உணர்வுகளின் பற்றுதலை எப்படிக் கையாள்வது?

நான் சுலபமாக உணர்ச்சிவயப் படுபவள். ஏதோவொரு சூழ்நிலை எனக்கு நன்மை பயக்காது என்பதை உணர்ந்தால், அதிலிருந்து என்னை உணர்வளவில் விலக்கிக்கொள்வது கடினமாக இருப்பதை பலமுறை கவனித்துள்ளேன். இது சரியான திசையில் போகப் போவதில்லை என்பதை என்னால் பார்க்க முடிந்தாலும், என் மனதையும் உணர்வையும் அதிலிருந்து விலக்க மிகவும் சிரமப்படுகிறேன். அதைப் பற்றியே சிந்தித்து உழல்கிறேன், ஆனால் நான் அப்படி இருக்க விரும்பவில்லை. இந்த சூழ்நிலையை நான் எப்படி கையாள்வது?

சத்குரு: நீங்கள் எப்படி உணர்கிறீர்களோ அப்படியே சிந்திக்கிறீர்கள்.

நீங்கள் சிந்திக்கும் விதத்திற்கும் உணரும் விதத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. நீங்கள் எப்படி உணர்கிறீர்களோ அப்படியே சிந்திக்கிறீர்கள்.

வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு விஷயங்கள் முன்னுரிமை கொண்டதாய் அமைகிறது. இன்று பெரும்பாலும் புகட்டப்படும் கல்வி முறையால், பெரும்பாலான மனிதர்களுக்கு அவர்களுடைய சிந்தனையே உணர்வுக்கு முன்னோடியாக இருக்கிறது. இருந்தும் கணிசமான சதவிகிதத்தினருக்கு அவர்களின் உணர்வுகள்தான் சிந்தனைக்கு முன்னோடியாக இருக்கிறது. இப்போதெல்லாம் உணர்வுகள் சிந்தனைக்கு முன்னோடியாக இருந்தால், அவர்களை முட்டாள் போல உணரச் செய்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு உணர்வுகளின் சக்தியும் புத்திசாலித்தனமும் புரிவதில்லை. எனினும் இப்போது மக்கள் உணர்வளவிலான புத்திசாலித்தனத்தை அங்கீகரிக்கத் துவங்கியுள்ளார்கள்.

திசைமாற்றுவதற்கான நேரம்

நீங்கள் இருக்க விரும்பாத சில சூழ்நிலைகள் இருக்கின்றன, ஆனால் உங்கள் உணர்வுகள் அதில் சிக்கியிருப்பதால், சிந்தனை தொடர்ந்து அதையே வட்டமிடுகிறது, அதனால் அறியாமலே அதைநோக்கிச் செல்கிறீர்கள்.

சிந்தனையை வேகமாக திசைமாற்ற முடியும். ஆனால் உணர்வுகள் சாரம் ததும்புவது. அது திசைமாற சற்று காலம் எடுக்கிறது. இன்று நீங்கள், “இவர் உலகத்திலேயே மிக அற்புதமான மனிதர்!” என்று நினைக்கலாம். நாளை அவர் உங்களுக்குப் பிடிக்காத ஏதாவது செய்தால், உங்கள் சிந்தனை உடனே “இவர் சரியில்லை” என்று சொல்லும். ஆனால் உணர்வுகள் உடனே மாறாது. உணர்வுகள் ஏற்கனவே அவர் பின்னால் சென்றிருந்தால், அதனால் அவ்வளவு சீக்கிரமான திசைமாற முடியாது. இந்த இடைப்பட்ட காலத்தில் நீங்கள் போராடுகிறீர்கள்.

மனக் குரங்குகள்

உங்கள் உணர்வுகளையோ எண்ணங்களையோ கட்டுப்படுத்த முயலாதீர்கள். ஏனென்றால், “இந்த நபர் பற்றி நான் சிந்திக்க விரும்பவில்லை” என்று நினைத்துவிட்டால், வாழ்க்கை முழுவதும் அவர்பற்றி மட்டுமே சிந்திப்பதுதான் மனதுடைய குணம்.

இதை உணர்த்த சொல்லப்படும் குரங்குக் கதையை கேட்டிருப்பீர்கள். உங்களிடம், “அடுத்த ஐந்து விநாடிகளுக்கு நீங்கள் குரங்கைப் பற்றி நினைக்கக்கூடாது” என்று சொன்னால், குரங்கை நினைக்காமல் இருக்கமுடியுமா? குரங்கை மட்டுமே நினைப்பீர்கள்! ஏனென்றால் அதுதான் உங்கள் மனதுடைய இயல்பு. “எனக்கு இது வேண்டாம்” என்று நீங்கள் சொன்னால், அது மட்டும்தான் நடக்கும்.

“எனக்கு இந்த உணர்வு வேண்டாம்” என்று சொன்னால், அந்த ஒன்றோடு இன்னொன்று கூடி இரண்டாகும். மனதின் இயல்பே அதுதான். இந்த மனதிலிருந்து எதையும் உங்களால் வற்புறுத்தி விலக்க இயலாது.

தகவல்களிலிருந்து தள்ளி நிற்பது

நீங்கள் என்ன செய்யவேண்டும் என்றால், ஏற்கனவே உங்களுக்குள் பதியப்பட்டு நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்கும் தகவல்களின் மறுசுழற்சிதான் உங்கள் எண்ணங்களும் உணர்வுகளும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த ஞாபகங்களோடு சற்று வாசனையும் கலந்திருக்கிறது, அதனால் மீண்டும் மீண்டும் வருகிறது. உங்களுக்கு அதிலிருந்து சற்று இடைவெளி மட்டுமே தேவைப்படுகிறது.

நீங்கள் விமான நிலையம் சென்றுகொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், வழியில் சாலை நெரிசலில் சிக்கிக்கொண்டால், எவ்வளவு பதற்றமும் போராட்டமுமாக இருக்கும்! பிறகு எப்படியோ விமான நிலையத்தை அடைந்து விமானத்திற்குள் ஏறி அது பறந்துவிட்டால், மேலிருந்து கீழே பார்த்தால் அந்த சாலை நெரிசல் அவ்வளவு அழகான காட்சியாக இருக்கும். சற்று இடைவெளி இருக்கிற ஒரே காரணத்தால்! அதே சாலை நெரிசல்தான், ஆனால் இடைவெளி இருப்பதால் திடீரென அதில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல்போகிறது.

அதேபோலத்தான் உங்கள் எண்ணங்களும் உணர்வுகளும். கொஞ்சம் பயிற்சி செய்தால், உங்கள் உடலின் செயல்பாட்டிலிருந்தும் மனதின் செயல்பாட்டிலிருந்தும் உங்களால் சற்று இடைவெளி உருவாக்கிக்கொள்ள முடியும். ஆனால் ஒவ்வொன்றாக உங்கள் எண்ணத்தையும் உணர்வையும் கையாள முயல்வீர்களேயானால், அவை ஆயிரம் மடங்காகப் பெருகும்.