“நவீன இந்தியாவின் சிற்பி”

நேருவை நினைவு கூரும் குழந்தைகள் தினம்

தேசிய குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாட காரணமாக உள்ள இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு குறித்து ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன் சில சுவாரசிய தகவல்களை எழுதியுள்ளார். அதைக் காண்போம்.

முகமது ஜியாவுதீன்

1954 ஆம் ஆண்டில் நவம்பர் 20 ஆம் தேதியை சர்வதேச குழந்தைகள் தினமாக ஐ.நா அறிவித்தது. ஒவ்வொரு நாடும் தனித்தனியாக ஒவ்வொரு தினத்தை தேர்ந்தெடுத்து அந்தந்த நாடுகளின் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் நவம்பர் 14 குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

“குழந்தைகளுக்கு பாதுகாப்பான அன்பான சூழ்நிலையை அளித்து, அவர்கள் வளர்ந்து வரும் வேளையில் சமமான வாய்ப்புகளை வழங்கும் போதுதான் அவர்கள் தேசத்தின் வளர்ச்சியில் பங்கு கொள்பவர்களாக வளர்வார்கள்” என்று கருத்தை முன்வைத்து குழந்தைகள் நலனில் அக்கறையோடும், குழந்தைகள் மீது அன்பாகவும், அடுத்த தலைமுறையின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுபவராகவும் இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
.
1889 நவம்பர் 14-ந் தேதி அலகாபாத்தில் நேரு பிறந்தார். இங்கிலாந்திலுள்ள ஹர்ரோவில் தனது பள்ளிப்படிப்பையும், ட்ரினிட்டி கல்லூரியில் இயற்கை அறிவியலும் படித்து கேம்ப்ரிட்ஜ் மற்றும் ட்ரினிட்டி கல்லூரியில் சட்டம் படித்து தாயகம் திரும்பி வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.

1919 ல் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை’ நேருவை சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடத் தூண்டியது. காங்கிரஸில் இணைந்து மகாத்மா காந்தி அவர்களின் நம்பிக்கைக்குரியவராக உயர்ந்தார். 1920ல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று 1921ல் முதன் முதலாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வசதியான குடும்பத்தில் பிறந்தவர், வழக்கறிஞர் என்ற போதிலும் தேச விடுதலைக்காக தமது
வாழ்நாளில் ஒன்பது வருடங்கள் சிறையில் கழித்தவர். 1926 முதல் 1928 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளராக பணியாற்றினார்.

மகாத்மா காந்தி அவர்களின் வழிகாட்டுதலில், 1929 லாகூரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். இந்தியாவிற்கு பூரண சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்திய சுதந்திரக் கொடி 26.1.1930ல் லாகூரில் நேருவால் பறக்கவிடப்பட்டது.

இந்தியா சுதந்திரம் பெற்றதும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நியமிக்கப்பட்ட நேரு, ஆகஸ்ட் 15, 1947 புதுதில்லியில் சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றினார்.

இந்தியாவின் முதல் பிரதமமந்திரி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராக நேரு, மிகச் சக்திவாய்ந்த வெளிநாட்டுக் கொள்கையுடன் நவீன இந்திய அரசாங்கத்தை மற்றும் அரசியல் கலாச்சாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

“கோபத்தை அன்பாலும், தீமையை நன்மையாலும்தான் போக்க முடியும்!” என்று நம்பிக்கையோடு உலக நாடுகளில் சமாதானத் தூதுவராக வலம் வந்து அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவரில் ஒருவராக இருந்து அனைத்து நாட்டிற்கும் வழிகாட்டினார்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்துப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி “நவீன இந்தியாவின் சிற்பி” என்று புகழப்பட்டார்.

“இன்றைய குழந்தைகளே நாளைய இந்தியாவை அமைப்பவர்கள்! குழந்தைகளை வளர்க்கும் முறையைப் பொறுத்தே நாட்டின் எதிர்காலம் அமையும்” என்ற குறிக்கோளோடு, கடைக்கோடி கிராமத்தில் உள்ள குழந்தைகளும் உலகத் தரத்தில் கல்வி கற்க வேண்டும் என்று திட்டம் தீட்டினார்.

‘இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது’ என்பதை நன்கு உணர்ந்த நேரு , அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மைக் கழகங்கள், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற உலகத் தரம் வாய்ந்த அரசாங்க உயர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தினார்.

கிராமப்புறங்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களையும் அமுல்படுத்தினார். இலவச கட்டாய கல்வித் திட்டத்தை செயல்படுத்தி ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டினார்.

ஓய்வில்லாத பணிகளுக்கு இடையிலும் குழந்தைகளுடன் உரையாடுவதை எப்போதும் தொடர்ந்தவர். ஒரு பிரதமரை குழந்தைகள் “சாச்சா” (மாமா) என்றும் அழைக்கும் உரிமையை குழந்தைகளுக்கு கொடுத்தவர்.

“கோழைத்தனம் என்பது அனைத்தையும் பாழாக்கும். வீரமே அனைத்தையும் வெல்லும். கோழைகள் தான் வன்முறையில் ஈடுபடுவார்கள். வீரர்கள் எப்போதும் சமாதானத்தை தான் நாடுவார்கள்.” என்று இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

“ஜாதகத்தையும் ஜோதிடத்தையும் நம்பி அதில் வாழ்க்கையை தேடாதீர்கள். நல்ல வாழ்க்கை என்பது கடும் உழைப்பின் பின்னால் மறைந்திருக்கிறது.” என்ற நம்பிக்கையை இளைஞர்கள் உள்ளங்களில் விதைத்தார்.

தி டிஸ்கவரி ஆஹ்ப் இந்தியா, க்ளிம்ப்ஸ் ஆப் வேர்ல்ட் ஹிஸ்டரி, சுயசரிதை, டுவார்ட்ஸ் ப்ரீடம்
ஆகிய நூல்கள் நேரு அவர்களின் ஆங்கில எழுத்தாற்றலின் அடையாகமாக இருக்கிறது.

“மிரட்டிப் பணிய வைக்கும் எந்தச் செயலும் வெறுக்கத்தக்கதே” என்று உணர்ந்தவர். “நல்ல கருத்துக்களைப் பேசுபவன் விதைக்குறான். கேட்பவன் அறுவடை செய்கிறான்” என்று நம்பியவர்.

சுதந்திரமான, சமத்துவமான ஜனநாயக இந்தியாவை உருவாக்க தனது வாழ்க்கையை அர்ப்பணித்த நேரு அவர்கள், 1964 மே 27ல் இயற்கை எய்தினார். இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அவரது புகழ் நிலைத்திருக்கிறது. லண்டனில் உள்ள ஆல்ட்விச்சில் நேருவுக்கு சிலை எழுப்பப்பட்டுள்ளது. 1989 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் நேரு அவர்களுக்கு தபால் தலை வெளியிட்டு பெருமை பெற்றது.

குழந்தைகள் தினம் கொண்டாடும் இந்த இனிய தருணத்தில், ஏழ்மையால் கல்வி கற்க வழியின்றி வாடும் குழந்தை தொழிலாளர்களின் வாழ்வில் விளக்கேற்ற வழி காண்போம். அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்க பள்ளி செல்லும் நாள் விரைவில் வரும் என்று நம்புவோம்.