வி.எல்.பி கல்லூரி சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு

வி.எல்.பி.ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, “கோயம்புத்தூர் விழா”வின் ஒரு பகுதியாக சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பந்தயச்சாலையில் நடைபெற்றது.

கோவை மாவட்டக் காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கு பெற்று நிகழ்வைத் துவக்கி வைத்தார்.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து அவர் பேசுகையில்: இளைஞர்கள் சாலை விதிகளையும், நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும், சாலைகளைக் கடப்பது, வாகனங்களை நிறுத்துவது, வேகக்கட்டுப்பாடு, தலைக்கவசம் அணிவது போன்ற பல்வேறு நெறிமுறைகளைக் கவனமாகக் கையாளும் பட்சத்தில், உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்.

பிரச்சனை சாலைகளால் அல்ல, அது நம் கவனக் குறைவால் தான் என்று கூறியதோடு, நாட்டிற்கும் வீட்டிற்கும் ஒவ்வொரு உயிரின் முக்கியத்துவம் என்ன என்பதனையும்,உயிரிழப்பினால் ஒரு குடும்பம் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் இழக்க நேரிடுகின்றது என்பதை இளைஞர்கள் மனதில் ஆழப் பதியுமாறு வலியுறுத்திக் கூறினார்.

மேலும், சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் துறையின் துணை ஆணையர் மதிவாணன் இந்நிகழ்வில் பங்கு பெற்றார்.

நிகழ்வின் நிறைவாக சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் நடனங்களும், செய்கை நாடகமும் கல்லூரி மாணவர்களால் நிகழ்த்தப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இதில் பங்கு பெற்றனர். மேலும் சாலைப் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு கல்லூரி நிர்வாக அறங்காவலர் சூர்யகுமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி வரவேற்புரை வழங்கினார். துணை முதல்வர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார்.