யாரை காக்கப்போகுது தேவர் கவசம்?

தமிழக அரசியலில், குறிப்பாக தென்தமிழகத்தில் முக்கிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுவது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா. மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது சிலைக்கும், பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்துக்கும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் செல்வது வழக்கம்.

6.5 வாக்கு பலம் கொண்ட முக்குலத்தோர் சமூகத்தில் அடையாளமாகவே இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் பார்க்கப்படுகிறது. இத்தகைய குருபூஜையின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், சுதந்திரப் போராட்ட காலத்திலேயே காங்கிரஸ் கட்சியில் இருந்ததும், போட்டியின்றி பேரவைக்குத் தேர்வானதும் தெரிகிறது.

சுதந்திரப் போராட்ட கால கட்டத்தில் மதுரை மகாலட்சுமி மில் தொழிலாளர்களுக்காக போராடி சிறை சென்றார். ரேகை சட்டம், படுக்கை சட்டத்தை எதிர்த்து அப்பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களுடனும் போராடினார்.

காங்கிரஸில் இருந்து வெளியேறி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அதன் பின்னர் இந்திய அரசியலில் மூன்று முறை தொடர்ந்து பெரிய கட்சிகள் ஆதரவின்றி மக்களவைக்குத் தேர்வானவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மட்டுமே.

1952, 1957, 1962 மக்களவை, பேரவைத் தேர்தல் வரலாற்றை ஆய்வு செய்து பார்த்தால் தேவர் தனது தலைமையில் 1.6 சதவீத வாக்குகளை தான் பெற்றிருந்தார். இவ்வாறு காங்கிரஸ் அரசுடன் முரண்பட்டு 1963 இல் இறந்த பின்னர் அவருக்கு குருபூஜை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

தடையை மீறி  மூக்கையா தேவர் முதல் குருபூஜையை நடத்த முயன்றார். 1967 பேரவைத் தேர்தலில் சுதந்திரா, பார்வர்டு பிளாக், கம்யூனிஸ்ட், நாம் தமிழர், சோசியலிஸ்ட் ஆகிய கட்சிகள் வெற்றிபெற்று திமுக ஆட்சியை பிடித்தபோது 1969 குடியரசுத் தலைவர் தேர்தலில் வி.வி.கிரி வெற்றிபெற்று இந்திரா காந்தி கை தேசிய அரசியலில் ஓங்கிய பிறகு, கோரிபாளையத்தில் பெரிய சிலையை  அமைத்து, மூக்கையா தேவர் கருணாநிதி ஒத்துழைப்புடன் வி.வி.கிரியை வைத்து திறந்து தேவருக்கு குருபூஜையை நடத்தும் கலாசாரம் தொடங்கியது.

அந்த கலாசாரம் மெல்ல மெல்ல வளர்ந்தது. குறிப்பாக தென்தமிழகத்தில் திமுக பலவீனமாக இருந்ததால் கருணாநிதி, தன் தலைமையில் அக்கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் காமராஜருடன் முரண்பட்டு இருந்த முத்துராமலிங்க தேவர் பிம்பத்தை திமுகவுக்கு ஆதரவாக அறுவடை செய்ய முயன்றார். அது முக்குலத்தோர் மக்கள் மத்தியில் திமுகவுக்கு அபிமானத்தை ஏற்படுத்தியது.

அதன் வெளிப்பாடே 1971 பேரவைத் தேர்தலில் திமுக பெரிய வெற்றியைப்பெற இதுவும் ஒரு காரணமாக இருந்தது. 1977 இல் அதிமுக பிரிந்த பிறகு திண்டுக்கல் இடைத்தேர்தலில் கருணாநிதி, நான் வராவிட்டாலும் பச்சை தமிழன் காமராஜர் முதல்வராக வர வேண்டும் என பேசியதை எம்ஜிஆர், கருணாநிதி திராவிட இயக்கத்தில் இருந்து முரண்பட்டுவிட்டார் எனக் கூறி காமராஜரை ஆதரித்ததை மையமாக வைத்து முத்துராமலிங்க தேவர் ஆதரவு பிம்பத்தை தனக்கு சாதகமாக திருப்பினார்.

