மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மற்றும் பயிற்சி மையம்

சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசப் பயிற்சி அளித்து அவர்கள் வேலைவாய்ப்பைப் பெறவும் உதவி வருகிறது

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கீழ் இயங்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் சென்னையில் உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் சார்ந்த பயிற்சிகளை அளித்து வருகிறது. அத்துடன், மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பைப் பெறவும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி உதவி வருகிறது. இந்த மையம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பட்ட மாற்று திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையமாகும். 1976-ஆம் ஆண்டு முதல் சென்னை கிண்டியில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.

பதிவு செய்யும் முறை

கை கால் ஊனம், காது கேளாமை, கண்பார்வையில் குறைபாடு, மன வளர்ச்சி குன்றியோர் (51-70 க்கும் இடைப்பட்ட IQ – வில் இருப்பவர்கள்), தொழுநோயினால் குணமடைந்தவர்கள் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் இந்த மையத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு பதிவு செய்யும்போது உடல் குறைபாடு 40 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பதிவு செய்வதற்கு மாவட்ட மண்டல மறுவாழ்வு அதிகாரி வழங்கும் மருத்துவச் சான்றிதழ், வயதுச் சான்றிதழ், எந்த வகுப்பைச் சார்ந்தவர் என்பதற்கான சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இங்கு 15 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் பதிவு செய்துகொள்ளலாம். ஆண், பெண் பாகுபாடு கிடையாது. எவ்வளவு படித்திருக்கிறார்கள் என்பதையும் பார்ப்பது இல்லை. ஏற்கெனவே பணிபுரிந்திருந்தால் அதற்கான சான்றிதழை இணைத்து பதிவு செய்யலாம். பதிவு செய்பவர்களுக்கு மறுவாழ்வு அதிகாரியின் தலைமையின் கீழ் இரண்டு சமூகப் பணியாளர்கள் ஆலோசனைகளை வழங்குவார்கள். அதையடுத்து, இங்கு பதிவு செய்தவர்களின் திறமைக்குத் தகுந்தாற்போல், பயிற்சிப் பிரிவுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்து மத்திய அரசு அல்லது மாநில அரசுகள் தகவல் தெரிவிக்கும்போது பதிவு செய்துள்ளவர்களை தேர்வுக்கு அல்லது நேர்முகத் தேர்வுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

மத்திய அரசு 1995-ஆம் ஆண்டு ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது. இதன்படி, ஒவ்வொரு நிறுவனமும் தங்களது வேலைவாய்ப்பில் 3 சதவீத இடங்களை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது. இதில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மட்டுமல்ல, பன்னாட்டு நிறுவனங்களும் தாங்களாகவே முன் வந்து பலருக்கும் வேலை வாய்ப்பினை வழங்குகிறார்கள். இந்த வகையில் ஒவ்வொரு நிறுவனமும் வேலை வாய்ப்பு குறித்து அறிவிக்கும்போது அந்தப் பணிக்கு தகுந்த தகுதி பெற்றவர்களை அதற்கு விண்ணப்பிக்க வைக்கிறார்கள். சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் இதனை நேரடியாக தொடர்புகொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்குகின்றன”.

பயிற்சிகள்

இந்த மையத்தில் பதிவு செய்பவர்களுக்கு ஓராண்டிற்கான கம்ப்யூட்டர் பயிற்சி, தட்டச்சுப் பயிற்சி, ரேடியோ மற்றும் டிவி ரிப்பேரிங் பயிற்சி, வீட்டு உபயோக மின்சாதனங்கள் பழுதடைந்தால் பராமரிப்பு சரிபார்ப்புப் பயிற்சி, டெய்லரிங், போட்டோகிராஃபி, ஸ்கிரீன் பிரிண்டிங், தங்க அளவு நிர்ணயப் பயிற்சி போன்றவை வழங்கப்படுகின்றன. பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆண்களுக்கு தங்கும் வசதியும், குறைந்த கட்டணத்தில் உணவும் வழங்கப்படுகின்றன.

உதவித்தொகை

தேசிய உடல் ஊனமுற்றோர் நிதி மற்றும் முன்னேற்ற நிறுவனம் ஆறு மாதங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்குகிறது. அந்த உதவித் தொகையையும் பெற்றுத் தருகிறது இந்த மையம். அத்துடன், இங்கு பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் மாதாந்திர உதவித்தொகை 110 ரூபாயும் கிடைக்கும்.

இங்கு பயிற்சி பெறுகிறவர்கள் சுய வேலைவாய்ப்பைப் பெற விரும்பினால், அவர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஆலோசனை வழங்கி அவர்களுக்கு நடுத்தர, சிறு தொழில் பயிற்சி நிறுவனத்தின் கீழ் தொழில் முனைவோருக்கான பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. மாற்றுத் திறனாளிக்குத் தேவையான உபகரணங்களை பெற்றுத் தரப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளவர்கள் இங்கு நேரடியாக வந்து பயிற்சி பெறுகிறார்கள். பிற மாவட்டங்களில் இருந்து பதிவு செய்பவர்களுக்கு ஒரு மாத கால பயிற்சி முகாம் அமைத்து, செல்போன் ரிப்பேரிங், வீடுகளுக்கு சோலார் எனர்ஜி கருவி அமைத்துத் தரும் பயிற்சி, காளான் வளர்ப்பு, ரேடியோ அறிவிப்பாளருக்கான பயிற்சி போன்ற பல பயிற்சிகள் தரப்படுகிறது. பயிற்சியினைத் தவிர, பதிவு செய்தவர்களுக்குத் தேவையான செயற்கை அவயங்கள் (செயற்கைக் கால், செயற்கைக் கை போன்றவை), மூன்று சக்கர சைக்கிள் வண்டி, காது கேட்கும் இயந்திரம், கண் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு தொடு உணர்வுக் கருவி, டேப்ரெக்கார்டர் போன்ற கருவிகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.