ஆளுநர் உருவ பொம்மை எரிப்பு த.பெ.தி.க மீது நடவடிக்கை எடுக்க பாஜக ஆர்ப்பாட்டம்

ஆளுநரின் உருவ பொம்மையை எரித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என மாற்ற முயற்சிப்பதாகவும், சட்டப்பேரவை விதிகளை மீறுவதாகவும், ஜனநாயக மரபுகளை கடைபிடிக்காமல் நடந்து கொள்வதாகவும் கூறி ஆளுநர் ரவியின் உருவ பொம்மை மற்றும் புகைப்படத்தை எரித்து போராட்டம் மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரின் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் சுமார் 30 க்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை கண்டித்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். அனுமதியின்றி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, திராவிடர் கட்சியினர் ஆளுநரின் உருவ பொம்மையை எரித்தது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் மாநிலச் சட்டத்திற்கும் புறம்பானது என தெரிவித்தார்.

மேலும் இச்செயல் தமிழகத்திற்கு கேவலத்தை தேடி தரும். திக மற்றும் திமுகவினரால் ஊக்குவிக்கப்பட்டு இச்செயல் நடைபெற்றுள்ளதாகவும் இவர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், இச்செயலை வன்மையாக கண்டிப்பதாகவும், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தார்.