‘மிஸஸ் தமிழ்நாடு’ அழகி பட்டம் வென்ற கோவை பெண்

நம்பிக்கையே முதல்  அழகு!

ஷாலு ராஜ்

ஒருவரைப் பார்த்த உடன் முதலில் நம்மை கவர்வது அவர்களின் வெளிப்புற அழகே. அதன் பின்னர் அக அழகு தென்படும். அழகுக்கு பலவித அர்த்தங்கள் இருப்பினும், ‘நம்பிக்கை தான் முதல் அழகு’ எனக் கூறுகிறார் ‘மிஸஸ் தமிழ்நாடு’ அழகி பட்டம் வென்ற கோவையைச் சேர்ந்த இளம்பெண்.

பேகாசஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கடந்த 20 வருடங்களாக அழகிப் போட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

சமீபத்தில் இந்நிறுவனம் சார்பில் கேரள மாநிலம் கொச்சியில் தென் இந்திய அளவில் திருமணமான பெண்களுக்கு அழகிப் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டிக்கு தென்னிந்திய மாநிலங்களில் இருந்து 14 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கோவையைச் சேர்ந்த ஷாலு ராஜ் என்பவர் மிஸஸ் தென் இந்திய அழகிப் போட்டியில் (2023) ரன்னர் அப் இடத்தையும், மிஸஸ் தமிழ்நாடு அழகிப் பட்டத்தையும் வென்றுள்ளார். பரக்காட் ஜிவலர்ஸ் தயாரித்த தங்கம் பொதிந்த கிரீடம் ஸ்ரீராம் பரத் (Principal Commissioner Ministry) அவர்களால் வெற்றியாளர்களுக்கு சூட்டப்பட்டது

திருவள்ளுவரின் ‘தோன்றின் புகழோடு தோன்றுக’ என்ற குறளுக்கு ஏற்றவாறு, மற்றவர்கள் போற்றும் அளவுக்கு நம் வாழ்க்கை இருக்கவேண்டும் என அழகிப்போட்டியின் அறிமுக நிகழ்ச்சியில் இவர் கூறியுள்ளது பாராட்டத்தக்கது.

சைக்கலாஜிஸ்ட், தொழில்முனைவோர், நடனக் கலைஞர், உடற்பயிற்சி ஆர்வலர், விளையாட்டு வீரர், குடும்பத் தலைவி என பன்முகத் தன்மை கொண்டவராக, தன்னை எப்போதும் பிஸியாக வைத்துள்ள இவரிடம் சமீபத்தில் எடுத்த நேர்காணலின் தொகுப்பு உங்களுக்காக:

மாடலிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?

எனக்கு ஃபிட்டாக இருப்பது பிடிக்கும். அறிவையும், ஃபிட்னசையும் வெளிப்படுத்தும் இடமாகவே அழகிப் போட்டியை பார்க்கிறேன். ஆரம்பத்தில் அழகிப் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக பயிற்சி எதுவும் எடுக்கவில்லை. துரித உணவுகளைத் தவிர்த்து நமது பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டு வந்தாலே உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக் கோப்பாகவும் வைத்துக் கொள்ளமுடியும் என நம்புகிறேன். அதை நானும் பின்பற்றுகிறேன்.

ஃபிட்டாக இருக்கிறோம். அழகிப் போட்டியில் கலந்துகொள்ள முயற்சி செய்யலாம் என நினைத்தேன். கடந்த இரண்டு வருடமாக இதற்காக பயிற்சி எடுத்தேன். நான் வெறும் ஷாலுவாக இருந்திருந்தால், அடிப்படையான விசயத்திற்கு குரல் கொடுத்தால் கூட யாரும் கேட்க மாட்டார்கள். அதற்கு எனக்கு இந்த பட்டங்கள் உதவி புரியும். இதன் வழியாக சமூகத்திற்காக என்னால் குரல் கொடுக்க முடியும்.

நீங்கள் வென்ற பட்டம் குறித்துக் கூறுங்கள்?

