தொழிற் பூங்கா அமைக்கும் அரசாணையை திரும்ப பெறவேண்டும் – அன்னூர் விவசாயிகள்

கோவை, அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க அனுமதிக்க முடியாது என்றும், இதற்கான அரசாணையை திரும்ப பெறவேண்டும் என அன்னூர் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அக்கரை செங்கம்பள்ளி, பொகளூர் பகுதியில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) சார்பாக தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்த அரசு சார்பில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் இங்கு தொழிற்பூங்கா அமைக்க கூடாது என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் கூட நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, அன்னூர் தொழிற்பூங்கா அமைக்க விவசாயிகளிடம் அனுமதி இல்லாமல் நிலம் எடுக்கப்படாது, அங்கு 2 ஆயிரம் ஏக்கர் தனியார் கம்பெனி நிலங்கள் உள்ளன. அதை தான் கையகப்படுத்த உள்ளோம் என தெரிவித்து இருந்தார்.

ஆனால், இப்பகுதியில் தொழில் பூங்கா அமைக்க அனுமதிக்க முடியாது எனவும், இதற்காக அரசு வெளியிட்ட அரசாணையை திரும்பப்பெறுவதுடன், வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என நமது நிலம் நமது போராட்டக்குழு விவசாயிகள் கோவை பிரஸ் கிளப்பில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போராட்டக்குழுவின் தலைவர் குமார் ரவிக்குமார் கூறியதாவது: எங்கள் போராட்டத்தின் நோக்கம் தொழிற்சாலையோ, தொழிற் பூங்காவோ இப்பகுதியில் வரக்கூடாது என்பது தான். இது இப்பகுதி ஒட்டுமொத்த விவாசயிகளின் கருத்து.

அன்னூர், மேட்டுப்பாளையம் வட்டங்களில் உள்ள விவசாய நிலங்களை பாதுகாப்பதற்காக இந்தப் பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும். அதோடு தொழிற்பூங்கா அமைப்பதற்கு வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்ப பெறவேண்டும்.

ஆ.ராசா பேசும்போது, தனியார் நிறுவனத்தின் 2000 ஏக்கர் நிலங்களை தான் கையகப்படுத்த உள்ளோம் என தெரிவித்தார். ஆனால் அவரிடம் அதிகாரிகள் தவறான தகவலை அளித்துள்ளனர். அங்கு பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனத்திற்கு சொந்தமான 1200 ஏக்கர் நிலம் தான் உள்ளது. அதுவும் முழுமையாக ஒரே இடத்தில் இல்லாமல், விவசாயிகளின் நிலங்களை சுற்றியும் பரவலாக உள்ளது. இரண்டு இடங்களில் மட்டும் 100 ஏக்கர் ஒரே நிலமாக உள்ளது. இப்படி இருக்கும் போது அங்கு தொழிற்பூங்கா அமைப்பது சாத்தியம் இல்லாதது.

1200 ஏக்கரில் 200 ஏக்கர் நிலங்களை அந்த நிறுவனம் விற்றுவிட்டது. அந்த 200 ஏக்கரில் விவசாய பணிகள் மேற்கொள்ள பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் 450 ஏக்கர் நிலத்தில் சில சிக்கல்கள் உள்ளன.

முன்னதாக இந்தப் பகுதியில் பிரிமியர் மில்ஸ் என்ற நிறுவனம் தொழிற்சாலை அமைக்க வந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தொழிற்சாலை அமைக்கும் முடிவு கைவிடப்பட்டது. மேலும், கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் தாங்கள் வாங்கிய நிலங்களை விற்று வருகின்றனர்.

சம்மந்தப்பட்ட மக்களின் ஒப்புதலோடு தான் ஒரு பகுதியில் தொழிற்சாலை அமைக்க வேண்டும். நாங்கள் எங்கள் பகுதியில் தொழிற்சாலை/தொழிற்பூங்கா வரக்கூடாது என்பதில் உறுதியாகி உள்ளோம்.
இந்தப்பகுதியில் ஏற்கனவே நூற்பாலைகள் இயங்கிதான் வருகின்றன. அதனால் எந்த பாதிப்பும் எங்களுக்கு கிடையாது. புதிய தொழிற்சாலைகள் எதுவும் இங்கு வேண்டாம். அதற்கு எந்த அவசியமும் இல்லை.

ஏற்கனவே அன்னூர் அருகே காஸ்டிங் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரை குடித்து ஆடுகள் பலியாகின. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. அப்போது மாநில, மத்திய அரசு ஒரு தொழிற்சாலையின் செயல்பாடுகளை எவ்வாறு கண்காணிக்கிறது என்பதை நாங்கள் கண்கூடாக பார்த்தோம்.

3800 ஏக்கர் நிலத்தில் 100 ஏக்கர் நிலம் அரசு உடையதாகவும், 2600 ஏக்கர் விவசாயிகள் உடையதாகவும்,
1000 ஏக்கர் தனி நிறுவனத்தை சேர்ந்ததாக உள்ளது. இங்குள்ள அனைத்துமே விவசாய நிலங்கள் தான் தவிர தரிசு கிடையாது. மேய்ச்சலுக்காக விடும் நிலத்தை தரிசு என்று சொல்ல முடியாது. நிலத்தை அரசு கையகப்படுத்தும் பட்சத்தில் நாங்கள் நடத்தும் போராட்டங்கள் தொடரும். இந்த போராட்டத்தில் எந்தவிதமான வன்முறைக்கும் அனுமதிக்க மாட்டோம்.

அன்னூரில் என்ன மாதிரியான தொழிற்ச்சாலை வரப்போகிறது என்பது தெரியாது. அப்படி இருக்கையில், மாசுபடாத தொழிற்ச்சாலையை தான் இங்கு அமைக்க போகிறோம் என கூறுவது அபத்தமானது.

ஒரு தொழிற்சாலையினால் அப்பகுதிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு பல போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. இதனை நாங்கள் அனுபவ பூர்வமாக கண்டுள்ளோம். இதுபோன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்படக்கூடாது என நினைக்கிறோம்.

தொழில்துறையினருக்கும் எங்கள் நிலத்தை கையகப்படுத்துவதில் விருப்பம் இல்லை என நாங்கள் சந்தித்த பல தொழில் அதிபர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் எங்களுக்கு ஆதரவளிப்பதாகவும் கூறினர்.

அண்ணாமலை உட்பட அதிமுக, நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் எங்களுக்கு ஆதரவு கொடுக்கின்றன. அரசியல் கட்சிகளுடன் சார்ந்து நாங்கள் யாரும் செயல்படவில்லை என அவர் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பை முன்னிட்டு பத்திரிக்கையாளர் மன்றம் அமைந்துள்ள ஆடிஸ் வீதியில்
அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டிருந்தனர்.