தமிழக ஆளுநரை திரும்பப் பெறக்கோரி வாலிபர் சங்கத்தினர் தபால் அனுப்பும் போராட்டம்

தமிழக ஆளுநரை திரும்ப பெற கோரி குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தபால் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் தற்பொழுது தொடர் தற்கொலைகள் நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டத்திலும் கடந்த வாரம் ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். எனவே இந்த விளையாட்டை தடை செய்ய கோரி பல்வேறு அமைப்புகள் அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு தடை விதிக்க ஆளுநர் கையெழுத்திடவில்லை என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பு எனக் கூறியும், அவரை திரும்ப பெற வலியுறுத்தியும் கோவை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தபால் நிலையத்தில் கடிதம் அனுப்ப வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அர்ஜுன் தலைமையில் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கண்டனம் முழக்கங்களை எழுப்பியவாறு வந்தடைந்தனர்.

மேலும் தபால் நிலையம் முன்பும் அவர்களது கண்டன முழக்கங்களை எழுப்பினர். அனுமதியின்றி முழக்கங்களை எழுப்பியதால் காவல்துறையினர் அவர்களை தடுத்தனர். இதனால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.