நான் கலந்துகொண்ட மிஸஸ் தென் இந்திய அழகிப் போட்டியில் நான்கு துணை பட்டங்களை வென்றுள்ளேன். மேடையில் எவ்வளவு நம்பிக்கையாக நடக்கிறோம், சிரிப்பு, பயம் இல்லாமல் இருப்பது, உடல் மொழி ஆகியவைக்காக மிஸஸ் ப்ரோமிஸிங் மாடல் எனும் துணை பட்டம் கிடைத்தது. போட்டியின் ஒரு பகுதியாக தொழில் முனைவோருக்கான மாநாடு நடைபெற்றது. அதில் குழுவினருடன் பங்கேற்பாளர்கள் ஒரு கேள்வியை முன்வைக்கலாம். அதில் Environmental service governance பற்றி ஒரு கேள்வியை முன்வைத்தேன். அதற்காக டிலிஜெண்ட்(Diligent) விருது எனக்கு வழங்கப்பட்டது.

இறுதிப் போட்டியில், இந்தியாவில் எந்த விசயத்தை பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படுகிறீர்கள் எனக் கேட்டனர். சிறார் கற்பழிப்புக்கு (Juvenile Rape) கடுமையான சட்டம் அமல்படுத்தவேண்டும் என்றும், இதற்கான வயது வரம்பை 18லிருந்து 15 ஆக குறைக்க வேண்டும் என கூறியதன் அடிப்படையிலேயே எனக்கான வெற்றி உறுதி செய்யப்பட்டது. இதுவெறும் அழகிப் போட்டி மட்டுமில்லை. நம் திறமையும், அறிவும் இங்கு பரிசோதிக்கப்படுகிறது.

உங்கள் அடுத்த இலக்கு? 

தமிழ்நாட்டை முன்னிலைப்படுத்தி அழகிப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என கடுமையாக உழைத்தேன். இதற்காக நான் மனதளவிலும் என்னை தயார்படுத்தினேன். மிஸஸ் சவுத் இந்தியா போட்டிக்கு அடுத்ததாக ‘மிஸஸ் இந்தியா குளோபல்’ போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.

தற்போது அந்த போட்டிக்கு நான் தேர்வாகியுள்ளேன். இதில் இந்தியா மற்றும் தமிழகம் சார்பில் பங்குகொள்கிறேன். இப்போட்டியிலும் நிச்சயம் வெற்றி பெறுவேன் என நம்புகிறேன். தமிழகத்திற்கு பெருமை சேர்க்கவேண்டும் என நினைக்கிறேன்.

திருமணத்திற்கு பின் வீட்டில் ஆதரவு?

திருமணம் எனது கனவிற்கு தடையாக இருந்தது இல்லை. திருமணத்திற்கு முன்பு இருந்தே எனது குடும்பத்தினர் எனக்கு மிகுந்த ஆதரவு அளித்தனர். என் கணவர், மாமனார் – மாமியார், குழுந்தை பக்கபலமாக இருக்கின்றனர்.  என்னை அதிகம் ஊக்கப்படுத்துவார்கள்.

அனைவரும் புரிந்து நடந்து அனுசரித்து செல்வார்கள். என் தியாகத்தை விட என் குடும்பத்தின் தியாகமே அதிக அளவு உள்ளது. நான் பெற்ற பட்டத்தை எனது குடும்பத்தாருக்கு அர்பணிக்கிறேன். அவர்கள் எனக்காக ஒவ்வொரு விசயத்திலும் தியாகம் செய்ததால் தான் இந்த பட்டத்தை பெற முடிந்தது.

திருமணத்திற்கு பின் பெண்கள் ஃபிட்னசுக்கு முக்கியத்துவம் தருவதில்லையே?

