“தண்ணீர் குடிக்க வாயைத் திறந்தால் “ஈ” தான் வாய்க்குள் செல்கிறது..!”

கோவையில் ஈக்களால் அலறும் கிராமம்.. !

கோவையில் ஒரு கிராமம் முழுவதும் ஈக்கள் தொல்லை அதிகரித்திருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது பிள்ளையப்பன்பாளையம் ஊராட்சி. “அமைதி, வளம், வளர்ச்சி” என்ற சொல்லாடலை இந்த கிராமத்திற்குள் அப்பட்டமாய் பொருத்திவிடலாம். அந்த அளவுக்கு பசுமையையும், அமைதியான மக்களையும் கொண்டுள்ளது இந்த ஊர். காடுமேடாய் கிடந்த நிலங்களை இங்குள்ள மக்கள் விவசாய பூமியாக்கி தங்கள் வாழ்வாதாரத்திற்கு அடித்தளமிட்டு வாழ்ந்து வருகின்றனர்.

இதனிடையே சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு பிள்ளையப்பன்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கோழிப்பண்ணைகள் அமைக்கப்பட்டன. “நம்ம ஊர்ல வேலைவாய்ப்பு அதிகமாகும், குறிப்பா கோழிகள் மலிவு விலையில் கிடைக்கும்” என்று ஊர் மக்கள் பேசிக்கொண்டனர். அடுத்த சில ஆண்டுகளில் கோழிப்பண்ணைகள் அவர்களது வாழ்வையே புரட்டுப்போடும் அளவுக்கு மாறியிருக்கின்றன.

இங்குள்ள பெரும்பாலான கோழிப்பண்ணைகள் கறிக்கோழிப்பண்ணைகளாக அல்லாமல், முட்டை கோழிப் பண்ணைகளாக உள்ளன. கறிக்கோழிப்பண்ணைகளை காட்டிலும் மிகவும் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டியவை இத்தகைய பண்ணைகள். ஆனால், இங்குள்ள பண்ணைகளில் கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படுவதில்லை. பண்ணை வளாகத்தை தூய்மையாகப் பராமரிக்காததால், ஈக்கள் உற்பத்தி அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

சமீப நாட்களில் ஈக்கள் உற்பத்தி பன்மடங்கு பெருகி, பிள்ளையப்பன்பாளையம் ஊரையே ஆக்கிரமித்துள்ளது. எங்கும் “ஈ” எதிலும் “ஈ” என்பதைப்போல, சமையலறை, படுக்கையறை, பால் சொசைட்டி, பள்ளிக்கூடம், மளிகைக்கடை, வாகனங்கள் என்று ஈக்கள் மக்களை வாட்டி வதைத்து வருகின்றன இந்த ஈக்கள். மக்களை மட்டுமல்லாது மாட்டுக்கொட்டாயைக் கூட விட்டுவைக்காமல் ஈக்கள் மொய்க்கின்றன. இதனால் உடலை ஒரு நிமிடம் கூட அசைக்காமல் ஓரிடத்தில் படுக்க முடியவில்லை அந்த ஐந்தறிவு ஜீவன்களால்.

ஈ மொய்க்கும் உணவுகள் மற்றும் திண்படங்களை உட்கொள்வதால் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட்டு நோய்வாய்ப்படுவதாகவும், வாழ வழியில்லாமல் தவித்துவருவதாகவும் மக்கள் கூறும்போது நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் கதறல்களைக் கேட்க முடிந்தது.

இதுகுறித்து அங்கு வசிக்கும் மூர்த்தி என்பவர் கூறியதாவது:

ஈக்களால் வீடுகளில், கதவு மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைக்க முடிவதில்லை. ஒரு நிமிடம் திறந்து வைத்தாலே நூற்றுக்கணக்கான ஈக்கள் உள்ளே வந்து மாவு, உணவு தின்பண்டங்கள், தண்ணீர் ஆகியவற்றில் விழுந்து விடுகின்றன. எந்த உணவுப் பொருளையும் திறந்து வைக்க முடிவதில்லை. தண்ணீர் குடிக்க வாயைத் திறந்தால் “ஈ” தான் வாய்க்குள் செல்கிறது. சாப்பிடும் போதும் மிக கவனமாக சாப்பிட வேண்டியுள்ளது. இதுகுறித்து ஊராட்சி அலுவலகத்திலும், ஒன்றிய அலுவலகத்திலும், ஆட்சியர் அலுவலகத்திலும் பலமுறை புகார் மனு அளித்துவிட்டோம். அவ்வப்போது மருந்து தெளிக்க வருகிறார்கள். மருந்துகளுக்கு எந்த ஈ-யும் மசிவதில்லை. மற்றபடி எந்த நடவடிக்கையும் இல்லை.

ஈக்கள் தொல்லையால் சிலர் வீடுகளை காலி செய்து விட்டனர். எங்கள் ஊரில் உள்ள வீடுகளுக்கு உறவினர்களே வருவதில்லை. குடியிருப்புகளுக்கு அருகே அமைந்துள்ள கோழிப்பண்ணைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். எங்கள் கோரிக்கைக்கும், வேதனைக்கும் அரசுக்கு நிர்வாகம் செவிசாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக சாலை மறியல் செய்யத் திட்டமிட்டுள்ளோம். அப்படியும் எங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் ஊரையே காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு மொத்தமாக குடிபெயரவும் துணிந்துவிட்டோம். இவ்வாறு மூர்த்தி கூறினார்.

ஒரு சிறிய “ஈ” தானே என்று எண்ணி கண்கொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள் பிள்ளையப்பன்பாளையம் கிராமத்திற்கு ஒருமுறை ‘விசிட்’ அடித்தால் இந்த மக்களின் துயரத்தை விசாரணைகள் இன்றி உணர முடியும். வாழ்வாதற்கான அடிப்படை வசதிகள் இருந்தும், லாப நோக்கில் செயல்படும் சில தனி நபர்களால் ஒரு கிராமமே துயரில் ஆழ்ந்துள்ளது. இந்த பிரச்சனையில் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சாமானிய மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Story: Soundhar Mohan