கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற கோவை மாணவர்கள்

குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் 20 பேர் வெற்றி பெற்று அசத்தி உள்ளனர். கோவை ரயில்நிலையம் வந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

கடந்த 23 ஆம் தேதி குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் 12 வது தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆந்திரா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உ.பி என நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

போட்டிகளை இந்திய கராத்தே அமைப்பின் வழிகாட்டி ஹன்சி பாரத் சர்மா மற்றும் இணை செயலாளர் கல்பேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதில் கோவையிலிருந்து மை கராத்தே சர்வதேச பள்ளியின் இயக்குனர் தியாகு நாகராஜ் தலைமையில் இருபது மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கட்டா, குமித்தே என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில், சப் ஜூனியர், கேடட், ஜூனியர், 21 வயதுக்கு மேல் மற்றும் சீனியர் பிரிவு என நாடு முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு பெற்றனர்.

இதில் கோவையை சேர்ந்த மாணவ, மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று பதக்கம் வென்றனர். இந்நிலையில் குஜராத்தில் இருந்து கோவை திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

இதில் பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.