வேளாண் பல்கலையின் தேங்காய் மற்றும் கொப்பரைக்கான விலை முன்னறிவிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம், தேங்காய் மற்றும் கொப்பரைக்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.

வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் மூன்றாவது முன் கூட்டிய மதிப்பீட்டின்படி, 2021- 2022 ஆம் ஆண்டு இந்தியாவில், தோட்டப்பயிர்களின் பரப்பில் தென்னை சாகுபடி சுமார் 51 சதவீதமாகும்.

நம் நாட்டில், தேங்காய் 21.59 இலட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 132.83 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகியவை சேர்த்து மொத்த தேங்காய் உற்பத்தியில் 90 சதவீதம் பங்கு வகிக்கிறது.

தமிழ்நாட்டில், 2021-22 ஆண்டில் தேங்காய் 4.46 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 35.07 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தேங்காய் அதிகளவு பயிரிடப்படுகின்றது.

வர்த்தக மூலகங்களின்படி, பருவ மழையால் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது. தற்போது, பெருந்துறை சந்தைக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி, பொள்ளாச்சி, சேலம், பல்லடம் மற்றும் காங்கயம் ஆகிய பகுதிகளிலிருந்து வருகிறது.

நேரடிகொள்முதல் திட்டத்தின் கீழ், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED) கிட்டத்தட்ட 40,600 டன் கொப்பரையை தமிழ்நாட்டிலிருந்தும், 255.55 டன் கேரளாவிலிருந்தும் 2022 ஆம் ஆண்டில் வாங்கியுள்ளது.

விலை முன்னறிவிப்புத் திட்ட குழு, கடந்த 15 ஆண்டுகளாக ஈரோட்டில் உள்ள அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் பெருந்துறை வேளாண் உற்பத்தி கூட்டுறவு மையத்திலும் நிலவிய தேங்காய் மற்றும் கொப்பரையின் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், மார்ச் – ஏப்ரல் 2023 வரை தரமான தேங்காயின் பண்ணை விலை ரூ.12 முதல் 14 வரை இருக்கும் மற்றும் தரமான கொப்பரையின் பண்ணை விலை ரூ.75 முதல் ரூ.80 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.