடமை” ஆர்.வி. கல்லூரியில் பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு

டாக்டர். ஆர்.வி‌. கலை அறிவியல் கல்லூரியில் உள்தர மதிப்பீட்டு அமைப்பு மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைப்பின் சார்பாக பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று தலைமையுரையாற்றினார்.

குன்னூர், புஷ்பா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் சுஜாதா சாமுவேல், லைஃப் ஃபார் ஆல் அமைப்பின் நிறுவனர் சைமன் துரைராஜ் மற்றும் லைஃப் ஃபார் ஆல் நிறுவனத்தின் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் ஷெல்டன் பிரைட் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு “இணையப்பயன்பாட்டு நெறிமுறைகளும், இளைஞர் உறவு முறைகளும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.

அவர்கள் பேசியதாவது: வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப உலகில் செல்போன் உபயோகம் இன்றைய இளைஞர் சமுதாயத்திடம் அதிகரித்து வருகிறது. கொரோனா காலக் கட்டங்களில் இணைய வழியில் கல்வி பயின்ற மாணவ, மாணவிகள் முழுக்க முழுக்க அதனை கல்விக்காக பயன்படுத்தாமல் பலர் ஆபாசப்படங்களை பார்த்து, அதனால் உண்டாகும் ஆபத்தை உணராமல் அதற்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து வருகின்றனர்.

தேவையற்ற ஈர்ப்புகளால் உந்தப்பட்டு செய்யும் தவறுகளினால் சிறுமிகளும், குழந்தைகளும் கூட பாதிப்படைகின்றனர். இதனால் அவர்களைச் சார்ந்த குடும்பமும், சமுதாயமும், இந்த தேசமும் பாதிக்கப்படுகிறது.

பெண்களைப் பாதுகாப்பது ஆணுடைய கடமை என்பதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும். பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் புகைப்பழக்கம், கஞ்சா மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் அவர்களுடைய உடல் நலம்,மனநலம், மூளையின் செயல்திறன் அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

இதை எல்லாம் தவிர்த்து நல்லது எது, கெட்டது எது என ஆராய்ந்து, நல்லதொரு வாழ்க்கை வாழ சரியான முடிவு எடுக்கும் திறனை வளர்த்துக் கொண்டால் நாமும் வெற்றியாளர்கள் ஆகலாம் என்று பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.