குறை தீர்ப்பு கூட்டத்தில் சாலைகளை செப்பனிட மாமன்ற உறுப்பினர் கோரிக்கை

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கல்பனா ஆனந்த்குமார் தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பொதுமக்கள் அவர்களது மனுக்களை மேயரிடம் வழங்கினர். மனுகளை பெற்றுக் கொண்ட மேயர் கல்பனா ஆனந்த்குமார் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டார்.

இந்நிலையில் கோவை மாநகராட்சி 41 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி அவரது வார்டில் சாலைகளை செப்பனிட ஆவணம் செய்யுமாறு மனு அளித்துள்ளார்.

அவர் அளித்த மனுவில் 41 வது வார்டு (மருதமலை சாலை பி.என்.புதூர் பகுதி) பகுதியில் 24 மணி நேர குடிநீருக்காக கடந்த ஓராண்டு காலமாக அனைத்து சாலைகளும் சூயஸ் நிறுவனத்தால் தோண்டப்பட்டு குழாய் அமைப்பு பணிகள் முழுவதும் முடியும் தருவாயில் உள்ளது எனவும் பி.என்.புதூர் பகுதியில் சில தெருக்களில் சூயஸ் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்து 24 மணி நேர குடிநீர் கிடைத்து ஐந்து மாத காலங்கள் ஆகிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பணி நிறைவு பெற்ற பகுதிகளில் உள்ள சாலைகளில் சூயஸ் நிறுவனத்திடம் தடையின்மை சான்று பெற்று போர்க்கால நடவடிக்கைகள் அடிப்படையில் சாலைகளை தார் சாலைகளாகவும், சிமெண்ட் சாலைகளாகவும் செப்பனிட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஆவணம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், துணை ஆணையாளர் ஷர்மிளா ஆகியோர் உடனிருந்தனர்.