அதன்பிறகு 1977 பேரவைத் தேர்தல் முதல் டெல்டா பகுதி முக்குலத்தோர் திமுகவுக்கு ஆதரவாகவும்,   தென்மாவட்ட முக்குலத்தோர் அதிமுகவுக்கு ஆதரவாகவும் மாறினர்.  எம்ஜிஆர் மறைவுக்குப்பின் ஜெயலலிதா தலைமையில் அதிமுக வந்த பின்னர் சசிகலாவின் உழைப்பும் சேர்ந்த ஒட்டுமொத்த  முக்குலத்தோர்களும் அதிமுகவுக்கு ஆதரவாக மாறினர்.  அதுவரை இல்லாத அளவுக்கு அதிமுகவில்   முக்குலத்தோர் அதிக அதிகாரங்களை பெற்றனர். அதிக பட்சமாக 8 அமைச்சர்கள் மற்றும் முதல்வர் பதவி  என அதிகாரம் பெற்றனர்.

2006 முதல் 2011 காலகட்டத்தில் அதிமுக எதிர்கட்சி வரிசையில் இருந்து, அழகிரி தென்மாவட்டங்களில் கோலோச்சியபோது ஜெயலலிதா பசும்பொன்னில் என் சொந்த வீட்டிலேயே என்னை தாக்க முயற்சிப்பீர்களா எனக்கூறி அந்த சமுதாயத்தின் ஆதரவு எதிர்கட்சியாக இருக்கும்போதும் தன்னிடம்  தான் இருக்கிறது என உறுதிப்படுத்தினார்.

இதனால் அக்காலகட்டத்தில் எத்தனை முக்குலத்தோர்களுக்கு கருணாநிதி வாய்ப்பு அளித்தாலும் திமுகவுக்கு ஆதரவாக முக்குலத்தோர் ஆதரவு திரும்பவில்லை. ஜெயலலிதாவின் மிக நுட்பமான அரசியல் மதிநுட்பம் தான் இதற்கு காரணம்.

2011 முதல் 2012 காலகட்டத்தில் ஜெயலலிதா, சசிகலாவை அதிமுகவில் இருந்து விலக்கி வைத்தபோது முக்குலத்தோர் சமூகத்தில் அதிமுக செல்வாக்கு குறைந்திருந்தது. குறிப்பாக 144 தடை உத்தரவு போட்டு தேவர் குருபூஜை நடத்த கட்டுப்பாடுகள் விதித்தபோது, இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அதில் பங்கேற்றதன் விளைவு, தேவர் குருபூஜை தமிழக அரசியலில் முக்கிய நிகழ்வாக மாறியது.

இதைத்தொடர்ந்து முக்குலத்தோர் ஆதரவை அதிகரிக்க பன்னீர்செல்வத்துக்கு கூடுதலாக பொதுப்பணித்துறையையும், புதிதாக அமைச்சரவையில் விஜயபாஸ்கர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.   இவ்வாறாக தேவர் குருபூஜையும், அரசியலில் முக்குலத்தோர் முக்கியத்துவம் என்பதும் இரண்டர கலந்த கலவையானது. அதற்கு முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்காக தங்க கவசம் பரிசளித்திருந்தார்   ஜெயலலிதா.

இவ்வாறாக பல அரசியல் குருபூஜைகள் தமிழகத்தில் நடைபெறவுள்ளன.  இப்போது இந்த பூஜைக்கு அதிமுக சார்பில் வைக்கப்படும் தங்க கவசம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வைக்கப்படும் என அறிவிக்கப்பபட்டது. எடப்பாடி பழனிசாமியும் இங்கு வருவதை தவிர்த்துவிட்டர்.

அதிமுகவில் ஜாதி ரீதியான பிளவு இருப்பதை இது காட்டுகிறது. தேவர் குருபூஜையை பொறுத்தவரை கட்சிகளை கடந்து தேவர் சமூகத்தை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்வாக மாறியது.  திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பல தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இதில் பல்வேறு தேவர் அமைப்புகளும் பங்கேற்றன.

