பருவமழை: முதல் ரவுண்டில் வெற்றி!

வழக்கமாக தீபாவளி சமயத்தில் பெய்யும் மழை, அதாவது அக்டோபர் மாதத்தில் பெய்யும் மழையானது, இந்த முறை சில வாரங்கள் கழித்து நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கி இருக்கிறது. பருவமழை என்பது இயற்கையான ஒரு நியதி என்றாலும் இப்போதெல்லாம் அப்படி குறித்த காலத்தில் மழையும் வருவதில்லை. நாமும் எளிதாக கடந்து போக முடிவதில்லை.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சமயத்தில் ஏதாவது ஒரு பகுதியில் ஏதோ ஒரு பாதிப்பு, ஏதோ ஒரு வசதிக் குறைவு, சில நேரங்களில் சில உயிர்களை பறிகொடுப்பது கூட நடக்க வாய்ப்பிருக்கிறது என்ற சூழல் இருக்கின்றது. இந்த நிலையில் தான் தற்போது ஆட்சியில் இருக்கின்ற திமுக அரசு தனது வாக்குறுதிகளில் ஒன்றாக மழைநீர் தேங்கி சேதாரம் விளைவிப்பதை தடுப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப் போவதாக அறிவித்தது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கி இருக்கிறது. அது குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் சென்ற ஆண்டு மழைநீர் தேங்கிய பல இடங்களில், தற்போதைய மழையில் மழைநீர் தேங்கவில்லை. இந்த முறை நுங்கம்பாக்கம் பகுதியில் பெய்த மழையின் அளவு சுமார் 11 சென்டிமீட்டர் ஆகும். இவ்வாறு இந்த ஆண்டு சென்னையில் அதிகம் மழை பெய்த பொழுதும் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை.

இதற்கு காரணம் தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்று தாராளமாக கூறலாம். சென்ற ஆண்டில் எங்கெல்லாம் மழைநீர் தேங்குகிறது என்று பார்த்து அவற்றை பதிவு செய்து கொண்டனர். அந்த இடங்களில் எல்லாம் இந்த முறை மழைநீர் தேங்காதவாறு வடிகால் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இணைப்பு குழாய்கள், வடிகால் வசதிகள் என்று பல பணிகள் விரைந்து செய்து முடிக்கப்பட்டன.

அதன் பலனாக ஓரளவுக்கு மழை பெய்த பொழுதும் பல இடங்களில் உடனுக்குடன் மழை நீர் வடிகால்களில் நீர் வடிந்தது. மழை நீர் தேங்குவதும், பொது மக்களுக்கு சிரமம் ஏற்படுவதும் தவிர்க்கப்பட்டது. இன்னும் சில இடங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி இருந்தபொழுதும் அரசு இயந்திரம் விரைவாக செயல்பட்டு மோட்டார்கள் மூலம் மழைநீரை இறைத்து வெளியேற்றியது பலராலும் பாராட்டப்பட்டது. பேஸ்புக்கில் இது குறித்த பதிவுகள் வரத் தொடங்கியுள்ளன.  தொலைக்காட்சிகளிலும் இது குறித்த செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கூடவே அமைச்சர்கள் மா. சுப்ரமணியம், சேகர் பாபு ஆகியோர் அதிகாரிகளுடன் இணைந்து களத்தில் இறங்கியது கூடுதல் பலமாக அமைந்தது. முதலமைச்சர் ஏற்கனவே ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதிகார மட்டத்தில் செய்யும் சிறிய தவறுகள் கூட பெரிய கெட்ட பெயரை கொண்டு வந்து விடும். அவ்வாறு நடக்கக்கூடாது என்று அறிவித்திருந்தார்.

என்றாலும் இது முதல் கட்டம் தான். போகப் போக மழை வலுக்கக்கூடும். இரண்டாவது முறை பெய்த மழையில் சென்னை பிராட்வேயில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் நெடுநேரம் நீடித்தது. எனவே இன்னும் கவனமாக பணி செய்ய வேண்டிய நிலையில் அதிகாரிகளும் அரசும் இருக்கிறார்கள். ஆனாலும் கண்டிப்பாக இது பாராட்டப்பட வேண்டிய பணி என்பதில் ஐயமில்லை.

இவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் பல சேதங்கள் தவிர்க்கப்படுகின்றன. குறிப்பாக மக்களின் உயிர், உடமைகள் பாதுகாக்கப்படுகின்றன. மழைநீரால் பாதிக்கப்படும் மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை, மற்ற ஏற்பாடுகள், நிவாரணம், மீட்பு நடவடிக்கை என்று பல்வேறு சிக்கல்கள் இதில் அடங்கியுள்ளன. அவற்றை எவ்வளவு குறைக்க முடியுமோ, சேதங்களை தவிர்க்க முடியுமோ அதுவே அறிவுடைமையாகும்.

இந்த பணி சென்னையில் இப்பொழுது தொடங்கி இருக்கிறது. இது தமிழகம் முழுவதும் பரவவேண்டும். அது கடற்கரை ஓரப்பகுதிகள் தொடங்கி கோவை போன்ற நகரங்கள் வரை இந்த முன்னெச்சரிக்கை பணிகள் செய்யப்பட வேண்டும். இதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளும், இழப்புகளும் தவிர்க்கப்படும்.

குறிப்பாக நமது கோவை நகரில் இது போன்ற பருவமழை குறித்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் அவசியம். கோவையில் அவிநாசி சாலை மேம்ம்பாலம், வடகோவை மேம்பாலம், கிக்கானி பள்ளி ரயில் பாலம், காளீஸ்வரர் ரயில் பாலம் என்று எல்லா தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்பது வாடிக்கையாகிவிட்டது. அந்த நேரங்களில் மொத்த நகரமும் ஸ்தம்பித்து போய்விடுகிறது. இதுபோக ஏற்கனவே பல இடங்களில் சாலைகள் குன்றும் குழியுமாக உள்ளன. அவற்றிலும் மழைநீர் தேங்குவது வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது. இவற்றுக்கு முன்னுரிமை அளித்து சாலைகளை சீர் செய்ய வேண்டும். குழிகளை மூடி மழைநீர் தேங்காத வண்ணம் செய்யவேண்டும்.

குறிப்பாக மழைக்காலத்துக்கு சில நாட்கள் முன்னதாகவே பாலங்கள், குடிநீர் இணைப்புகள், மற்ற பொது கட்டுமான பணிகளுக்கு குழி தோண்டுவதை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே குழு இருந்தால் அவற்றை மூடி இந்த பருவ மழை பொழியும் காலங்களில், இதனால் ஏற்படும் சேதங்களை கட்டுப்படுத்த வேண்டும். ஏற்கனவே உள்ள குழிகளை உடனடியாக மூடி சீர் செய்யவேண்டும். இது போன்ற சீரமைப்பு பணிகளை செய்தால் கோவை நகரம் தொழில் நகரமாக மட்டுமல்லாது, மக்களுக்கு பாதுகாப்பான எழில் நகரமாகவும் திகழும்.