திருமணத்திற்கு பின்பு பெண்கள் தங்களை குறித்து யோசிப்பதில்லை. குடும்பம் மற்றும் குழந்தைக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தருவார்கள். ஆனால் நமக்கான நேரத்தையும் எடுத்துக் கொள்வது அவசியம். இல்லையென்றால் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு கூட உள்ளது. குழந்தை பிறந்த சில நாட்களில் இருந்தே நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம். யோகா, உடற்பயிற்சி செய்து பெண்கள் தங்கள் உடல் நலனையும் கவனிக்க வேண்டும்.

இத்துறையில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு கூற விரும்புவது?

தங்கள் நலன் மீது அக்கறை செலுத்திக் கொள்ளவேண்டும். தங்களுக்கான நேரத்தை முதலில் பெண்கள் ஒதுக்கவேண்டும். திருமணத்திற்கு பின்பு குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க நேரிடும். அனைவரையும் கவனித்துக் கொள்ளும் பெண்கள், தங்களை பற்றி நினைக்க மாட்டார்கள். இது அவர்களின் குணம்.

ஃபிட்னசை பொறுத்த அளவில் மிகவும் ஒல்லியாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் மாறுபடும். அதனால் பிறரை போன்று இருக்கவேண்டும் என நினைக்க கூடாது. நமது உடல் அமைப்புக்கு ஏற்ப, எவ்வாறு ஃபிட்டாக இருக்கிறோம், மன நலனை எப்படி சீர்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம்.

குடும்பத்தின் ஆதரவு எந்தளவு முக்கியம்?

திருமணத்திற்கு பின் பெண்கள் எதுவும் செய்யக் கூடாது எனக் கூறும் பழக்கம் இந்தியாவில் உள்ளது. அதை நான் மறுக்கவில்லை. முடிந்த அளவிற்கு குடும்பத்தினரிடம் சொல்லி புரிய வைக்க முயற்சி செய்யவேண்டும். நமது லட்சியத்தை வெளிப்படையாகவும், அதன் முக்கியத்துவத்தை சொல்லி புரிய வைப்பது அவசியம். அதை அவர்கள் புரிந்து கொள்ளும் பட்சத்தில் நிச்சயம் ஆதரவளிப்பார்கள்.

மேக் அப் இல்லாமல் பெண்களால் அழகாக இருக்க முடியுமா?

கண்டிப்பாக இருக்க முடியும். மேக் அப் போட்டாலும், போடாவிட்டாலும் அது தவறு கிடையாது. மேக் அப் போடாதவர்கள் அழகாக இல்லை என சொல்லுவது அர்த்தம் இல்லாதது.  மேக் அப் இல்லாமலும் ஒருவரால் கான்ஃபிடன்ட்டாக இருக்கமுடியும். மேக் அப் என்பது ஒருவரின் சுய விருப்பம். அவர்களது துறைக்கு அது அவசியம் என்றால் அதை பயன்படுத்தி தான் ஆகவேண்டும். என்னைப் பொறுத்தவரை நம்பிக்கை தான் முதல் அழகு என நினைக்கிறேன். ஒரு நல்ல மேக் அப்பை விட, நம்பிக்கையுடன் கூடிய சிரிப்பு தான் சிறந்தது. அது முகத்திற்கு மேலும் அழகை கூட்டும்.

உங்கள் அழகு பராமரிப்பு, உணவுமுறை பற்றி?

ஃபிட்டாக இருக்கவேண்டும் என்பதற்காக நான் இருவேளை ஒர்க்அவுட் செய்வேன். மதியம் சாதம், காய்கறி அல்லது சிக்கன் எடுத்துக் கொள்வேன். காலை முட்டை, பழங்கள் போன்றவை எடுத்துக் கொள்வேன்.

எனது மதிய உணவில் சாதம் தவறாமல் இடம்பெறும். சாதத்தை முற்றிலும் தவிர்ப்பதை நான் விரும்பவில்லை. சிறு தானியங்களையும், அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களையும் உண்ணுவது நல்லது. ஆனால் நாம் சாப்பிடும் போது அளவு மீறாமல் பார்த்து கொள்ளவேண்டும்.