இந்நிலையில், இந்த முறை குருபூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்ற தகவல் வெளியான நிலையில் பல சமூகங்கள் தங்களது விழாக்களுக்கும் குறிப்பாக தேவேந்திரகுல வேளாளர் சமூகங்களின் அடையாளமாக திகழும் இம்மானுவேல் சேகரனார் நினைவிடம், முத்தரையர்களின் பெரும்பிடுகு முத்தரையர் விழா ஆகியவற்றுக்கும் வர வேண்டும் என்று அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

இந்த குருபூஜையில் தங்க கவசம் அதிமுக சார்பில் வைக்கப்படாதது அதிமுகவில் உள்ள பெரும்பாலான முக்குலத்தோர் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொண்டிருந்தாலும், அவர்களால் தங்களது சொந்த சமூக மக்களை சமாதானப்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகியிருப்பது தெரிகிறது.

காங்கிரசுடன் முரண்பட்டு தேசியமும், தெய்வீகமும் என இரு கண்கள் என்ற முழக்கத்துடன் ஆன்மிக பார்வையுடன் அரசியலில் ஈடுபட்ட தேவர் மீது தேவர் ஆதரவு பிம்பத்தை தங்களுக்கு சாதகமாக கொண்டுவர முயற்சி செய்கிறது. இந்த முறை அதிமுக சார்பில் தங்க கவசம் வைக்கப்படாத நிலையில், பாஜக முக்குலத்தோர் ஆதரவு அரசியலை எப்படி வெற்றிகரமாக செய்யப்போகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

ஏற்கெனவே பாஜகவுக்கு ஆதரவாக திரண்டு நிற்கும் ஹிந்து தேவேந்திரங்கள்,  நாடார்களின் ஆதரவையும் இழக்காமல் முக்குலத்தோர் வாக்குகளை எப்படி திரட்டப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  இந்த கவச அரசியல் யாரை காக்கப்போறது என்பதை தேர்தல் முடிவு தான் வெளிப்படுத்தும்.

அரசியல் ஆர்வமும், அரசியல் நுணுக்கமும் தெரிந்த சமூகமாகவே சுதந்திர இந்திய காலகட்டத்தில் இருந்தே இருந்து வருகின்றது. தென்மாவட்டங்களில் முக்கிய பொறுப்புகளில் முக்குலத்தோர் இருப்பதற்கு இதுவே முக்கிய காரணம்.

முக்குலத்தோர் வாக்கு யாருக்கு?

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, இந்த தேவர் குருபூஜையில் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளவில்லை. காரணம் அந்த சமூக மக்கள் மத்தியில் ஓ. பன்னீர்செல்வத்திற்கு தான் அதிக ஆதரவு இருக்கிறது என்பது தெளிவாகிறது. தினகரனுக்கு ஏற்கனவே இருந்த ஆதரவு நீடிக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டு எடப்பாடி பழனிச்சாமி ஆதாரவாளர்களான திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் போன்றோருக்கு அங்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.

மேலும் ஸ்டாலினை பொறுத்தவரை எப்படி இமானுவேல் தேவேந்திரர் ஜெயந்திக்கு உதயநிதி ஸ்டாலினை அனுப்பினாரோ அதேபோன்று தேவர் குருபூஜைக்கும் உதயநிதி ஸ்டாலினையே அனுப்பி உள்ளார். இதைத் தாண்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இந்த வாக்குகளை கவரவேண்டும் என்பதற்காக இந்த குரு பூஜையில் பங்கேற்றுள்ளார். பாஜக, பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் ஒரே அணையில் நிற்கும் போது தேவர் சமுதாய மக்கள் மொத்தமாக இந்த அணிக்கே வாக்களிக்க வாய்ப்பு அதிகம். இதை மையமாக வைத்தே ஓ.பன்னீர்செல்வம் இந்த முறை பத்தரை கிலோ எடை கொண்ட வெள்ளி கவசத்தை தேவர் அறக்கட்டளைக்காக வழங்கி உள்ளார்.